Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

அ.தி.மு.கவில் நானா? -கொந்தளிக்கும் விஜயதரணி

காங்கிரஸ் கட்சியின் ஐந்து எம்.எல்.ஏக்கள் அ.தி.மு.கவில் ஐக்கியமாக இருப்பதாக வெளியான தகவல்களால், காங்கிரஸ் கூடாரமே கலகலத்துக் கிடக்கிறது. 'சட்டமன்ற காங்கிரஸ் கட்சி தலைவர் பதவி எனக்குக் கிடைக்க விடாமல் இருப்பதற்காக சிலர் செய்யும் சதி' எனக் கொந்தளித்தார் எம்.எல்.ஏ விஜயதரணி.

அ.தி.மு.க அரசின் பதவியேற்பு வைபவங்கள் நிறைவடைந்துவிட்டன. விரைவில் மிகப் பெரிய எதிர்க்கட்சியான தி.மு.கவையும், அதற்கு அடுத்தபடியாக இருக்கும் காங்கிரஸ் கட்சியையும் ஆளுங்கட்சி நேருக்கு நேராக சந்திக்க இருக்கிறது. இந்நிலையில், ' காங்கிரஸ் எம்.எல்.ஏ விஜயதரணி தலைமையில் ஐந்து எம்.எல்.ஏக்கள் அ.தி.மு.கவில் சேர இருப்பதாக' சிலர் கொளுத்திப் போட்டுள்ளனர்.

விஜயதரணியிடம் பேசினோம். " இப்படி வதந்தி பரப்புபவர்கள் அதற்குரிய விளைவை அனுபவிப்பார்கள். சட்டமன்றத்தில் தி.மு.கவுக்கு அடுத்தபடியாக பெரிய எதிர்க்கட்சியாக இருக்கிறோம். இந்த நேரத்தில் எனக்கு சட்டமன்ற காங்கிரஸ் கட்சித் தலைவர் பதவி கிடைத்துவிடக் கூடாது என்பதற்காக சிலர் இதுபோன்று அவதூறு பரப்புகிறார்கள். இவர்கள் மீது சட்டரீதியாக கடுமையான நடவடிக்கை எடுக்க இருக்கிறேன்" என ஆவேசப்பட்டவரிடம்,

முதலமைச்சர் பதவியேற்பு விழாவில் பங்கேற்க உங்களுக்கு அழைப்பு விடுக்காததில் வருத்தமா?

அப்படியெல்லாம் எந்த வருத்தமும் இல்லை. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறோம். மக்களுக்கான அடிப்படை பிரச்னைகளைத் தீர்ப்பதில்தான் கவனம் செலுத்த வேண்டும். பதவியேற்பு விழாவுக்கு அழைக்காதது பற்றி எந்தக் கவலையும் இல்லை" என்றவர், " முதலமைச்சராக பதவியேற்றதும் டாஸ்மாக் கடைகளின் நேரத்தைக் குறைப்பது, 500 கடைகளை மூடுவது என அறிவிப்பை வெளியிட்டிருக்கிறார் முதல்வர். 500 கடைகளை மூடுகிறார் சரி. அது எந்தெந்த கடைகள் என்ற பட்டியலை வெளியிட்டிருக்க வேண்டாமா?

இனிமேல் புதிதாக 500 கடைகளைத் திறக்க மாட்டோம் என்ற உத்தரவாதத்தை அவர் அளிக்கவில்லை. அப்படி அவர் உத்தரவாதம் கொடுத்தால்தான் உண்மையான நடவடிக்கையாக இருக்கும். அதேபோல், பயிர்க்கடன் தள்ளுபடி என அறிவித்திருக்கிறார். தமிழ்நாட்டில் பெரும்பாலும் நகைக்கடனுடன் கூடிய பயிர்க்கடனைத்தான் விவசாயிகள் வாங்கியிருக்கிறார்கள். இவற்றைத் தள்ளுபடி செய்தால்தான், விவசாயிகள் மகிழ்ச்சியடைவார்கள். தாலிக்கு எட்டு கிராம் தங்கம் அறிவிப்பு வரவேற்க வேண்டியதுதான். ஆனால், அந்த தங்கத்தை வாங்குவதற்கு நிறைய நடைமுறைகளை வைத்திருக்கிறார்கள். உண்மையான ஏழை தம்பதிகளுக்கு தங்கத்தின் பலன் போய்ச் சேர வேண்டும்" என்றார் நிதானமாக.

சட்டசபை தொடங்குவதற்குள்ளேயே அதிரடிகளை வீச ஆரம்பித்துவிட்டார் விஜயதரணி. சட்டமன்றம் என்ன பாடுபடப் போகிறது? என்பதை வரும் நாட்களில் பார்க்கலாம்.

ஆ.விஜயானந்த்

எடிட்டர் சாய்ஸ்

MUST READ