Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

திருப்பரங்குன்றம் தொகுதி அ.தி.மு.க. எம்.எல்.ஏ. சீனிவேல் காலமானார்!

மதுரை: மதுரை திருப்பரங்குன்றம் தொகுதியில் இருந்து சமீபத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட அ.தி.மு.க. எம்.எல்.ஏ. சீனிவேல் இன்று காலை மாரடைப்பால் காலமானார்.

கடந்த சில நாட்களாக உடல்நலக் குறைவு காரணமாக மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று காலை உயிரிழந்தார்.

சமீபத்தில் நடந்து முடிந்த தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் அ.தி.மு.க. சார்பில், முன்னாள் எம்.எல்.ஏ.வான 65 வயது சீனிவேல் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். தன்னை எதிர்த்து போட்டியிட்ட தி.மு.க. வேட்பாளர் மணிமாறனைவிட 22,992 ஓட்டுக்கள் கூடுதலாக பெற்று வெற்றி பெற்றார்.

65 வயதாகும் எஸ்.எம்.சீனிவேல், கடந்த 25 ஆண்டுகளாக அ.தி.மு.க. ஒன்றிய செயலாளராக இருந்து வந்தார். 2001-ம் ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க. சார்பில் திருப்பரங்குன்றம் தொகுதியில் போட்டியிட்டு, வெற்றி பெற்ற சீனிவேல், 2006-ம் ஆண்டு வரை திருப்பரங்குன்றம் தொகுதி எம்.எல்.ஏ.,வாக இருந்து வந்தார். தற்போது எம்.ஜி.ஆர்.,மன்ற மாவட்ட செயலாளராக இவர் இருந்து வருகிறார். 2016 ம் ஆண்டு தமிழக சட்டசபை தேர்தலில், மதுரை மேயர் உள்ளிட்ட பலருக்கும் திருப்பரங்குன்றம் தொகுதியில் போட்டியிட சீட் கொடுக்கப்படலாம் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், கட்சி தலைமை சீனிவேலுக்கு சீட் கொடுத்தது.

மீண்டும் சீட் கிடைத்ததால் பெரும் ஆர்வத்துடன் சீனிவேல் தனது உடல்நிலையையும் பொருட்படுத்தாமல் ஆதரவாளர்களுடன் தீவிரப் பிரசாரத்தில் ஈடுபட்டார். இதனால், அவரது உடல் நிலை பாதிக்கப்பட்டது. மே 16-ம் தேதி தேர்தல் நடந்த நிலையில், மே 17-ம் தேதி சீனிவேலுக்கு திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டது. மாரடைப்பு, சிறுநீரக பாதிப்பு உள்ளிட்ட பிரச்னைகளால் மதுரை சொக்கிகுளத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அங்கு அவரது நிலையில் எந்தவித முன்னேற்றமும் ஏற்படாததால், இரண்டு நாள் சிகிச்சைக்கு பின்னர் மேல் சிகிச்சைக்காக, மதுரையில் உள்ள மற்றொரு தனியார் மருத்துவமனைக்கு சீனிவேல் மாற்றப்பட்டார். இங்கு கோமா நிலையில் இருந்து வந்த சீனிவேலுக்கு, இன்று காலை திடீரென மீண்டும் மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. இவரை பரிசோதித்த டாக்டர்கள், 6.20 மணிக்கு அவர் உயிரிழந்து விட்டதாக அறிவித்தனர்.

தி.மு.க. சார்பில் தன்னை எதிர்த்து போட்டியிட்ட சேடப்பட்டி முத்தையாவின் மகன் மணிமாறனைவிட 22,992 வாக்குகள் அதிகம் பெற்ற சீனிவேல், தான் பெற்ற வெற்றியை கடைசி வரை அறியாமல் உயிரிழந்துள்ள பரிதாப நிலை, பலரையும் வேதனை அடைய வைத்துள்ளது.

எடிட்டர் சாய்ஸ்

MUST READ