Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

3 சமூகத்தினரை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க அனுமதி: பிரதமருக்கு ஜெயலலிதா நன்றி!

 

சென்னை: நரிக்குறவன், குருவிக்காரன் மற்றும் மலையாளி கவுண்டர் சமுதாயத்தினரை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியதற்காக பிரதமர் நரேந்திர மோடிக்கு, முதல்வர் ஜெயலலிதா நன்றி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில், ''தமிழ்நாட்டில் உள்ள நரிக்குறவன், குருவிக்காரன் மற்றும் மலையாளி கவுண்டர் சமுதாயத்தினரை பழங்குடியினர் பட்டியலில் சேர்ப்பதற்கு மத்திய அமைச்சரவை இன்று ஒப்புதல் அளித்துள்ளது என்ற செய்தி எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது.

தமிழ்நாடு அரசின் கோரிக்கைகளின் அடிப்படையில் லோக்கூர் கமிட்டி மற்றும் நாடாளுமன்றத்தின் கூட்டுக்குழு ஆகியவை நரிக்குறவன் மற்றும் குருவிக்காரன் இனத்தவர்கள் பழங்குடியினர் பட்டியலில் சேர்க்கப்பட வேண்டும் என்ற பரிந்துரையை சில ஆண்டுகளுக்கு முன்னேரே அளித்திருந்தது. மத்திய தலைமைப் பதிவாளரும் இந்த கருத்துருவுக்கு ஒப்புதல் அளித்ததன் அடிப்படையில் இதற்கு தேவையான நடவடிக்கைகளை மத்திய அரசு உடனடியாக எடுக்க வேண்டும் என 2012-ம் ஆண்டு ஜுலை மாதம் எனது தலைமையிலான அப்போதைய தமிழ்நாடு அரசு, மத்திய அரசுக்கு கடிதம் ஒன்றை எழுதியது. மாநில அரசின் பரிந்துரையின் அடிப்படையில் மத்திய அரசின் பழங்குடியின அமைச்சகம் நரிக்குறவன் மற்றும் குருவிக்காரன் இனத்தவரை பழங்குடியினர் பட்டியலில் சேர்ப்பதற்காக, மத்திய அமைச்சரவையின் ஒப்புதலை பெறுவதற்கான குறிப்பு ஒன்றை தயாரிப்பதாக 2013-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் தெரிவித்தது. மத்திய பழங்குடியினர் அமைச்சகம் 2013-ம் ஆண்டு ஜுலை மாதம் கேட்டுக் கொண்டதற்கிணங்க நரிக்குறவன் மற்றும் குருவிக்காரன் என்பது இந்தி மொழியில் எவ்வாறு எழுதப்பட வேண்டும் என்பது பற்றியும் மத்திய அரசுக்கு எனது தலைமையிலான அரசால் தெரிவிக்கப்பட்டது.

நாடோடிகளாக வாழும் நரிக்குறவர்கள் மிகவும் ஏழ்மை நிலையில் உள்ளவர்கள் எனவும், அவர்கள் பழங்குடியினர் பட்டியலில் சேர்க்கப்பட வேண்டியவர்கள் எனவும், அவ்வாறு சேர்க்கப்படுவதன் மூலம் அவர்களுக்கு உரிய அரசியல் சட்டப் பாதுகாப்பும், நல்வாழ்வு நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டால் இந்த இன மக்கள் ஏனைய சமுதாயத்தினருக்கு இணையாக, கண்ணியமாக வாழ வழிவகை ஏற்படும் என நான் அப்போதைய பிரதமருக்கு 26.8.2013 அன்று ஒரு கடிதம் எழுதினேன். பிரதமரை தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள உத்தரவிடுமாறும், அரசமைப்பு சட்டத்தில் திருத்த நடவடிக்கைகளை மேற்கொள்ளத் தேவையான நடவடிக்கைகள் எடுக்குமாறும் நான் அந்தக் கடிதத்தில் கேட்டுக் கொண்டேன். அதன் பின்னர், எனது தலைமையிலான தமிழ்நாடு அரசு இது தொடர்பாக தொடர்ந்து மத்திய அரசை வற்புறுத்தி வந்தது.

இன்று (25.5.2016) நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் நரிக்குறவன், குருவிக்காரன் மற்றும் மலையாளி கவுண்டர் இன மக்களை பழங்குடியினர் இனப் பட்டியலில் சேர்ப்பதற்கான ஒப்புதலை மத்திய அரசு அளித்துள்ளது. இதனை நடைமுறைப்படுத்துவதற்கான அரசமைப்பு சட்ட திருத்தங்களை நாடாளுமன்றத்தில் மத்திய அரசு கொண்டு வந்து அது நிறைவேற்றப்பட்ட பின் நரிக்குறவன், குருவிக்காரன் மற்றும் மலையாளி கவுண்டர் இன மக்கள் பழங்குடியினர் பட்டியலில் சேர்க்கப்பட்டு, இந்த இன மக்களும் நற்பயன்களைப் பெற்று கண்ணியமாக வாழ வழிவகை ஏற்படும். எனது தலைமையிலான தமிழ்நாடு அரசு மேற்கொண்ட நடவடிக்கைகளின் காரணமாக நரிக்குறவர், குருவிக்காரர் இன மக்கள் வாழ்வு வளம் பெறும் என்பதில் நான் மிகுந்த மன நிறைவு அடைகிறேன்.

கடந்த பல ஆண்டுகளாக நிலுவையில் இருந்த மாநில அரசின் கோரிக்கையை நிறைவேற்றும் வகையில் மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியமைக்கு பிரதமருக்கு எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்'' எனக் கூறியுள்ளார்.

எடிட்டர் சாய்ஸ்

ஜெர்சி மாடுகள், பிரேசில் காபி, மருத்துவமனை உறுதி! ஜெயலலிதா பற்றி தோழியின் நினைவலைகள்
placeholder

அதே மாதிரி ஜெயலலிதா தன்னுடைய 10 வயதில் சிவாஜி கணேசன் முன்னிலையில் மயிலாப்பூரில் செய்த நடன அரங்கேற்றப் படங்கள் முதல் அதற்குப் பிறகான அவரது சின்ன வயசுப் படங்களை நாங்கள் தொகுத்திருந்தோம். அதை 2012 ம் ஆண்டு, எனக்கு அவரை சந்திக்கும் வாய்ப்புக் கிடைத்த போது கொடுத்தேன். அதைப் பார்த்து ரொம்ப சந்தோஷமாகிட்டாங்க. அந்தப் படத் தொகுப்பை, தன்னோட ஹேண்ட் பேக்ல வச்சுக்கிட்டாங்க. பத்திரமா வைத்துக் கொள்வதாகவும் சொன்னாங்க. சினிமாக்காரங்க என்றால் ஈஸியாக அணுகலாம் என்கிற திரையை உடைத்து, அவங்க தனி ரூட்டைப் போட்டு, அதை மத்தவங்க ஃபாலோ பண்ற அளவுக்கு வாழ்ந்து காட்டினாங்க. குறிப்பா, சினிமா விழாக்கள், நிகழ்ச்சிகளுக்கு போக மாட்டாங்க. 

அம்மாவிடமிருந்து போன் வந்தால்...!? - உருகும் வீணை காயத்ரி
placeholder

''சமீபத்தில் கொலை மிரட்டல் விட்டப் பையனால் அம்மாவை சந்திக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. கடந்த ஜூலை 27-ம் தேதி சி.எம் ஆபீஸ்ல இருந்து போன் வந்தது. அம்மா உங்களை உடனே வரச்சொன்னதா சொன்னாங்க. நான் கொஞ்சமும் யோசிக்காமல் போய் நின்னேன். பொதுவாகவே நானும், அவங்களும்தான் தனியாகத்தான் பேசிப்போம். ஆனா, அன்றைக்கு, எல்லா அதிகாரிகளும், இருந்தாங்க. அவங்க முன்னாடி, 'எப்படி இருக்கீங்க' என கேட்டார். நான் பதில் சொல்லிவிட்டு, 'நவம்பர் மாதத்தோடு என்னோட டர்ன் முடியுது' என சொன்னேன். இதற்கு அவர், எல்லோருடைய முன்னிலையிலும், அடுத்த மூன்று வருஷத்துக்கும் நீங்களே துணை வேந்தரா இருங்க என சொல்லிவிட்டு, அவருக்கு பின்னால் இருக்கும் எல்லோரையும் பார்த்து மறுபடியும்  இதையே சொன்னார். அப்போதுதான் அவர்கிட்ட, 'நான் உங்களை சந்திக்க இரண்டு வருஷமாக முயற்சி செய்துட்டு இருந்தேன். இந்த கொலை மிரட்டல் காரணமாகத்தான் உங்களை சந்திக்கிற வாய்ப்பு கிடைச்சிருக்கு, நான் தனி மனுஷியாக இசை பல்கலைக்கழகத்தை நடத்தி வருகிறேன்' என சொன்னேன். உடனே, சம்பந்தப்பட்டவர்களை அழைத்து, அவங்களுக்குத் தேவையான எல்லா உதவிகளையும் செய்து கொடுங்க என சொன்னார்.  'அடுத்த முறைப் பார்க்கும்போது உங்க முகத்துல சிரிப்பை மட்டும் தான் பார்க்கணும்' என ஆறுதல் சொன்னாங்க. அந்த வார்த்தை இன்னும் என் காதில் கேட்டுட்டே இருக்கு. அதுதான் நான் அவங்களை கடைசியாகப் பார்த்தது.  அதற்குப் பிறகு அவரை பார்க்க முடியவில்லை. அவர் சொன்னது போல அதற்கான வேலைகள் நடந்து கொண்டிருக்கும்போதே அம்மா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுட்டாங்க. நான் இப்போ அடுத்த ஆர்டருக்காக காத்திட்டு இருக்கேன். இன்னும் ஆர்டர் என் கைக்கு வரவில்லை''

MUST READ