Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

ஜெயலலிதா கேபினெட்டின் மினி ட்ரெய்லர்-1

முதல்வர் ஜெயலலிதாவின் முகத்தில் அத்தனை மலர்ச்சி. தேர்தல் பிரசார களைப்பு எல்லாம் பறந்துபோய், ஃப்ரெஷ்ஷாக அடுத்த சுற்றுக்கு ரெடியாகி விட்டார். முதல்வராக பதவியேற்ற அன்றே விவசாயக்கடன் ரத்து, டாஸ்மாக் நேரம் குறைப்பு, 100 யூனிட் வரை மின்சாரம் இலவசம்... என சிங்கிள் எடுக்காமல் சிக்ஸர்களை விளாசியிருக்கிறார். ஜெயலலிதாவோடு சேர்ந்து பதவியேற்றிருக்கும் 28 அமைச்சர்கள் பதவி ஏற்றனர். அவர்களில் 15 பேர் சீனியர்ஸ். 13 பேர் புதியவர்கள். செகண்ட் இன்னிங்ஸ் ஆடும் ஜெயலலிதா கேபினெட்டின் மினி ட்ரெய்லர் இங்கே!

ஜெயலலிதா - முதலமைச்சர்

1977-ம் ஆண்டு தொடங்கிய இவரது அரசியல் பயணம் 68 வயதில் அவருக்கு மீண்டும் ஒரு அரசியல் படகில் முதல்வராகப் பயணிக்கும் வாய்ப்பினை வழங்கியுள்ளது. 1991-ம் ஆண்டில் முதன்முதலில் தமிழக முதல்வராக பொறுப்பேற்ற ஜெயலலிதா, மீண்டும் 6-வது முறையாக முதல்வராகப் பொறுப்பேற்றுள்ளார். முதல்கட்டமாக 29 அமைச்சர்களுடன் ஆட்சியில் அமர்த்தப்பட்டிருக்கின்றார். ஒரு நடிகையாக தன் வாழ்க்கையை தொடங்கிய ஜெயலலிதாவின் இந்த நீண்ட பயணம் இப்போது இந்த நிலையை எட்டியதற்கு காரணம் அவருடைய அயராத உழைப்பும் அர்பணிப்பும்தான். எம்.ஜி.ஆரால் கட்சிக்குள் வந்தவர், கொள்கைபரப்பு செயலாளராக வீதியெங்கும் அலைந்து கட்சிக்காக உழைத்திருக்கிறார். எம்.ஜி.ஆர் மறைவிற்கு பிறகு கட்சி சிதறுண்டபோது அதை ஒன்றிணைத்து மீண்டும் அ.தி.மு.க.விற்கு உயிர்கொடுத்தார்.

முதன்முதலாக ஆட்சிக்கட்டிலில் அமர்ந்த போது செய்த பிழைகளை ஒவ்வொரு முறையும் திருத்திக்கொண்டு சரிசெய்வது அவருடைய மிகப்பெரிய பலம். 2011-ல் வெற்றிபெற்று நிறைகள் அதிகமில்லையென்றாலும் பெரிய குறைகள் சொல்லமுடியாதபடி ஆட்சி நடத்தியதே இரண்டாவது இன்னிங்ஸுக்கு காரணம். எந்நேரமும் தன்னை சுற்றி ஒரு நெருப்பு வளையத்தை உருவாக்கிக்கொண்டு யாரையும் நெருங்க விடாமல் இருப்பது, ஊடகங்களை சந்திக்க மறுப்பது, தேர்தலுக்கு மட்டுமே வெளியே வருவது, எல்லா முடிவுகளையும் தானே எடுப்பது, எந்நேரமும் அமைச்சர்களை மாற்றிக்கொண்டிருப்பது, அவ்வப்போது கொடநாட்டிற்கு கிளம்பிவிடுவது என அவருடைய முந்தைய ஆட்சியின் குறைகள் ஏராளமாக இருக்கிறது. இந்த முறை அதையெல்லாம் சரிசெய்துவிட்டு மக்கள் பணியே மகத்தான பணி என்று களம் காணுவார் என எதிர்பார்க்கலாம்.

ஓ.பன்னீர்செல்வம்
- நிதித்துறை

இரண்டு முறை முதல்வராக இருந்தாலும் இந்த முறை கொஞ்சம் டென்ஷன் மோட்தான்! தேர்தலுக்கு முன் அவரைப்பற்றி வந்த சர்ச்சை செய்திகள் அனைத்தும் களத்தில் அவருக்கு எதிராக அலையடித்தன. அதனால் பன்னீரின் மகன்கள், மைத்துனன்கள், சம்பந்தி வீட்டார், மருமகன், பேரன், பேத்திகள்... என்று 20-க்கும் மேற்ப்பட்டோரை வீதியில் இறக்கி வாக்கு கேட்க வைத்தார். வாக்கு எண்ணிக்கை அன்று காலையில் பன்னீர், பெரியகுளம் மலையில் உள்ள காசி விஸ்வநாதர் கோவிலுக்கு சென்று சிவனை வெகுநேரம் வணங்கி நின்றதே இந்த வெற்றி எந்தளவுக்கு முக்கியத்துவம் வாய்ந்தது என்பதை உணர்த்தியது. எது எப்படியோ ஜெயலலிதா தனக்கு வைத்த சோதனையில் வென்று மீண்டும் அதே நிதித்துறையை வாங்கிவிட்டார்.

சென்னையில் வசிக்கும் பன்னீருக்கு பாக்கெட் பால் ஒத்துக்கொள்ளாது. அதனால் காங்கேயத்தில் இருந்து நாட்டு பசு ஒன்றை வாங்கி அரசு பங்களாவானா தென்பெண்ணை இல்லத்தில் வளர்த்து வருகிறார். அதுதான் பன்னீரின் பேரக்குழந்தைகள் முதல் அனைவருக்கும் பால் கொடுக்கும் கோமாதா. பன்னீர் தன் கையில் சிங்கம் பொறித்த மோதிரத்தை அணிந்து இருந்தார். 2-வது முறை முதல்வர் ஆனதும் திருப்பதி வெங்கடாஜலபதி உருவத்தை வைரத்தில் செய்து மோதிரமாக அணிந்து இருக்கிறார். அந்த மோதிரம் திருப்பதி தேவஸ்தானத்தில் வைத்து சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. வெற்றியை அள்ளித்தருவது இதுதான் என நம்புகிறார். பன்னீருக்கு அவரது அம்மா பழனியம்மாள் என்றால் உயிர். ‘பழனியம்மாள்’ என்கிற பெயரில் யாராவது முதியவர் வந்தால் அவர்களுக்கு ஆயிரம் ரூபாய் கொடுத்தனுப்புவது அவரின் வழக்கம்.

திண்டுக்கல் சீனிவாசன் - வனத்துறை

1973-ல் எம்.ஜி.ஆரால் அ.தி.மு.க ஆரம்பிக்கப்பட்டு முதன்முதலாக போட்டியிட்ட தொகுதி திண்டுக்கல். அப்போது திண்டுக்கல் தொகுதியில் அ.தி.மு.க சார்பாக போட்டியிட்டவர் மாயத்தேவர். அவருக்கு அஸிஸ்டென்டாக கட்சிக்குள் வந்தவர்தான் திண்டுக்கல் ஶ்ரீனிவாசன். கருத்து வேறுபாடு காரணமாக மாயத்தேவர் அ.தி.மு.க.விலிருந்து பிரிந்தபோதும்... திண்டுக்கல் சீனிவாசன் மட்டும் அ.தி.மு.க.வையே கெட்டியாக பிடித்துக்கொண்டு எம்.ஜி.ஆருடனேயே இருந்தார். அந்த விசுவாசத்துக்கு அவருக்கு வழங்கப்பட்ட வாய்ப்புகள் மிக மிக அதிகம். 1989-ல் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட்டு வெற்றிபெற்றார். அதற்கு பிறகு 1991, 1998, 1999 என என மூன்று முறை திண்டுக்கல் நாடாளுமன்ற தொகுயில் எம்.பி.யாக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார். நத்தம் விஸ்வநாதனை கட்சிக்குள் அழைத்து வந்தவர் இந்த திண்டுக்கல் சீனிவாசன்தான். ஒருகட்டத்தில் நத்தம் விஸ்வநாதன் இவரையே ஓவர் டேக் செய்து கட்சியில் முன்னேறி யாரும் நினைத்து பார்க்க முடியாத வளர்ச்சியை அடைந்தார். ஆனாலும் தனக்கான நேரம் வரும் என அமைதியாக காத்திருந்தவருக்கு கிடைத்திருக்கும் பரிசுதான் இந்த வனத்துறை அமைச்சர் பதவி.

எடப்பாடி பழனிசாமி - பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலைத் துறை

கடந்த ஆட்சியில் பரபரப்பாக பேசப்பட்ட அ.தி.மு.க.வின் ஐவரணியில் ஒருவர் எடப்பாடி பழனிச்சாமி. விவசாயக் குடும்பத்தில் பிறந்தவர், பி.எஸ்.சி படித்து முடித்தபின் சர்க்கரை மூட்டை வியாபாரத்தை தொழிலாக செய்து கொண்டிருந்தார். 1974-ல் அ.தி.மு.க.வில் சேர்ந்தவர், 1989-ல் அ.தி.மு.க.வின் ஜெயலலிதா அணி சார்பில் எடப்பாடி தொகுதியில் நின்று எம்.எல்.ஏ ஆனார்.

செல்லூர் ராஜு
- கூட்டுறவுத்துறை

மலையாள பகவதியின் அருளால்தான் தனக்கு மீண்டும் அமைச்சர் பதவி கிடைத்திருப்பதாக நம்புகிறார் செல்லூர் ராஜூ. அந்த அளவுக்கு பக்திமான். மலையாள மாந்த்ரீகர்களையெல்லாம் அடிக்கடி வீட்டிற்கு அழைத்து வந்து பூஜைகள் செய்பவர். அதற்கு காரணம் இவர் மனைவி கேரளாவை பூர்வீகமாக கொண்டவர். கடந்த ஆட்சி காலத்தில் ஐந்து வருடங்கள் ஒரே துறையில் அமைச்சராக இருந்து சாதனையை படைத்தவர்! பூர்வீகம் உசிலம்பட்டி. மதுரை யானைக்கல் ஏரியாவில் ராஜூவின் பெற்றோர் பழக்கடை வைத்திருந்தார்கள். அப்போதைய அ.தி.மு.க மாவட்டச்செயலாளர் 'பழக்கடை' பாண்டியின் அறிமுகம் ராஜுவுக்கு கிடைக்க அ.தி.மு.க.வில் ஐக்கியமானார். பைனான்ஸ் தொழிலில் இறங்கியவர் பிறகு மீனாட்சி அம்மன் கோயிலில் செருப்பு வைக்கும் இடம் குத்தகை, கோரிப்பாளையத்தில் மதுக்கடை, ஜி.ஹெச் அருகே மெடிக்கல் ஷாப், மணல் வியாபாரம் என பல தொழில்கள் மாறி மதுரையின் மிகப்பெரிய சக்தியாக வளர்ந்தார். 2011 தேர்தலில் சீட் கிடைத்து வெற்றியும்பெற, அமைச்சரும் ஆனார். வசதி வாய்ப்புகள் அதிகம் வந்தாலும், வி.ஐ.பி எரியாவுக்கு ஷிப்ட் ஆகாமல் தான் வளர்ந்த செல்லூரிலேயே வசிப்பது இவருக்கு மக்கள் மத்தியில் நல்ல இமேஜை ஏற்படுத்தியுள்ளது.

தங்கமணி - மின்சாரம் மற்றும் மதுவிலக்கு ஆயத் தீர்வை துறை

நாமக்கல் மாவட்டம், பள்ளிப்பாளையம் அருகே உள்ள கோவிந்தம்பாளையம்தான் தங்கமணிக்கு சொந்த ஊர். பி.இ படித்தவர். கட்சியின் பள்ளிப்பாளையம் ஒன்றிய ஜெயலலிதா பேரவை செயலாளர், ஒன்றிய செயலாளர் ஆகிய பொறுப்புகளில் இருந்தவர், ஒன்றிய குழு தலைவராகவும் இருந்தார். பிறகு கட்சியின் நாமக்கல் மாவட்ட செயலாளராகவும் இருந்து வரும் இவர் 2006 தேர்தலில் திருச்செங்கோடு தொகுதியில் இருந்து எம்.எல்.ஏ ஆனார். தொடர்ந்து 2011 தேர்தலில் குமாரபாளையத்தில் நின்று வென்று தமிழ்நாடு தொழில் மற்றும் போக்குவரத்து துறை அமைச்சரானார். அமைதியாக தான் உண்டு, தன் வேலையுண்டு என்று இருப்பவர் என்பதால் தலைமையிடம் பெரிய புகார்கள் கிடையாது. அதனாலேயே அவர் தன் பதவியை தொடர்ந்து தக்க வைத்துக் கொண்டிருக்கிறார். ஜெயலலிதாவின் மிகப்பெரிய விசுவாசி என்பது இவருக்கு கூடுதல் பலம். அதனால்தான் மின்சாரம், மதுவிலக்கு ஆயத்தீர்வை என பவர்ஃபுல் துறைக்கு அமைச்சராக நியமித்திருக்கிறார் ஜெயலலிதா.

எஸ்.பி.வேலுமணி - உள்ளாட்சித்துறை

கடந்த அமைச்சரவையில் பதவி வகித்த அதே துறையை இந்த முறையும் பெற்றவர்கள் வெகு சிலரே. அதில் ஒருவர் எஸ்.பி.வேலுமணி. மிக முக்கிய துறைகளில் ஒன்றான உள்ளாட்சித்துறையை மீண்டும் பெற்றுள்ளார். சினிமாவில் நடிப்பதையே லட்சியமாக கொண்டிருந்த எஸ்.பி.வேலுமணி, சினிமாவில் வாய்ப்பு தேடி அலைந்து தோற்றவர். சினிமா கை கொடுக்காமல் போனாலும், அரசியல் கை கொடுத்தது. கோவைக்கு அருகே சுகுணாபுரம்தான் எஸ்.பி.வேலுமணிக்கு பூர்வீகம்.  பழனிச்சாமி எம்.ஜி.ஆரின் தீவிர ரசிகர். அவரைப்போலவே நடிகராக வேண்டும் என்பது லட்சியம். அதனாலேயே அ.தி.மு.க.விலும் இணைந்தார். 2001-ல் குனியமுத்தூர் பேரூராட்சியின் தலைவர், 2006-ல் எம்.எல்.ஏ என குறுகிய காலத்தில் அபார வளர்ச்சி பெற்றுகொடுத்தது அவருடைய உழைப்பு. 2011-ல் மீண்டும் எம்.எல்.ஏ ஆனவர். அமைச்சர் பதவியையும் பெற்றார். கடந்த ஆட்சியில் அதிக முறை துறை மாற்றப்பட்டவர் இவராகத்தான் இருக்கும். சிறப்பு திட்ட அமலாக்கத்துறை அமைச்சராக நியமிக்கப்பட்டவர், பின்னர் தொழில் துறை, வருவாய்துறை அமைச்சராகவும் நியமிக்கப்பட்டார். பின்னர் பதவியில் இருந்து நீக்கப்பட்ட எஸ்.பி.வேலுமணிக்கு இரு ஆண்டுகளுக்கு பின்னர் உள்ளாட்சித்துறை வழங்கப்பட்டது. இப்போது மீண்டும் அதே துறையின் அமைச்சராகி இருக்கிறார்.

டி.ஜெயகுமார் - மீன்வளத்துறை

தி.மு.க தொடங்கிய போது ஜெயகுமாரின் அப்பா துரைராஜ் ஒரு பவுண்டர் மெம்பர்! கழகத்திற்கும் ஜெயகுமாருக்குமான உறவு அத்தகையது. தி.மு.க.வில் உட்கட்சி பூசல் ஏற்பட்ட போது அரசியலில் இருந்து ஒதுங்கிக்கொண்டார் துரைராஜ். அவரின் மகன்தான் ஜெயக்குமார். தன் தந்தையைப் போலவே இவருக்கும் அரசியல் ஆர்வம். சென்னை சட்டக் கல்லூரியில் சட்டம் படித்தவர் இவர். அ.தி.மு.க.வில் பல்வேறு பொறுப்புகளில் இருந்திருக்கிறார். 2011-ல் சபாநாயகராக இருந்தவர் அந்தப் பதவியும் பாதியில் கைவிட்டுபோனது. ஆனாலும், துவண்டுவிடாமல் கட்சிப்பணி செய்தவரின் விசுவாசத்தை பாராட்டி ஜெயலலிதா வழங்கிய பரிசு மீன்வளத்துறை அமைச்சர் பதவி. ஜெயகுமாருக்கு இரண்டு மகன்கள். ஒருவர் ஆர்க்கிடெக், இன்னொரு மகன் எம்.பி. ஜெயகுமாரின் அலுவலகமும் இவரின் மகனின் அலுவலகமும் ஒரே இடம்தான். அப்பா ஒரு மணிநேரம், மகன் ஒரு மணிநேரம் அந்த வீட்டை (அலுவலகம்தான்) பயன்படுத்துகிறார்கள். ஜெயகுமார் தன் வீட்டில் பிரமாதமான ஒரு மாடித்தோட்டத்தை பராமரித்து வருகிறார். அங்கு இருபதுக்கும் மேற்பட்ட ரகங்களில் கீரைத் தோட்டம் அமைத்திருக்கிறார். அந்த கீரைகளே அவருடைய பிடித்தமான உணவு.

தொகுதியில் நடக்கும் நிகழ்ச்சிகளை தவறவிடமாட்டார். அங்கு கண்ணில் படுகின்ற மாணவர்களை மேடையில் ஏற்றி ஐந்து முதல் பத்து திருக்குறள்களை சரியாக பிழையின்றி சொல்லச் சொல்லுவார். சரியாக சொல்லும் மாணவர்களுக்கு மேடையிலேயே சாக்லெட்டுடன் 500 ரூபாய் பரிசாக கொடுப்பது இவரின் வித்தியாச வழக்கம்.

சி.வி.சண்முகம் - சட்டம், சிறைத்துறை

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனத்தை அடுத்த அவ்வையார் குப்பத்தை சேர்ந்தவர் சி.வி.சண்முகம். தொடர்ந்து நான்கு முறை எம்.எல்.ஏ., மூன்றாவது முறையாக தற்போது அமைச்சர். அப்பா முழு நேர அரசியல்வாதி என்பதால் இயல்பாகவே இவருக்கும் கட்சி பற்று. அதன் பலனாக கட்சியில் பல்வேறு பதவிகள். இந்நிலையில் 2001 சட்டமன்றத் தேர்தலில் திண்டிவனம் தொகுதியில் போட்டியிட்டு வென்றவருக்கு வணிக வரித்துறை அமைச்சர் பதவி வழங்கப்பட்டது. பின் 2004-ல் தொழிலாளர் துறையும், பள்ளிக் கல்வித்துறையும் கூடுதலாக வழங்கப்பட்டது. அதே வருடம் விழுப்புரம் வடக்கு மாவட்ட செயலாளராகவும் அறிவிக்கப்பட்டு அந்தப் பதவியில் 2011 வரை இருந்தார். பிறகு 2006 சட்டமன்றத் தேர்தலில் மீண்டும் திண்டிவனம் தொகுதியில் போட்டியிட்டு வென்றார். 2011 தேர்தலின்போது தி.மு.க பலமாக இருந்த விழுப்புரம் தொகுதியில் போட்டியிட்டு பொன்முடியையே தோற்கடித்து வென்றார். அதன் பரிசாக சட்டத்துறை, பள்ளிக் கல்வித்துறை, சிறைத்துறை, இளைஞர் நலம் மற்றும் விளையாட்டுத் துறைகளை வழங்கி அமைச்சராக்கினார் ஜெயலலிதா. ஆனால் பிறகு அமைச்சர் பதவியும், மாவட்ட செயலாளர் பதவியும் இவரிடம் இருந்து பறிக்கப்பட்டது. அதிலிருந்து அமைதியாக கட்சிப் பணியில் மட்டும் ஈடுபட்டு வந்தவருக்கு இந்தத் தேர்தலில் மீண்டும் விழுப்புரம் தொகுதியிலேயே போட்டியிட வாய்ப்பு அளிக்கப்பட்டது. அங்கு மீண்டும் வென்றவரை அமைச்சராக்கி இருக்கிறார் ஜெயலலிதா.

கே.பி.அன்பழகன் - உயர்கல்வித்துறை

தர்மபுரி மாவட்டம், காரிமங்கலம் கொரகோட அள்ளிகிராமத்தைச் சேர்ந்த கே.பி.அன்பழகன் ஆரம்ப காலத்தில் விவசாயம் செய்து வந்தார். எம்.ஜி.ஆரின் தீவிர ரசிகரான இவர் அதனாலேயே அ.தி.மு.க.வில் இணைந்தார். 2001-ல் முதல்முறையாக சட்டமன்ற உறுப்பினர் ஆனார். அன்றிலிருந்து இன்றுவரை பாலக்கோடு தொகுதியில் அன்பழகன்தான் அ.தி.மு.க வேட்பாளர், வெற்றியாளர்.  2002-ல் செய்தி மற்றும் விளம்பரத்துறையும் கூடுதலாக உள்ளாட்சித்துறையும் அன்பழகனுக்கு தரப்பட்டது. 2006-ம் ஆண்டு தருமபுரிக்கு பிரசாரத்திற்கு வந்த ஜெயலலிதா, அன்பழகனால் கட்டப்பட்ட கட்சி அலுவலகத்தை திறந்து வைத்தார். அப்போது, ‘நான் இந்த அளவுக்கு எதிர்பாக்கலை அன்பழகன்’ என்று சொல்ல பொத்தென்று ஜெயலலிதா காலில் விழுந்து வணங்கினார். 2014 நாடாளுமன்றத் தேர்தலில் தர்மபுரியில் அ.தி.மு.க தோல்வியை தழுவியதால் மாவட்ட செயலாளர் பதவி பறிபோனது. ஆனால், சாதுவான தன் போக்கால் மீண்டும் சீட் வாங்கி வெற்றி பெற்று உயர்கல்வித்துறை அமைச்சர் பதவியையும் அடைந்து விட்டார். கடல் ஆழத்தை கூட கண்டுபிடிச்சிறலாம் அன்பழகனின் அரசியலை யாராலும் கண்டுபிடிக்க முடியாது என்பது கட்சிக்காரர்கள் இவரைப்பற்றி பரவலாக சொல்லும் டயலாக்.

சரோஜா - சமூக நலத்துறை

சேலம் அருகே சங்ககிரி பக்கத்தில் இருக்கிற ஊஞ்சனூர் என்கிற மிகச்சிறிய கிராமத்தில் பிறந்தவர் சரோஜா. மருத்துவம் படித்தவர். அரசு மருத்துவமனையிலும் சவுதி அரேபியாவிலும் மருத்துவராக பணியாற்றிய அனுபவம் இவருக்கு உண்டு. ஜெயலலிதா மீது இருந்த அபிமானத்தின் காரணமாக 1989-ல் அ.தி.மு.க.,வில் இணைந்தார். அதன் பிறகு 1991 தேர்தலில் சங்ககிரி சட்டமன்ற தொகுதியில் போட்டியிட்டு வென்றார். அதைத் தொடர்ந்து 2004 மற்றும் 2009 நாடாளுமன்றத் தேர்தலில் இராசிபுரம் மக்களவைத் தொகுதியில் வென்று இரு முறை பாராளுமன்ற உறுப்பினராக இருந்தார். ஜெயலலிதாவுடன் நெருங்கிய தொடர்பு உடையவர். யாருடைய சிபாரிசும் இல்லாமல் ஜெயலலிதாவே நேரடியாக இவருக்கு சீட் கொடுத்திருக்கிறார்.

கருப்பண்ணன் - சுற்றுசூழல் துறை

பழனிக்கு பக்கத்தில் காட்டுவலசு என்கிற மிகச்சிறிய கிராமத்தை சேர்ந்தவர் கருப்பண்ணன். விவசாயக் குடும்பம். 1972 முதலே கட்சியில் இருந்தாலும், 2001-ல்தான் பவானி தொகுதியில் போட்டியிட சீட் கிடைத்தது. அதில் வெற்றிபெற்று எம்.எல்.ஏ.வானார். 2006-ம் ஆண்டு நடந்த தேர்தலில் பவானி தொகுதியில் போட்டியிட்டு தோல்வியை தழுவியவருக்கு 2011-ம் ஆண்டு சட்டசபைத் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு தரப்படவில்லை. ஆனால், 2011 உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட்டு பவானி நகர்மன்ற தலைவரானார். முருக பக்தரான இவர் நேரம் கிடைக்கும்போதெல்லாம் பழனிக்கு கிளம்பி விடுவார். விவசாயத் தொழில் செய்தாலும் ரியல் எஸ்டேட் தொழிலில்தான் அதிக வருமானம். இப்போது ஒரு கல்வியியல் கல்லூரியும், ஒரு பொறியியல் கல்லூரியும் கருப்பண்ணனுக்கு சொந்தமாக இருக்கிறது.

எம்.சி.சம்பத் - தொழில் துறை

பொதுக்கூட்டத்தில்கூட அதிர்ந்து பேசி பழக்கமில்லாதவர் எம்.சி.சம்பத். வாய்விட்டு சிரிக்க மாட்டார். அதனால் இவரை இன்னொரு நரசிம்மராவ் என்பார்கள். ரொம்பவே செண்டிமென்டான ஆள். ஒவ்வொருமுறையும் சட்டமன்றத்துக்கு செல்லும்போதும் சென்னை வீட்டில் வேலை செய்யும் திருமணமான பெண்களில் ஒருவரை தன் எதிரே வர வைத்து அவர் முகத்தில் விழித்துவிட்டு போவது இவரது வினோதமான வழக்கம். எம்.சி.சம்பத்தின் அண்ணன் தாமோதிரன். 1996 சட்டமன்ற தேர்தலில் நெல்லிக்குப்பம் தொகுதியில் வென்று அமைச்சரானவர். அப்போது சம்பத் அண்ணா கிராம ஒன்றிய செயலாளர் ஆனார். அதில் இருந்துதான் சம்பத்தின் அரசியல் கவுன்ட் டவுன் ஸ்டார்ட் ஆனது. அ.தி.மு.க.விலிருந்து அண்ணன் தாமோதிரன் ஓரங்கட்டப்பட அந்த இடத்துக்கு வந்தார் சம்பத். 2001 தேர்தலில் எம்.எல்.ஏ.வானவருக்கு வீட்டுவசதி துறை அமைச்சர் பதவி கிடைத்தது. கூடவே மாவட்ட செயலாளர் பதவியும். அடுத்தடுத்த சர்ச்சைகளில் சிக்கி இரண்டு பதவிகளையும் இழந்தார். கொஞ்சகாலம் அமைதியாக இருந்த சம்பத் 2011 சட்டமன்ற தேர்தலில் ஜெயித்து மீண்டும் அமைச்சரானார். அடிக்கடி அமைச்சர்கள் பந்தாடப்பட்டாலும் இவர் மட்டும் ஃபெவிக்கால் போட்டு ஒட்டியதுபோல் கம்மென்று இருந்தார். ஆட்சியில் அம்மாவை வணங்கினாலும், அப்போதும் சரி இப்போதும் சரி தனக்கு கைகொடுத்து வருவது என இவர் நம்புவது கண்டரக்கோட்டை 'அரசியம்மன்'னைத்தான்.

ஆர்.காமராஜ் - உணவுத் துறை

மன்னார்குடி அரசு கல்லூரியில் படித்தவர் ஆர்.காமராஜ். படிக்கும்போதே மன்னார்குடி எம்.எல்.ஏ.வாக இருந்த ஞானசேகரனுடன் இணைந்து அ.தி.மு.க.வுக்காக உழைக்க ஆரம்பித்து விட்டவர். எம்.ஜி.ஆர் மறைவுக்கு பிறகு ஜெயலலிதா, ஜானகி இருவரும் இரண்டு அணிகளாக பிரிந்து நிற்க, ஜானகி அணியில் தன்னை இணைத்துக்கொண்டார் காமராஜ். பின்னர் இரு அணிகளும் இணைந்த பிறகு மன்னார்குடி ஒன்றிய செயலாளர் ஆனார். ஆனால், அதற்குமேல் வளர முடியாமல் தவித்தவருக்கு லட்டுபோல ஒரு வாய்ப்பு தானாக வந்து சிக்கியது. அப்போதிருந்த மாவட்ட செயலாளர் குடவாசல் எம்.ராஜேந்திரன் கொலை வழக்கு ஒன்றில் சிறை செல்ல, அந்த பதவி காமராஜுக்கு வந்தது. அதை அப்படியே கெட்டியாக பிடித்துக்கொண்டார். ஒரு சதவீதம் கூட மேலிடத்தின் மேல் குறைந்துவிடாத விசுவாசம் காமராஜின் மிகப்பெரிய பலம். அதற்கு பலனாக அம்மா பேரவை செயலாளர், ராஜ்யசபா எம்.பி என தொடர்ச்சியாக பதவிகள் வந்தன. 2006-ல் அவருக்கு மன்னார்குடியில் சீட் தரப்பட்டது. தேர்தலில் தோல்வியடைந்தார் காமராஜ். ஆனால், 2011-ல் மீண்டும் அவருக்கு ஜெயலலிதா வாய்ப்புக்கொடுக்க நன்னிலம் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று சட்டசபை சென்றார். அப்போது அவருக்கு உணவு மற்றும் இந்துசமய அறநிலையத்துறை அமைச்சர் பதவி கொடுக்கப்பட்டது. முதல்வர் ஜெயலலிதாவுக்கு பிடித்தமான இலவசத் திருமணங்கள் பண்ணிவைப்பதில் காமராஜ் கில்லாடி. அதனால்தான் தொடர்ச்சியாக அதே துறையில் அதே அமைச்சர் பதவி தரப்பட்டிருக்கிறது.

ஓ.எஸ்.மணியன் - கைத்தறி மற்றும் ஜவுளித்துறை

கட்சி ஆரம்பிக்கப்பட்ட நாள் தொடங்கி அ.தி.மு.க.வில் இருக்கிற பழைய தொண்டர் ஓ.எஸ்.மணியன். அ.தி.மு.க.விற்காக பல போராட்டங்களில் கலந்துகொண்டு அடி, உதை வாங்கி சிறைக்கு  சென்றவர். எம்.ஜி.ஆரிடம் இவர் காட்டிய விசுவாசத்தால் இவருக்கு கட்சியில் பல பதவிகள் கிடைத்தன. எம்.ஜி.ஆர் மறைவுக்கு பிறகு அதே விசுவாசத்தையும், அன்பையும் ஜெயலலிதாவிடம் காட்டினார். அதற்கு பரிசாக 1989-ல் ஜெயலலிதா அணி சார்பில் வேதாரண்யம் தொகுதியில் போட்டியிட்டார். ஆனால், வெற்றிபெற முடியவில்லை. ஆனாலும், அவருடைய குறையாத அர்ப்பணிப்புக்கு 1995-ல் ராஜ்யசபா எம்.பி பதவி கிடைத்தது. அதற்கு பிறகு 2006-ல் வேதாரண்யம் சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் வாய்ப்பை பெற்றார். மீண்டும் தோல்வி. ஆனால், 2009ல் மயிலாடுதுறை நாடாளுமன்ற தொகுதியில் வெற்றி கிடைத்தது. மீண்டும் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கிடைக்காதவருக்கு 2016 சட்டசபைத் தேர்தலில் வாய்ப்பளிக்கப்பட வெற்றி பெற்று முதல்முறையாக அமைச்சராகியிருக்கிறார் மணியன்.

உடுமலை ராதாகிருஷ்ணன் - வீட்டு வசதித்துறை

5 ஆண்டுகளுக்கு முன்னர் உடுமலை ராதாகிருஷ்ணன் என்றால், உடுமலை அ.தி.மு.க.வினரிலேயே பலருக்கு தெரிந்திருக்காது. சாதாரண கேபிள் ஆபரேட்டராக இருந்தவர், 2011-க்கு பின்னர் அரசு கேபிள் டி.வி கார்ப்பரேஷன் மூலம் அறிமுகமாகி, கட்சியின் மாவட்டச் செயலாளராகி, எம்.எல்.ஏ.வாகி, இப்போது அமைச்சரும் ஆகிவிட்டார். உடுமலை அருகே கோலார்பட்டி தான் உடுமலை ராதாகிருஷ்ணனின் பூர்வீகம். அப்பா மளிகை கடை நடத்தி வந்தார். எளிய குடும்பத்தில் பிறந்த ராதாகிருஷ்ணன், பொள்ளாச்சியில் பி.காம் பட்டப்படிப்பை முடித்தார். அதன் பின்னர் அ.தி.மு.க.வில் தன்னை இணைத்துக்கொண்டவர், கோலார்பட்டியில் இருந்து உடுமலைக்கு இடம் பெயர்ந்தார். 90களின் துவக்கத்தில் கேபிள் டி.வி தொழில் விஸ்வரூபம் எடுக்கத் துவங்கிய நேரத்தில், உடுமலை நகரத்தின் ஒரு பகுதியில் சிறிய அளவில் கேபிள் டி.வி ஆபரேட்டர் ஆனார். இந்த நேரத்தில் அரசு கேபிள் டி.வி கார்ப்பரேஷனை துவக்க திட்டமிட்டார் ஜெயலலிதா.

இதை நிர்வாகிக்க, கேபிள் தொழில் அறிந்தவர் ஒருவர் தேவை என நினைத்த போது அ.தி.மு.க.வில் உள்ள கேபிள் தொழில் அறிந்தவர்களின் பட்டியல் சேகரிக்கப்பட்டது. யாரும் எதிர்பாராத வகையில் அதில் இருந்து தேர்வாகி, அரசு கேபிள் கார்ப்பரேஷனின் தலைவரானார் உடுமலை ராதாகிருஷ்ணன். இதன் பின்னர் நாலுகால் பாய்ச்சல்தான். தமிழகம் முழுவதும் அரசு கேபிள் கார்ப்பரேஷன் இயங்க துவங்க... கன்ட்ரோல் ரூம் ராதாகிருஷ்ணன் கைக்கு போனது! கட்சியின் சீனியர்களில் ஒருவரான பொள்ளாச்சி ஜெயராமனின் சிட்டிங் தொகுதி உடுமலை. அவரது தொகுதியை மாற்றி, உடுமலையில், தான் போட்டியிடும் அளவுக்கு செல்வாக்கு பெற்றார் ராதாகிருஷ்ணன். தேர்தலில் வென்று இப்போது வீட்டு வசதித்துறை அமைச்சராகவும் ஆகியிருக்கிறார்.

டாக்டர். விஜயபாஸ்கர் - சுகாதாரத்துறை

மருத்துவம் படித்த மிஸ்டர் கூல் சுகாதாரத்துறை அமைச்சர். புதுக்கோட்டை மாவட்டம், ராப்ப்பூசல்தான் இவருக்கு சொந்த ஊர். அப்பா வைர வியாபாரி என்பதால் வெள்ளிஸ்பூனோடு பிறந்த பணக்கார குழந்தை. இவருடைய அப்பா சின்னதம்பி எம்.ஜி.ஆர் காலத்திலிருந்தே கட்சியின் விசுவாசி. ஆர்.எம்.வீரப்பனுக்கு மிக நெருக்கமாக இருந்தவர். கல்லூரியில் படிக்கும்போதே அ.தி.மு.க.வில் இணைந்தவர். மாணவரணிக்கு தலைவராக இருந்த சமயத்தில் சிதம்பரம் வந்திருந்த ஜெயலலிதாவை சந்தித்து உப்புகளால் ஆன அவருடைய உருவப்படத்தை வரைந்து கொடுத்து குட்புக்கில் இடம்பிடித்தார். சென்னையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் டாக்டராகப் வேலை பார்த்தபோது மறைந்த முன்னாள் சபாநாயகர் காளிமுத்துவின் நட்பு கிடைக்க கட்சிக்குள் உயர்ந்தார் விஜயபாஸ்கர். கடந்த 2001 தேர்தலில் புதுக்கோட்டை தொகுதியில் வெற்றி பெற்றார். மீண்டும் 2011 தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றதோடு சுகாரத்துறை அமைச்சராகவும் ஆனார். மூன்றாவது முறையாக மீண்டும் அவருக்கு அதே தொகுதி வழங்கப்பட்டது. மீண்டும் வெற்றி பெற்று அதே துறையில் இரண்டாவது முறையாக அமைச்சர் பதவியில் அமர்ந்திருக்கிறார் விஜயபாஸ்கர்.

எஸ்.பி.சண்முகநாதன் - பால்வளத்துறை

தூத்துக்குடி மாவட்டம், பண்டாரவிளை கிராமத்தை சேர்ந்தவர் சண்முநாதன். நாட்டு வைத்தியம் பார்ப்பதுதான் இவருடைய குடும்ப தொழில். நாட்டு வைத்திய தொழில் பார்த்துக் கொண்டிருந்த சண்முகநாதனுக்கு முதன்முதலில் 1986-ல் நடந்த பெருங்குளம் பேரூராட்சி தேர்தலில் போட்டியிடும் வாய்ப்பு வந்தது. அப்போது மாநிலம் முழுவதும் நடந்த தேர்தலில் அ.தி.மு.க சார்பில் போட்டியிட்டதில் சண்முகநாதன் மட்டுமே வென்றார். அது பரபரப்பாக பேசப்பட்டது. அந்த சமயம் நெல்லையில் நடந்த விழா ஒன்றில் சண்முகநாதனை புகழ்ந்த எம்.ஜி.ஆர், அவரை தட்டிக் கொடுத்து வாழ்த்தினார். அன்று முதல் எம்.ஜி.ஆரின் தீவிரபக்தன் ஆனார் சண்முகநாதன். அதன்பிறகு நேரில் பார்க்கும்போது தன்னுடைய கையை சண்முகநாதனிடம் எம்.ஜி.ஆர் காட்டுவார். சண்முகநாதனும் எம்.ஜி.ஆரின் கை நாடியை பார்த்து வைத்திய யோசனை சொல்வார்.  அவருடைய இந்த அன்புக்கு பால் கூட்டுறவு சொசைட்டியை நடத்தும் வாய்ப்பும் வழங்கப்பட்டது. ஆனால், அதை இடையில் நடத்தமுடியாமல் விட்டுவிட்டார். ஆனாலும், இப்போது அவர் பால் வளத்துறை அமைச்சராகி உள்ளார். 1999-ல் கடைசியில் நடந்த நாடாளுமன்ற தொகுதி செயல்வீரகள் கூட்டத்தில் பேசுவதற்கு வாய்ப்பு கிடைத்தது. கட்சி மீது அக்கறை கொண்ட சண்முகநாதன், அப்போதைய மாவட்ட செயலாளர் ஆறுகநயினார் மீது புகார் குறித்து உரக்க பேசினார். அதை நேரடியாகவே கவனித்த ஜெயலலிதா அவரது துணிச்சலை பார்த்து 2000-ல் அவரை மாவட்ட செயலாளர் ஆக்கினார்.

2001-ல் நடந்த தேர்தலில் ஸ்ரீவைகுண்டம் தொகுதி எம்.எல்.ஏ ஆக்கப்பட்டார். ஏற்கனவே மாவட்ட செயலாளராகவும் இருந்து வந்த சண்முகநாதன் வசம் கைத்தறித்துறை அமைச்சர் பொறுப்பும் வந்தது.. ஆனாலும், ஆறு மாதத்தில் எம்.எல்.ஏ தவிர மற்ற பொறுப்புக்கள் பிடுங்கப்பட்டு அனைத்தும் அனிதா ராதாகிருஷ்ணணுக்கு வழங்கப்பட்டது. 2009-ல் அனிதா ராதாகிருஷ்ணன் தி.மு.க.விற்கு தாவிய பிறகு மீண்டும் சண்முகநாதன் மாவட்ட செயலாளர் ஆக்கப்பட்டார். 2011-ல் நடந்த தேர்தலில் அதே ஸ்ரீவைகுண்டம் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். அறநிலையத்துறை அமைச்சர் பொறுப்பு வழங்கப்பட்டது. ஆனாலும், ஆறு மாதத்தில் அந்த இரண்டு பொறுப்புக்களும் பிடுங்கப்பட்டது. இருந்தும் அவருடைய மாறாத விசுவாசம் மீண்டும் அமைச்சர் ஆக்கியிருக்கிறது.

துரைக்கண்ணு - வேளாண்துறை

தஞ்சாவூர் சரபோஜி கல்லூரியில் பி.ஏ படிக்கும்போதே எம்.ஜி.ஆர் மீதான ஈர்ப்பால் அரசியலுக்கு வந்தவர். 2006-ல் இருந்து பாபநாசம் தொகுதியில் தொடர்ந்து மூன்று முறை வெற்றி பெற்று ஹாட்ரிக் அடித்துள்ளார். மிகவும் அமைதியான, அதிர்ந்து பேசாத, இதுவரை கட்சிக்குள் பெரிய செல்வாக்கு இல்லாத எம்.எல்.ஏ.வாக இருந்த துரைக்கண்ணுவின் அமைச்சர் பதவி அந்த ஏரியா மக்களே எதிர்பார்க்காதது!

கடம்பூர் ராஜு - செய்தி மற்றும் விளம்பரத்துறை

தூத்துக்குடி மாவட்டம், கடம்பூர், பரம்பு கோட்டையை சேர்ந்தவர் ராஜு. தீவிர எம்.ஜி.ஆர் ரசிகர். படித்து முடித்து அதே ஊரில் இருக்கும் இவர்களுக்கு சொந்தமான ஆரம்ப பள்ளியில் ஆசிரியராக பணியாற்றினார். 2011-ல் கோவில்பட்டி தொகுதியில் போட்டியிட முதல்முறையாக சீட் கிடைக்க எம்.எல்.ஏ ஆனார். அப்போது கயத்தாறில் வீரபாண்டிய கட்டமொம்மனுக்கு மணிமண்டபம் கட்ட வேண்டும் என அமைச்சரிடம் கோரிக்கை வைத்தார். அமைச்சரோ, ‘ஏற்கனவே பாஞ்சாலங்குறிச்சியில் கோட்டை இருக்கிறது. அதனால் முடியாது' என்றார். இவர்களுக்கு நடுவில் ஒரு பூசல் உண்டாக, அது முதல்வர் ஜெயலலிதா கவனத்துக்கு வந்தது. ‘புலவனுக்கு பிறந்த இடம்தான் பெருமை. வீரனுக்கு வீரம் விதைத்த இடம்தான் பெருமை அம்மா. கட்டமொம்மனுக்கு கயத்தாறில் மண்டபம் அமைப்பதே சரியானது' என்று துணிச்சலாக பேசினார் ராஜு. உடனே 'ஏற்பாடு செய்யுங்க' என முதல்வரும் உத்தரவு போட, அதன்படி அந்த மண்டபம் கட்டி, கடந்த பிப்ரவரியில் திறப்பு விழாவும் நடந்து முடிந்து விட்டது. இப்போது மீண்டும் அதே கோவில்பட்டியில் வெற்றிபெற்று முதல்முறையாக அமைச்சராகி இருக்கிறார் கடம்பூர் ராஜு.

- விகடன் டீம்.

ஜெயலலிதா கேபினெட்டின் மினி ட்ரெய்லர்-2 ஐ படிக்க இங்கே கிளிக் செய்யவும்...

எடிட்டர் சாய்ஸ்

MUST READ