Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

ஜெயலலிதா கேபினெட்டின் மினி ட்ரெய்லர்-2

 ஜெயலலிதா கேபினெட்டின் மினி ட்ரெய்லர்-1 ஐ படிக்க இங்கே கிளிக் செய்யவும்...


ஆர்.பி.உதயகுமார் - வருவாய்த்துறை

‘’அம்மா இருக்குமிடம் கோயில் அதனால் காலில் செருப்பு போடமாட்டேன்’’ என்று சட்டமன்றத்துக்குள் செருப்பு அணியாமல் போய் பிரபலம் ஆனவர் உதயகுமார். அம்மாவின் முன்னால் பணிவு காட்டுவதில் ஓ.பி.எஸ்ஸே மிரளக்கூடிய விசுவாசி. ஜெயலலிதா சிறையில் இருந்தபோது நீண்ட தாடி வளர்த்து சித்தர்போல தன் தோற்றத்தை மாற்றிக்கொண்டவர். ஜெயலலிதாவை தமிழர் குலச்சாமி என்ற புதிய பெயரில் அழைக்க இவர்தான் காரணம். ராமநாதபுரம் மாவட்டத்தை பூர்வீகமாக கொண்ட உதயகுமார், கடந்தமுறை விருதுநகர் மாவட்டம், சாத்தூரில் வெற்றி பெற்றார். இந்த முறை மதுரை மாவட்டம், திருமங்கலத்தில் வெற்றி பெற்றுள்ளார்.   ராமநாதபுரம் மாவட்டம், கமுதிக்கருகில் பொந்தம்புளி கிராமத்திலிருந்து பஞ்சம் பிழைக்க மதுரை வந்த குடும்பம் இவருடையது. இவருடைய தந்தை வில்லாபுரம் பகுதியில் அ.தி.மு.க கிளை நிர்வாகியாக இருந்தார். கஷ்டமான குடும்ப சூழ்நிலையில் உதயகுமார் கல்லூரியில் படித்துக்கொண்டிருந்தார். கல்லூரியில் படித்த காலத்தில் காளிமுத்துவின் மகன் டேவிட் அண்ணாதுரை நட்பு கிடைத்தது. அதன் மூலம் அ.தி.மு.க மாணவர் அணியில் இணைந்தார். அப்படியே கட்சிக் கூட்டங்களுக்கு சென்று கொஞ்சம் கொஞ்சமாக தன்னை டெவலப் செய்து கொண்டார். அப்படித் தொடங்கிய அரசியல் ஆட்டம் இப்போது வருவாய்த்துறை அமைச்சராக உயர்த்தியிருக்கிறது.

கே.டி.ராஜேந்திரபாலாஜி - ஊரக தொழில் துறை

வீட்டைவிட்டு கிளம்பும்போது மறக்காமல் தன் அம்மா கிருஷ்ணம்மாளிடம் ஒரு டம்ளர் தண்ணீர் வாங்கி குடித்துவிட்டு செல்வது ராஜேந்திரபாலாஜியின் வழக்கம். அந்த அளவுக்கு அம்மா செல்லம். குடும்ப சூழலால் ராஜேந்திரனால் 10-ம் வகுப்புக்குமேல் படிப்பை தொடர முடியவில்லை. அவரின் சகோதரிகள் தீப்பெட்டி தொழிற்சாலைகளில் வேலை செய்தனர். எம்.ஜி.ஆரின் தீவிர ரசிகரான ராஜேந்திரன் அவரின் படங்களை ஓ.சி.யில் பார்ப்பதற்காகவே தியேட்டர்களில் வால் போஸ்டர் ஒட்டும் வேலை பார்த்தவர். எம்.ஜி.ஆரின் மறைவுக்குப்பிறகு ஜெயலலிதா அணியில் இருந்தார். பிறகு கட்சியின் திருத்தங்கல் நகரச் செயலாளர் ஆனார்.  ஜாதகம், நிபுணராலஜி மீது தீவிர நம்பிக்கை கொண்ட கே.டி.ராஜேந்திரன் 2000-ம் ஆண்டில் தன் பெயருக்கு பின்னால் பாலாஜியை சேர்த்துக்கொண்டு ராஜேந்திர பாலாஜி ஆனார். அதன்பிறகு ராஜேந்திரபாலாஜிக்கு ஏறுமுகம்தான். 2011-ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் சிவகாசி சட்டசபை தொகுதியில் சீட் கிடைத்து வெற்றி பெற்றவருக்கு கட்சியின் மாவட்ட செயலாளர் பதவியும், செய்தித்துறை மற்றும் சிறப்பு திட்ட அமலாக்கப்பிரிவின் அமைச்சர் பதவியும் தேடி வந்தது. தற்போது மீண்டும் வென்று 2-வது முறையாக அமைச்சராகியிருக்கிறார். ராஜேந்திரபாலாஜி திருமணமாகாதவர். அதிகாலை 5 மணிக்கே எழுந்து யோகா, தியானத்தில் இறங்கி விடுவார்.

கே.சி.வீரமணி - வணிகவரித்துறை

பத்தே ஆண்டுகளுக்கு முன்பு சாதாரண கிளைச்செயலாளராக வலம்வந்தவர் வீரமணி. சென்ற ஆட்சியில் பள்ளி கல்வித்துறை அமைச்சாரக செயல்பட்டவருக்கு இம்முறை வணிகவரித்துறை! இவருடைய அப்பா சின்ராஜ் ஜோலார்பேட்டையில் பீடித்தொழில் செய்துகொண்டிருந்த முக்கியப்புள்ளி. ஜெயலலிதா 1991-ல் முதல்வரான சமயத்தில்தான் வீரமணி அ.தி.மு.க.வில் கட்சி உறுப்பினராக ஆனார். இயல்பிலேயே களத்தில் இறங்கி வேலை பார்க்கிற குணமுள்ளவர் என்பதால் கரகரவென கட்சிக்குள் வளர்ந்தார். இவரின் அண்ணன் கே.சி.அழகிரி இவருக்கு நேர் எதிராக தி.மு.க.வில் தீவிரமாக செயல்பட்டு வருகிறார். அண்ணனை எதிர்த்து லோக்கல் பாலிடிக்ஸ் செய்யும் நிர்பந்தம் வீரமணிக்கு. ஆனால், அதில் எவ்வித தயக்கங்களும் தம்பிக்கு கிடையாது. 2001-ல் மாவட்ட விவசாய பிரிவு செயலாளராக இருந்தபோது, விவசாய மாநாடுகளை முன்னெடுத்து நடத்தியது தலைமையிடம் நற்பெயரை ஈட்டித்தந்தது. அடுத்து நடந்த 2006 தேர்தலில் வேலூர் மாவட்டத்தில் ஒரு தொகுதியில்தான் அ.தி.மு.க வென்றது. இதனால் அப்போது மாவட்ட செயலாளராக இருந்த பாண்டுரங்கனுக்கு பதிலாக கேசி வீரமணி நியமிக்கப்பட்டார். மாவட்ட செயலாளர், அமைச்சர் என்று பதவிகள் படிப்படியாக உயர்ந்தாலும் இன்னமும் ஆரம்ப பவ்யத்தோடே வலம் வருவது, பெரிய பிரச்னைகள் எதிலும் சிக்கிக்கொள்ளாதது தலைமையிடம் நல்ல பெயர் எடுக்க உதவியிருக்கிறது. தன்னை பற்றி புகார்கள் கிளம்பினால் பைக்கை எடுத்து கொண்டு தனியாக சென்று சம்பந்தப்பட்டவரை சந்தித்து பேசியே சமாதானம் செய்து பணிய வைத்துவிடுவது வீரமணி பாணி!

பி.பெஞ்சமின் - பள்ளிக்கல்வித்துறை

2011 உள்ளாட்சி தேர்தலில் வென்று சென்னை மாநகராட்சியின் துணை மேயராக பதவி வகித்தவர். கட்சியில் இவருடைய வளர்ச்சி என்பது ஸ்லோ அண்ட் ஸ்டெடி வகைதான். கடந்த ஆட்சியின் போது சென்னை வானகரத்தில் இவர் பிரமாண்டமாக நடத்திக்காட்டிய அ.தி.மு.க செயற்குழு கூட்டம், மேலிடத்தின் கருணை பார்வையை பெற்றுத்தர... இதோ இப்போது அமைச்சாரகி விட்டார். கட்சி சார்பில் எந்த போராட்டம் நடந்தாலும் முதல் ஆளாக போய் முண்டியடிப்பார். 10 ஆண்டுகளுக்கு முன்பு சென்னையின் புறநகர் பகுதியான அயனம்பாக்கத்தில் யமஹா பைக்கில் வலம்வந்த சிம்பிள் தொண்டர் பெஞ்சமின். கால்பந்தாட்டம்தான் என்றால் இவருக்கு உயிர். ஜெயலலிதா, எம்.ஜி.ஆர் பிறந்தநாள் என்றால் உடனடியாக உள்ளூர் இளைஞர்களை திரட்டி பிரமாண்ட கால்பந்தாட்ட போட்டிக்கு ஏற்பாடு செய்வது இவருடைய ஸ்டைல். அரசுப்பள்ளியில் படித்து, சென்னை பல்கலைகழகத்தில் பி.ஏ வரலாறு முடித்தவர். தான் படித்த திருவேற்காடு அரசு பள்ளிக்கு 3 லட்சம் செலவில் இலவசமாக வகுப்பறைகளை கட்டிக் கொடுத்தது நல்ல மாணவனாக பெயர் எடுத்திருக்கும் பெஞ்சமினுக்கு பள்ளிகல்வித்துறை கிடைத்திருப்பது அவரே எதிர்பார்க்காத ஒன்று.

வெல்லமண்டி நடராஜன் - சுற்றுலாத்துறை

பத்தாம் வகுப்பு வரை மட்டுமே படித்தவர் வெல்லமண்டி நடராஜன். திருச்சி காந்தி மார்க்கெட்டில் உள்ள வெல்லமண்டியில் கூலியாக வேலைபார்த்தவர். திருச்சி மணப்பாறை, மணிக்குறிச்சி இவருக்கு சொந்த ஊர். எளிமையான பின்னணியில் வளர்ந்தவர் என்பதால் எல்லோரிடமும் எளிமையாக பழகும் நபர். யாரிடமும் அதிர்ந்துகூட பேசாதவர். 77 வயதான நடராஜன் கடந்த ஆட்சியில் சட்டமன்ற கொறடாவாக இருந்த மனோகரனின் சட்டமன்ற அலுவலக பொறுப்பாளராக இருந்தார். ஐந்து வருடங்களாக மனோகரன் அலுவலகத்தில் நடராஜன் சொல்வதுதான் வேதவாக்கு. அந்தளவுக்கு நம்பிக்கையான நபர். திருச்சி கிழக்கு தொகுதி வேட்பாளர் தமிழரசி மீது போலி டாக்டர் சர்ச்சை கிளம்ப, வெல்லமண்டி நடராஜன், கடைசி நேரத்தில் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். யாருமே எதிர்பாராத வகையில் 20 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றியும் பெற்றார். நடராஜனின் அரசியல் குரு மனோகரன், தி.மு.க வேட்பாளர் நேருவிடம் தோற்றுப்போக, வெல்லமண்டி நடராஜனுக்கு லக்கிப்ரைஸாக விழுந்திருக்கிறது அமைச்சர் பதவி.

எஸ்.வளர்மதி - பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை

எம்.ஏ, எம்.ஃபில், பி.எட், பி.எல் என ஏகப்பட்ட டிகிரிகளை வைத்திருக்கும் அமைச்சர் வளர்மதி, குளித்தலையில் பிறந்து திருச்சிக்கு திருமணம் முடித்து வந்தவர். இவரது கணவர் திருச்சி பெல் நிறுவனத்தில் சீனியர் டெக்னீசியன். திருச்சியில் வழக்கறிஞராக பணியாற்றியவர், ஜெயலலிதா மீது கொண்ட ஈர்ப்பால் கட்சிக்கு வந்தவர். திருச்சி இடைத்தேர்தலில்தான் முதன்முதலாக களமிறங்கி எம்.எல்.ஏ ஆனார். அடுத்த சில மாதங்களிலேயே அ.தி.மு.க அமைப்பு செயலாளாரக அறிவிக்கப்பட்டார். யாரையும் எதிர்த்து நிற்கிற துணிச்சலான குணமும், வாதம் புரிவதில் இருக்கிற வல்லமையும், தேர்ந்த வாசிப்பும் இவருடைய மிகப்பெரிய பலம். ஜெயலலிதா போட்டியிட்ட ஸ்ரீரங்கத்தில் மீண்டும் போட்டியிட வாய்ப்பு கிடைத்தபோது அதை கச்சிதமாக கைப்பற்றி தன் தலைவிக்கு வெற்றியை பரிசளித்தார். அந்த உழைப்புக்கு பரிசாக இப்போது முதல்முறையாக அமைச்சர் பதவி அள்ளித்தரப்பட்டிருக்கிறது.

வி.எம்.ராஜலட்சுமி - ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலன்

ஆரம்பத்தில் அரசியலில் துளியும் ஆர்வம் இல்லாமல் இருந்தவர். எம்.எஸ்சி., பி.எட் பயின்றுள்ள இவருக்கு ஆசிரியையாக பணியாற்ற வேண்டும் என்பதே கனவு. ஆனால், காலம் அவரை அரசியலுக்கு இழுத்து வந்தது. இவரது கணவர் முருகனின் தந்தை வேலுச்சாமி அ.தி.மு.க.வின் நீண்டகால விசுவாசி. அவரது முயற்சியால்தான் நகர் மன்றத் தலைவியானார் ராஜலட்சுமி. நகர் மன்ற தலைவியானதும் குடிநீர் விநியோகம் சீரமைக்கப்பட மக்கள் மத்தியில் இவருக்கு நல்ல பெயர் கிடைத்தது. மக்களுடன் இவர் காட்டிய நெருக்கமும் பாசமும் இவர் அ.தி.மு.க.வில் சங்கரன்கோவில் நகர இணைச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார். முதன்முறையாக 2016 சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்டு, வெற்றி பெற்று அமைச்சர் பொறுப்பை ஏற்றுள்ள ராஜலட்சுமி, தமிழக அமைச்சரவையில்  இளம் அமைச்சர் என்கிற பெருமையையும் பெறுகிறார்.

டாக்டர் எம்.மணிகண்டன் - தகவல் தொழில்நுட்பத்துறை

ராமநாதபுரம் தொகுதியில் பத்தாண்டுகளுக்கு பிறகு அ.தி.மு.க.விற்கு வெற்றி வாய்ப்பை பெற்றுத்தந்திருக்கிறார் இந்த மருத்துவர்!  மணிகண்டனின் அப்பா முருகேசன் கட்சியில் பல பொறுப்புகளை வகித்தவர் என்பதால் இளம் வயதிலிருந்தே கட்சிக்குள் வந்துவிட்டார். மருத்துவ படிப்பு முடித்து, அதற்கு பிறகு எம்.எஸ் படித்து மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனையில் மருத்துவராகவும் பணியாற்றினார். இவருடைய தந்தை 2009-ல் நாடாளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க சார்பில் போட்டியிட்டு தோல்வியடைந்தார். தந்தையால் முடியாததை இப்போது மகன் சாதித்திருக்கிறார். சசிகலாவின் உறவினரான டாக்டர் வெங்கடேஷுக்கும் மணிகண்டன் மிகவும் நெருக்கமானவர். கட்சிக்காரர்கள் உடல்நலமின்றி நாடும்போது அருகிலிருந்து மருத்துவம் பார்ப்பது மணிகண்டன் ஸ்டைல் ஆஃப் பாலிடிக்ஸ்!

எம்.ஆர்.விஜயபாஸ்கர் - போக்குவரத்துத்துறை

கரூர் முன்னாள் மாவட்ட செயலாளர் எம்.ஆர்.விஜயபாஸ்கருக்கு கரூரை அடுத்துள்ள ஆண்டான் கோயில் புதூர் சொந்த ஊர். இவரது தம்பி சேகர் ஆண்டான் கோயில் கீழ்பாளையம் பஞ்சாயத்து தலைவர். பதினொன்றாம் வகுப்பு வரை படித்தவர் விஜயபாஸ்கர். ரெயின்போ என்கிற பெயரில் தொழிற்சாலைகள் வைத்திருந்ததால் ரெயின்போ பாஸ்கர் ஆக இவரின் பெயர் மாறியது. நியூமராலஜி நம்பிக்கையினாலும் ஜெயலலிதா மீதான அன்பினாலும் தன் பெயரை மீண்டும் விஜயபாஸ்கராக மாற்றினார். கட்சியில் பல ஆண்டுகளாக இருந்தாலும் 2005 வரை பெரிய பதவிகள் எதுவும் கைக்குவரவில்லை. முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜியால் ஓரங்கப்பட்டு வந்தவர் விஜயபாஸ்கர். அ.தி.மு.க அமைச்சரவையில் உச்சத்தில் இருந்த செந்தில்பாலாஜி திடீரென கீழே விழ, விஜயபாஸ்கர் கரூர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். தேர்தலில்கூட 441 வாக்குகள்  வித்தியாசத்தில் மயிரிழையில்தான் விஜயபாஸ்கர் வெற்றி பெற்றார். செந்தில்பாலாஜியிடம் இருந்த போக்குவரத்துதுறை இப்போது விஜயபாஸ்கர் கையில்!

- விகடன் டீம்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close