Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

அலற வைக்கும் அமைச்சர்களின் பி.ஏ.க்கள்! -அச்சத்தில் அதிகாரிகள்

அ.தி.மு.க அரசின் புதிய அமைச்சரவை பதவியேற்று ஐந்து நாட்கள் கடந்துவிட்டன. அதற்குள், அமைச்சர்களின் தனி உதவியாளர்களின் அலப்பறையைப் பார்த்து அரண்டு கிடக்கிறார்கள் அதிகாரிகள்.

தமிழக சட்டப் பேரவையில் 32 அமைச்சர்கள் இடம் பெற்றுள்ளனர். இவர்களில் பெரும்பாலானோர் புதிய முகங்கள். கடந்த அரசில் கோலோச்சிய சீனியர் அமைச்சர்கள் பலரும் தேர்தலில் தோல்வியைத் தழுவிவிட்டதால், எதிர்பாராத பலருக்கு அமைச்சர் பதவி கிடைத்துவிட்டன. இந்தமுறை சீனியர் அமைச்சர்கள் சிலர், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட துறைகளைப் பார்த்து, 'இது பனிஷ்மெண்ட்டா? புரமோஷனா?' என அதிர்ச்சியில் ஆழ்ந்தனர்.

'புதிய அமைச்சர்களின் துறைகளில் என்ன நடக்கிறது?' என்பதை விசாரித்தோம். நம்மிடம் பேசிய தலைமைச் செயலக அதிகாரி ஒருவர், " இந்தமுறை அமைச்சர்கள் சரியாகச் செயல்பட வேண்டும் என்பதில் முதல்வர் உறுதியாக இருக்கிறார். அரசுத் துறைகளில் லஞ்சம், ஊழல் என ஆதாரத்துடன் தகவல் வெளியில் வந்துவிட்டால், எதிர்க்கட்சிகளுக்கு மிகப் பெரிய வாய்ப்பாக அமைந்துவிடும் என்ற எச்சரிக்கை உணர்வு கொஞ்சம் அதிகப்படியாகவே இருக்கிறது. ஆனால், அமைச்சர்களின் பி.ஏ.க்கள் ஆட்டம் சொல்ல முடியாத அளவுக்குத் தலைதூக்கியுள்ளது. அமைச்சர்களே தங்களைப் பார்க்க வருபவர்களிடம், 'எங்களால் எதுவும் இப்போதைக்கு செய்ய முடியாது. பிறகு வாருங்கள்' என ஒப்பந்ததாரர்களுக்கு நேரடியாக பதில் சொல்கின்றனர். ஆனால், அந்த ஒப்பந்ததாரர்களிடம் பகிரங்கமாக வசூல் செய்யத் தொடங்கிவிட்டனர் சில சீனியர் பி.ஏ.க்கள்.

"பி.ஏ.க்களின் முக்கியமான டார்கெட் என்பது மக்கள் நல்வாழ்வுத்துறை, உயர்கல்வித்துறை, பள்ளிக் கல்வித்துறை, சமூகநலத்துறை, பொதுப்பணித்துறை, நெடுஞ்சாலை, மின்சாரம் உள்ளிட்ட வெயிட்டான சில துறைகள்தான். இதில், பி.ஏ.க்களுக்குள் தனி சிண்டிகேட் உண்டு. தங்களுக்கு வேண்டிய காரியங்களை இவர்களுக்குள்ளேயே பேசி முடித்துவிடுவார்கள். தேர்தல் முடிவுகள் வெளியான அன்றே, முருகப் பெருமானின் பெயர் கொண்ட பி.ஏ ஒருவர், 'அண்ணன்தான் திரும்பவும் ஹெல்த் மினிஸ்டர்' என மருந்து சப்ளையர்களை மிரட்டத் தொடங்கிவிட்டார்.

கடந்த ஆட்சியின் இறுதியில் 850 டெண்டர்கள் வரையில் சுகாதாரத்துறையில் பைனல் செய்யாமல் வைத்திருந்தார்கள். இப்போது டெண்டரை ரிலீஸ் செய்ய கடந்த முறையை விடவும் கூடுதல் கமிஷன் கேட்கத் தொடங்கிவிட்டார்கள். ' இவர்கள் கேட்கும் தொகையைக் கொடுக்க முடியவில்லை' என ஒப்பந்ததாரர்கள் தெறித்து ஓடுகிறார்கள். அதிலும், மருத்துவப் பணிகள் சேவைக் கழகத்தில் ஓய்வு பெற்ற அதிகாரி ஒருவருக்கு பணி நீட்டிப்பு கொடுத்துள்ளனர். இந்த ஆனந்தமான அதிகாரிதான், துறையின் அனைத்து விஷயங்களையும் கையாள்கிறார். இவருக்குத் தெரியாமல் துறையில் எந்த பைலும் நகராது. இவரும் அமைச்சரின் பி.ஏ.வும்தான் துறைக்கு ஆல் இன் ஆல். அமைச்சரின் ஆசியோடுதான் இவர்கள் ஆடுகிறார்கள்" என்றார் ஆதங்கத்தோடு.

வணிகவரித்துறை அமைச்சரின் சீனியர் பி.ஏ ஒருவர், பதவியேற்ற நாளில் இருந்தே அதிகாரிகள் ட்ரான்ஸ்பர், நிதி விவகாரம் உள்ளிட்ட விவகாரங்களில் தீவிர ஆர்வம் காட்டி வருகிறார். வணிகவரி ஏய்ப்பு நடத்தும் நிறுவனங்களை எப்படி வளைப்பது என்பது பற்றித்தான் நாள்தோறும் விவாதம் நடத்துகிறாராம். இவரது செயல்பாடுகளை அமைச்சரும் கண்டுகொள்வதில்லை என்ற குற்றச்சாட்டும் சேர்ந்தே எழுகிறது.

இதே சீனியர் பி.ஏ கடந்த ஆட்சியில் பள்ளிக் கல்வியில் கோலோச்சினார். இப்போது அதே கல்வி அதிகாரிகள் தொடர்பை வைத்துக் கொண்டு, பள்ளிக் கல்வி அமைச்சரிடமும் நெருங்கிவிட்டார். இப்போது பள்ளிக் கல்வித்துறை சப்ளையர்களும் இந்த சீனியரின் பின்னால்தான் வலம் வருகிறார்கள். இதே நிலைதான், நெடுஞ்சாலை, பொதுப்பணித்துறை, உயர்கல்வித்துறை, மின்சாரம், சமூக நலன் என அனைத்து மட்டங்களிலும் நிலவுகிறது. ' அமைச்சர்கள் சற்று அடக்கி வாசித்தாலும், உதவியாளர்களின் அலப்பறைகள் எல்லை மீறிப் போவதாக' வருத்தப்படுகின்றனர் அதிகாரிகள்.

புதிய ஆட்சியின் தொடக்கத்திலேயே பி.ஏ.க்களின் அலப்பறைகளுக்கு கடிவாளம் போடாவிட்டால், 'நல்லாட்சி கொடுப்பேன்' என்ற முதல்வரின் நோக்கம் சிதைந்துவிடும் என்கின்றனர் தலைமைச் செயலக வட்டாரத்தில்.

ஆ.விஜயானந்த்
 

எடிட்டர் சாய்ஸ்

அப்போலோ டூ எம்.ஜி.ஆர் சமாதி... ஜெயலலிதாவுக்கு அரண் அமைத்த மன்னார்குடி!

MUST READ