Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

விற்பனை நேரத்தை குறைத்ததால் டாஸ்மாக் வருமானம் குறைந்ததா?

சென்னை:தமிழக முதல்வரின் உத்தரவையடுத்து டாஸ்மாக் விற்பனை நேரத்தில் இரண்டு மணிநேரம் குறைக்கபட்டதால் வருமானத்தில் 6 சதவீதம் அளவிற்கு இழப்பு ஏற்பட்டுள்ளதாகத் தெரிகிறது.      

நடந்து முடிந்த 2016 தமிழக சட்டமன்றத் தேர்தலில், டாஸ்மாக் மதுக்கடைகளை மூட வேண்டும் என்ற கோரிக்கை பலமாக எழுந்தது. இதனையடுத்து திமுக,பாமக,நாம் தமிழர் கட்சி என்று அனைத்துக் கட்சிகளும் பூரண மதுவிலக்கு கொண்டு வரப்படும் என்று அறிவித்தன.

இந்நிலையில் அ.தி.மு.க. தனது தேர்தல் அறிக்கையில்,தமிழகத்தில் மதுவிலக்கு படிப்படியாக அமல்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. தேர்தலில் அ.தி.மு.க. வெற்றி பெற்று, முதல்வராக  கடந்த 23ம் தேதி ஜெயலலிதா பதவி ஏற்றார்.

பின்னர், காலை 10 மணியில் இருந்து இரவு 10 மணிவரை நடக்கும் டாஸ்மாக் கடைகள், 24ம் தேதியில் இருந்து, பகல் 12 மணிக்கு தொடங்கி இரவு 10 மணி வரை நடக்கும் என்றும், டாஸ்மாக் சில்லரை  விற்பனை மதுக்கடைகளில் 500 கடைகள் மூடப்படும் என்றும் பதவி ஏற்றதும் உத்தரவிட்டார்.

இதனையடுத்து டாஸ்மாக் கடையில் மது விற்பனை நேரத்தைக் குறைக்கும் உத்தரவு உடனே அமலுக்கு வந்தது. அடுத்ததாக 500 மதுக்கடைகளை மூடும் நடவடிக்கைகளை டாஸ்மாக் நிறுவனம் மேற்கொண்டுள்ளது.

இது தொடர்பாக டாஸ்மாக் அதிகாரிகள் தரப்பில் கேட்டபோது,

" மது விற்பனை நேரத்தைக் குறைத்ததால் மொத்த விற்பனையில் 5 முதல் 6 சதவீதம் மது விற்பனை குறைந்திருக்கிறது. ஆனாலும் மொத்த மதுக் கொள்முதலில் இது போன்ற மாற்றம் இருக்குமா என்பதை இனிமேல்தான் கணக்கிடவேண்டும்.

தற்போது 500 மதுக்கடைகளை அடையாளம் காணும் நடவடிக்கைகளுக்கு மாவட்ட டாஸ்மாக் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளோம். மேலும் மாநிலத்தில் உள்ள டாஸ்மாக் கடைகளில், எந்தக் கடைகளுக்கெல்லாம் பொதுமக்கள் ஆட்சேபனை தெரிவிக்கிறார்களோ அவற்றை மூடுவதில்  முன்னுரிமை அளிக்கப்படும்." என்று கூறினர்.

ஏற்கனவே,  மதுவுக்கு அடிமையானவர்களை, அதிலிருந்து மீட்பதற்கான சிகிச்சை மையங்களை மாவட்டம்தோறும் தொடங்குவதற்கு முதலமைச்சர் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.

எடிட்டர் சாய்ஸ்

அப்போலோ டூ எம்.ஜி.ஆர் சமாதி... ஜெயலலிதாவுக்கு அரண் அமைத்த மன்னார்குடி!

MUST READ