Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

குழந்தை தொழிலாளர்களுக்கு ஒரே ஒரு போன்கால் மூலம் உதவலாமா..? #MakeACall MakeALife

காலை 9  முதல் 11 மணி வரை டிராஃபிக் உச்சமாக இருக்கும் நேரத்தில், சென்னை மாநகரின் ஏதாவது ஒரு சிக்னலில் கையில் ரைம்ஸ் மற்றும் தமிழ் பயிற்சி புத்தகங்கள், ஸ்கெட்ச் பென்கள் என சிறுவர்களுக்கான புத்தகங்களை சிறுவர்களே விற்றுக் கொண்டிருப்பதை பார்க்கலாம்.

'வேணாம்பா போ' என அதட்டி விட்டு அங்கிருந்து கடந்து போயிருப்போம். சிலர் அவர்களுக்கு உதவுவதாக நினைத்து அவர்கள் விற்கும் புத்தகங்களில் சிலவற்றை வாங்கிச் சென்றிருப்போம். கூடவே 'படிக்கும் வயதில் இவர்கள் ஏன் இந்த வேலையை செய்து கொண்டிருக்கிறார்களே...' என்ற ஆதங்கத்துடன் பலரும் அவர்களை கடந்து சென்றிருப்போமே தவிர,  இவர்களை படிக்க வைக்க என்ன செய்யலாம் என யோசித்திருக்க மாட்டோம். 

'அவங்கள படிக்க வைக்குற அளவுக்கு பணமும், நேரமும் என்கிட்ட இல்லை' என்பவர்கள் மேலே படியுங்கள்....

6 முதல் 14 வயது வரை உள்ள சிறுவர் சிறுமிகளுக்கு இலவச மற்றும் கட்டாயக் கல்வி வழங்க வேண்டும் என்கிறது இந்திய அரசியல் சட்டப்பிரிவு 21 A. ஆனால் இந்தியக் குழந்தைகளின் நிலை பற்றிக் கூறும் இந்த புள்ளிவிரம் கொஞ்சம் அதிர்ச்சியளிப்பதாகத்தான் இருக்கிறது. 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இந்தியாவில் 14 வயதுக்கு கீழ் உள்ளவர்களின் எண்ணிக்கை 47,19,86, 622. அவர்களில் சிறுவர்கள் 24, 74, 22, 758 பேர்,  சிறுமிகள் 22, 45, 63, 864.

கடந்த 2011-ம் ஆண்டு எடுக்கப்பட்ட தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்பில், இந்தியாவில் மொத்தம் ஒரு கோடியே 2 லட்சம் குழந்தை தொழிலாளர்கள் உள்ளனர். இவர்களில் 40% பேர் தொடக்கக் கல்வி படிப்பை பாதியில் கை விட்டவர்கள். 35% மாற்றுத் திறனாளி மாணவர்களுக்கு பள்ளி படிப்பு கிடைக்கவில்லை. 50% குழந்தை தொழிலாளிகள் பெண்கள். 42.02% இந்திய தொழிலாளிகள் குழந்தைகள். இது கண்ணுக்கு தெரிந்தது மட்டுமே. ஓடி விளையாட வேண்டிய வயதில் ஓய்வில்லாமல் உழைத்துக் கொண்டிருக்கும் பிஞ்சு நெஞ்சங்கள் ஏராளம்.

சட்டம் இருந்தும் அதை செயல்படுத்த அரசாங்கமும்,  அதன் ஊழியர்களும் இருந்தும் இந்த நிலை தொடர்வது எதனால்? அரசாங்கம் அலட்சியமாக இருக்கிறது என்கிறீர்களா? ஒரு வகையில் ஏற்றுக் கொள்ள வேண்டிய விஷயம் தான். பேருந்து நிலையம், பார்க், வணிக வளாகங்கள், கோயில் போன்ற இடங்களில் குழந்தை தொழிலாளர்கள் கண் முன்னே சுற்றித்திரிய, வேறென்ன குற்றத்தை தடுக்க போலீஸார் கண்காணிப்பில் ஈடுபடுகின்றனர் என்பது தெரியவில்லை.

அரசு பள்ளிகளைச் சுற்றியுள்ள பகுதிகளில், பள்ளிப் படிப்பை மேற்கொள்ளாத மாணவர்கள் இருக்கிறார்களா என்பதை கண்டறிந்து,  அவர்களை படிக்க வைக்க ஆவன செய்வது ஒரு தலைமை ஆசிரியரின் கடமை. இந்த இரண்டு அரசு அதிகார மையங்களும் தங்கள் கடமையை சரிவர செய்திருந்தாலே குழந்தை தொழிலாளர்கள் வளராமல் தடுத்திருக்கலாம். சரி, சட்டங்களை பின்பற்றுவது அரசு அதிகாரிகளின் கடமை மட்டும் தானா...பொது மக்களாகிய நமக்கு இல்லையா?

'சரி, எங்களுக்கு கடமை இருக்கிறது. ஆனால் எங்கள் சக்தியை தாண்டி இவர்களுக்கு எப்படி உதவ முடியும்?' என்பதுதான் பலரின் கேள்வி. அவர்களின் கேள்விக்கு பதில்தான் குழந்தைகள் உதவி மையம். 1098 என்ற தொலைபேசி எண்ணுக்கு டயல் செய்ய வேண்டியதுதான் நீங்கள் அதிகபட்சம் செய்ய வேண்டிய செலவு.

இந்த உதவி மையம் பல வருடங்களாக செயல்பட்டு வந்தாலும்,  மக்களிடையே இன்னும் விழிப்புணர்வு சென்று சேரவில்லை. 24 மணி நேரமும் இயங்கும் இந்த தகவல் மையத்தை தொடர்பு கொண்டு, உதவி தேவைப்படும் குழந்தைகளைப் பற்றிய தகவல்களை தந்தால், இந்த நெட்வொர்க்கில் உள்ள குழந்தைகள் நல அமைப்புகள் மூலம் உடனடி நடவடிக்கை எடுக்கப்படும். குழந்தை தொழிலாளர்களை மீட்டு,  அவர்களை காப்பகங்களில் தங்க வைத்து, கல்வியிலிருந்து அனைத்து வசதிகளையும் இலவசமாக செய்து தந்து பராமரிக்கின்றனர். இந்த குழந்தைகள் காப்பகங்கள் அனைத்தும் மத்திய அரசு அங்கீகாரம் பெற்றவை. கல்வி மட்டும் அல்ல; குழந்தை திருமணம், கடத்தல், பாலியல் துன்புறுத்தல், எய்ட்ஸால் பாதிக்கப்பட்ட குழந்தைகள், சாலையோரம் வசிக்கும் குழந்தைகளை மீட்டு,  அவர்களுக்கு மன நல ஆலோசனை வழங்கி,  புதுவாழ்வு தருவதற்கான ஏற்பாடுகளை செய்கின்றனர். மேலும் காணாமல் போன குழந்தைகள் பற்றிய புகார், குழந்தை பிறப்பு சான்றிதழ் பதிவுக்கும் இந்த சேவை மையம் உதவுகிறது.

இந்நிலையில் இந்த விஷயத்தில் விழிப்புணர்வு வழங்குவதோடு மட்டும் நிறுத்திக்கொள்ளாமல்,  நாமே களமிறங்கினோம்.

அசோக் நகர் பஸ்டாப் மற்றும் கோடம்பாக்கம் நெடுஞ்சாலையிலும் காணப்பட்ட குழந்தை தொழிலாளர்களை மீட்கக் கோரி 1098-ஐ அழைத்தோம். புகாரை பொறுமையாக பதிவு செய்து கொண்டனர். அடுத்த 15 நிமிடங்களில் மீட்பு குழுவில் இருந்து நமக்கு அழைப்பு வந்தது. தகவலை மீண்டும் உறுதி செய்த பின் நடவடிக்கையை தொடங்கினர்.

பெற்றோர்களே அந்த குழந்தைகளை வியாபாரம் செய்ய அனுப்பியது தெரிய வந்ததால், அவர்கள் எச்சரிக்கை செய்யப்பட்டனர். அந்த சிறுவர் சிறுமிகளுக்கு கவுன்சிலிங் வழங்கப்பட்டு வருகிறது.

இத்தகைய நல்ல திட்டங்களை வைத்துக் கொண்டு ஏன் ஒரு ஃபோன்கால் செய்ய தயங்க வேண்டும்?. ஒரே ஒரு போன்கால் செய்யுங்கள், வருங்கால தூண்களுக்கு வாழ்க்கை கொடுங்கள்!

- ரெ.சு. வெங்கடேஷ்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

“மாட்டின் மீதான அக்கறை, சிசுக்கள் மீது கிடையாதா?!” நெஞ்சு பொறுக்குதில்லையே #GorakhpurTragedy
Advertisement

MUST READ

Advertisement
[X] Close