Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

மீன்பிடி தடைக்காலம் முடிந்தது:கடலுக்குள் மீனவர்கள் செல்ல ஆயத்தம்!

ராமநாதபுரம்: தமிழகத்தில், கடந்த 45 நாட்களாக இருந்து வந்த மீன்பிடித் தடைக்காலம்  இன்றுடன் நிறைவடைவதையொட்டி, திங்கள்கிழமை கடலுக்குச் செல்ல தமிழக 12 கடலோர மாவட்டங்களை சேர்ந்த விசைப்படகு மீனவர்கள் ஆயத்தமாகி வருகின்றனர்.

விசைப்படகுகள் அதிகமுள்ள சென்னை காசிமேடு, கடலூர், பழையாறு, நாகப்பட்டினம், ஜெகதாபட்டினம், மீமிசல், தொண்டி, மண்டபம், பாம்பன், ஏர்வாடி, தூத்துக்குடி,  உவரி, முட்டம், குளச்சல் உட்பட தமிழகத்தின் மிக முக்கியமான மீன்பிடி துறைமுகங்களில் உள்ள மீனவர்கள், கடலுக்கு செல்லும் வகையில் தங்களது விசைப் படகுகளை பழுது நீக்கி, மராமத்து செய்து சனிக்கிழமை வெள்ளோட்டம் பார்த்துப்  பரிசோதித்தனர்.

கடல் வளத்தைப் பாதுகாக்கவும், மீன்கள் இனப்பெருக்கம் செய்வதற்கு ஏதுவாகவும், கடந்த ஏப்ரல் 15- ம் தேதி முதல் மே 29- ம் தேதி வரை என 45 நாள்களுக்கு மீன்பிடிக்க, தமிழக அரசு தடைவிதித்திருந்தது.
இந்தத் தடைக்காலம் ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவோடு முடிவடைவதால், ராமேசுவரம், பாம்பன், மண்டபம் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த சுமார் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள் திங்கள்கிழமை அதிகாலை கடலுக்குச் செல்வதற்காக, மீன்பிடி சாதனங்களை தயார்படுத்தி வருகின்றனர்.

பொதுவாக, மீன்பிடித் தடைக்காலத்தின்போது மீனவர்கள் தங்களது படகுகளை சரிபார்ப்பது வழக்கம். அதன்படி, மீனவர்கள் படகுகளில் சேதமடைந்திருந்த பலகைகளை மாற்றி வர்ணம் பூசியும், இயந்திரத்தை பழுது நீக்கியும் தற்போது தயார் நிலையில் உள்ளனர். மேலும், கடலில் படகுகள் நிறுத்தி  வைக்கப்பட்டுள்ளன. 

45 நாள்களுக்குப் பிறகு ஆழ்கடல் பகுதியில் சென்று மீன்பிடிக்க உள்ளதால், வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படும் இறால், நண்டு, கணவாய் உள்ளிட்டவை அதிக அளவில் கிடைக்கும் என்ற மிகுந்த எதிர்பார்ப்பில் உள்ளனர்.

ராமேஸ்வரம் மீனவர்கள்,  இலங்கை கடற்படை பிரச்னை, மீனவர்களுக்கு தீராத தலைவலி என்பது ஒருபுறமிருக்க, கடல் வளத்தை அழிக்கும் தடை செய்யப்பட்ட வலைகளை பயன்படுத்துவது, மீன் வளத்துக்கு பெரும்பிரச்னை. இவை இரண்டு பிரச்னைகளுக்கும் தீர்வு காணப்பட்டால், மீன் பிடித்தொழில் பிரச்சனை இல்லாமல் நடக்கும் என்கிறார்கள் சமூக ஆர்வலர்கள்.

 



செ.சல்மான்.
படம்  : உ.பாண்டி.

எடிட்டர் சாய்ஸ்

MUST READ