Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

ரயில், பேருந்து கட்டணம் அதிகரிக்கும்..! அன்புமணி அலர்ட்


டீசல் விலை உயர்வால் ரயில் மற்றும் பேருந்து கட்டணங்கள் அதிகரிக்கப்படலாம் என்று பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், "பெட்ரோல், டீசல் விலைகள் கடந்த சில மாதங்களில் இல்லாத அளவுக்கு கடுமையாக உயர்த்தப்பட்டிருக்கின்றன. சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.2.57 உயர்த்தப்பட்டு ரூ.65.04 ஆகவும்,  டீசல் விலை லிட்டருக்கு ரூ.2.35 உயர்த்தப்பட்டு ரூ.55.44 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டிருக்கின்றன. ஏழை மற்றும் நடுத்தர மக்களை கடுமையாக பாதிக்கும் இந்த விலை உயர்வு கண்டிக்கத்தக்கதாகும். மத்திய அரசு மற்றும் எண்ணெய் நிறுவனங்களின் பெட்ரோல், டீசல் விலை நிர்ணயக் கொள்கை தனியார் எண்ணெய் நிறுவனங்களுக்கு சாதகமாகவும், ஏழை மற்றும் நடுத்தர மக்களுக்கு பாதகமாகவும் தான் இருக்கிறது. கச்சா எண்ணெய் விலை உயர்வைக் காரணம் காட்டி கடந்த ஒரு மாதத்தில் பெட்ரோல் விலை லிட்டருக்கு 4.46 ரூபாயும், டீசல் விலை 6.68 ரூபாயும் உயர்த்தப்பட்டிருக்கிறது. மார்ச் 17ஆம் தேதி முதல் இன்று வரை பெட்ரோல் விலை லிட்டருக்கு 8.96 ரூபாயும், டீசல் விலை 8.31 ரூபாயும் உயர்த்தப்பட்டிருக்கிறது. கடந்த 3 மாதங்களில் மட்டும் பெட்ரோல் விலை 5 முறையும், டீசல் விலை 6 முறையும் உயர்த்தப்பட்டிருக்கின்றன. பெட்ரோல், டீசல் விலை மாதத்திற்கு இரு முறை உயர்த்தப்படுவது வாடிக்கையாகி விட்டது. கச்சா எண்ணெய் விலை குறைந்த போது பெட்ரோல், டீசல் விலையை குறைப்பதில் ஆர்வம் காட்டாத மத்திய அரசு, இப்போது உலகசந்தையில் விலை சற்று உயர்ந்தால் கூட உள்ளூர் சந்தையில் அளவுக்கு அதிகமாக விலையை உயர்த்துவது சரியல்ல.

மத்திய அரசு நினைத்தால் இந்த விலை உயர்வின் சுமையை தாமே ஏற்றுக்கொண்டு மக்களுக்கு பாதிப்பு ஏற்படுவதை தவிர்த்திருக்கலாம். இதனால் அரசுக்கு எந்த சுமையும் ஏற்படாது. ஏனெனில், உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறைந்த போது அதன் பயனை நாட்டு மக்களுக்கு அளிக்காமல், கடந்த 2014 நவம்பர் மாதம் முதல் கடந்த ஜனவரி 31ஆம் தேதி வரை பெட்ரோல் மீதான கலால் வரியை 9 தவணைகளில் லிட்டருக்கு 11.77 ரூபாயும், டீசல் மீதான வரியை 13.47 ரூபாயும் உயர்த்தி, அதன் மூலம் ஆண்டுக்கு ரூ.1,46,838 கோடி கூடுதல் வருவாயை மத்திய அரசு தேடிக்கொண்டது. இப்போதும் கூட கலால் வரியை ஓரளவு குறைப்பதன் மூலம் இந்த விலை உயர்வை மத்திய அரசு தவிர்த்திருக்கலாம். இதனால் மத்திய அரசுக்கு கூடுதலாக கிடைக்கும் வருவாய் 30 முதல் 40 விழுக்காடு வரை குறையுமே தவிர, எந்த வகையிலும் இழப்பு ஏற்பட்டுவிடாது.

உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறைந்த போது உள்நாட்டில் பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்படவில்லை. அதற்கான காரணத்தைக் கேட்ட போது கட்டமைப்பு வசதிகளை பெருக்குவதற்கு நிதி தேவைப்படுவதால் பெட்ரோல், டீசல் மீதான கலால் வரி உயர்த்தப்படுவதாகவும், கச்சா எண்ணெய் விலை அதிகரிக்கும் போது, கலால் வரி குறைக்கப்பட்டு பெட்ரோல், டீசல் விலை உயராமல் பார்த்துக் கொள்ளப்படும் என்று மத்திய அரசு வாக்குறுதி அளித்திருந்தது. ஆனால், கடந்த 3 மாதங்களாக பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து உயர்த்தப்படும் நிலையில், அவற்றின் மீதான கலால் வரியை குறைக்க மத்திய அரசு முன்வர மறுப்பது எந்த வகையிலும் பார்த்தாலும் நியாயமாக தோன்றவில்லை.

பெட்ரோல், டீசல் விலை உயர்வு வாகன உரிமையாளர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்துவதுடன் மட்டும் நின்றுவிடப் போவதில்லை. டீசல் விலை உயர்வால் சரக்குந்து வாடகை உயர்த்தப்படும். தொடர்வண்டி  மற்றும் பேருந்து கட்டணங்களும் அதிகரிக்கப்படலாம். இவற்றின் சங்கிலித் தொடர் விளைவாக காய்கறிகள், பழங்கள், உணவு தானியங்கள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களின் விலைகளும் கடுமையாக அதிகரிக்கும். இதனால் ஏழை மற்றும் நடுத்தர மக்கள் கடுமையாக பாதிக்கப்படுவார்கள். இதைத் தடுக்கும் வகையில், 2014 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் முதல் மேற்கொள்ளப்பட்ட கலால் வரி உயர்வை ரத்து செய்வதன் மூலம் பெட்ரோல், டீசல் விலையை குறைக்க அரசு முன்வர வேண்டும்" என்று கேட்டுக் கொண்டுள்ளார். 

எடிட்டர் சாய்ஸ்

MUST READ