Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

முன்னாள் நிதியமைச்சர் சிதம்பரத்தின் ரொக்க கையிருப்பு ரூ.3.5 லட்சம்தானாம்!

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான ப.சிதம்பரம் தனக்கும் தனது மனைவி மற்றும் குடும்ப உறுப்பினர்கள் அனைவருக்கும் சேர்த்து  ரூ.95 கோடி மதிப்பு சொத்துக்கள்தான் உள்ளதாக கூறியுள்ளார். அதில் தனது ரொக்க கையிருப்பு வெறும் 3.5 லட்சம் என்று குறிப்பிட்டுள்ளார்.

மகாராஷ்டிரா மாநிலத்திலிருந்து மாநிலங்களவைக்கு போட்டியிடுகிறார் முன்னாள் நிதியமைச்சர் ப. சிதம்பரம். இதற்கான வேட்புமனு தாக்கலின்போது தனது வருமானம் மற்றும் சொத்து விபரங்களை அவர் தெரிவித்தார்.

22 பக்கம் அளவில் தாக்கல் செய்த சொத்து விவர பட்டியலில் தனது குடும்ப உறுப்பினர்களுக்கு அசையும் சொத்து மதிப்பு ரூ.54.30 கோடியும், அசையா சொத்து மதிப்பு ரூ.41.35 கோடி என்றும் தெரிவித்துள்ளார்.

மேலும் 2014-15ம் நிதியாண்டில் தனது வருமானம் ரூ.8.58 கோடி என்றும் தனது மனைவியின் வருமானம் ரூ.1.25 கோடி என்றும் அதில் ப.சிதம்பரம் குறிப்பிட்டுள்ளார். இந்த விபரங்களையே அவர் தன் கடந்த ஆண்டு வருமான வரி தாக்கலின் போதும் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதில் சிதம்பரத்தின் பெயரில் அசையும் சொத்து மதிப்பு ரூ. 42.95 கோடியாகவும், அசையா சொத்து மதிப்பு ரூ. 4.25 கோடியாகவும்,ரொக்க கையிருப்பு ரூ.3.5 லட்சமாகவும் உள்ளது. 32 கிராம் தங்கமும் வைத்துள்ளார். அதன் மதிப்பு ரூ.87,232 ஆகும். அதோடு ரூ.97,500 மதிப்பிலான  3.25 காரட் வைரமும் வைத்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

இதேபோல நளினி சிதம்பரத்தின் அசையும் சொத்து மதிப்பு ரூ. 11.23 கோடியாகவும், அசையா சொத்து மதிப்பு ரூ. 25.03 கோடியாகவும், ரொக்க கையிருப்பு ரூ.1.24 லட்சமாக  உள்ளது. மேலும் 1.43 கிலோ தங்கம் வைத்துள்ளார். இதன் மதிப்பு ரூ. 39.17 லட்சம் ஆகும். அதேபோல 52 வெள்ளியும், ரூ.22.98 லட்சம் மதிப்புள்ள வைரமும் வைத்துள்ளார்.

 

மேலும் சிதம்பரத்துக்கு இந்தியாவில் உள்ள பல்வேறு மாநிலங்களில் சேர்த்து மொத்தமாக 13 வங்கி கணக்குகள் உள்ளன. அவரது மனைவிக்கு 6 வங்கி கணக்குகள் உள்ளன. 1994- ம் ஆண்டு 38.72 ஏக்கர் நிலத்தை கர்நாடக மாநிலத்தில் ரூ.25.16 லட்சத்துக்கு வாங்கியுள்ளார். அதன் தற்போதைய மதிப்பு 1.93 கோடியாகும். இதுமட்டுமல்லாமல் ரூ.11.86 லட்சத்துக்கு அசையா சொத்தும்,ரூ. 12.07 லட்சத்துக்கு அசையும் சொத்து குடும்ப சொத்திலிருந்து கிடைத்துள்ளது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

சிதம்பரத்தின் மனைவி டொயோட்டா இன்னோவா காரும், சிதம்பரம் ஸ்கோடா காரும் வைத்து உள்ளாதாகவும் அதில் குறிப்பிட்டுள்ளார். முன்னாள் நிதியமைச்சரின் சொத்துக்கணக்கை தேர்தல் அலுவலகம் ஏற்றுக்கொண்டுள்ளது.

- இரா. ரூபாவதி
 

எடிட்டர் சாய்ஸ்