Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

மீனவர்கள் பிரச்னைக்கு கடிதம் வேண்டாம்... நேரில் டெல்லி செல்லுங்கள்! -ஜெயலலிதாவுக்கு கருணாநிதி அட்வைஸ்

சென்னை: மீனவர்களை சிறைப்பிடிக்கும் சம்பவங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க கடிதம் எழுதாமல் நேரில் டெல்லிக்கு சென்று முற்றுப்புள்ளி வைக்க முயற்சி செய்ய வேண்டும் என்று தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு கருணாநிதி கோரிக்கை விடுத்துள்ளார்.

இது தொடர்பாக தி.மு.க. தலைவர் கருணாநிதி வெளியிட்டுள்ள அறிக்கையில், ''இலங்கையில் எத்தனை ஆட்சி மாற்றம் ஏற்பட்டாலும், நம்முடைய மீனவர்கள் பிரச்னைக்கு மட்டும் முடிவு காலமே ஏற்படாதுபோல உள்ளது. 45 நாட்கள் மீன்பிடித் தடைக்காலம் முடிந்து கடலுக்கு மீன் பிடிக்கச் சென்ற முதல் நாளே தமிழக மீனவர்கள் 7 பேர் இலங்கை கடற்படையினரால் சிறை பிடிக்கப்பட்டுள்ளனர்.

இவர்களில் பலர் கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது, அங்கு வந்த இலங்கை கடற்படையினர் தமிழக மீனவர்களை தாக்கி, விரட்டி அடித்ததுடன், சேசு இருதயம் என்பவரின் விசைப்படகையும், அதிலிருந்த ராமேசுவரம் மீனவர்கள் 7 பேரையும் சிறைப்பிடித்துச் சென்றுள்ளனர்.

மீன்பிடித் தடைக்காலம் முடிந்து, மீன்பிடிக்கச் சென்ற முதல் நாளிலேயே இவ்வாறு 7 மீனவர்களை இலங்கைக் கடற்படை இரக்கமின்றிப் பிடித்துச் சென்றிருப்பது, இந்திய மீனவர்கள் மத்தியில் கடும் வெறுப்பையும், விரக்தியையும் ஏற்படுத்தியுள்ளது.

மீனவர்கள் சிறைப்பிடிக்கப்பட்டதற்கு ராமேஸ்வரம் மீனவர் சங்கம் தனது கடுமையான கண்டனத்தைத் தெரிவித்துள்ளது. தமிழக முதலமைச்சர் எப்போதும்போல, ஒவ்வொரு முறை மீனவர்கள் இலங்கை கடற்படையினால் கைது செய்யப்படும்போதும், பிரதமருக்கு ஏற்கனவே எழுதிய கடிதத்தின் நகலை எடுத்து, அதை மத்திய அரசுக்கு அனுப்பி வைத்துவிட்டு, தனது கடமை முடிந்து விட்டதாக கருதி விட்டார்.

ஒவ்வொரு மாநிலத்திலும் முதலமைச்சராக தேர்ந்தெடுக்கப்படுபவர்கள், பதவியேற்றதும் உடனடியாக டெல்லி சென்று பிரதமரையும், மற்ற மத்திய அமைச்சர்களையும் நேரில் பார்ப்பதும், அவர்களிடம் மாநில பிரச்னைகளையும், கோரிக்கைகளையும் விவாதிப்பதும் வாடிக்கை. அதைப் பயன்படுத்திக் கொண்டுகூட நம்முடைய முதலமைச்சர் டெல்லி சென்று இவ்வாறு இலங்கைக் கடற்படையினரால் அவ்வப்போது சிறைப்பிடிக்கப்படும் தமிழக மீனவர்களுக்கு முடிவின்றி தொடரும் துயரத்தை எடுத்துக்கூறி தீர்வு காண முயற்சி செய்திருக்கலாம்.

ஏற்கனவே இந்திய மீனவர்களின் பிரச்னை குறித்து இரண்டு நாடுகளுக்கும் இடையே நடைபெற்ற பேச்சுவார்த்தை முடிவு காணப்படாமல் அந்தரத்தில் தொங்குகிறது. இந்தத் தீர்வு எட்டப்படாத பிரச்னையில் தகுந்த முடிவு காண இந்திய அரசு இனியாவது அக்கறை செலுத்துமா? அல்லது எப்போதும் நடைபெறுகின்ற ஒரு தொடர் சம்பவம் தானே என்று அலட்சிய எண்ணத்தோடு விட்டு விடுமா?

மாநில அரசு இனியும் இந்தப் பிரச்னையை கடிதம் மட்டும் எழுதித் தீர்வு காணும் பிரச்னையாகக் கருதாமல், நேரடியாகச் சென்று மீனவர்களின் வாழ்க்கையைப் புரட்டிப்போடும் இப்படிப்பட்ட சம்பவங்களுக்கு ஒரு முற்றுப்புள்ளி வைத்திடத் தேவையான அக்கறையோடும் அனுதாபத்தோடும் முயற்சிக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்" என்று கூறி உள்ளார்.

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close