Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

சூர்யா அப்படி செய்தது சரியா?
‘ஓங்கி அறைஞ்சா ஒன்றரை டன் வெயிட்றா.. பார்க்கிறியா?’ என்று பப்ளிக்கிலும் நிரூபித்து விட்டார் சூர்யா. இதற்குக் காரணம், ஒரு பெண்மணி காரில் போட்ட சடர்ன் பிரேக். பெண்களுக்கு ஒரு பிரச்னை என்றால், சினிமாவில்தான் ஹீரோ பொங்கி எழுவார்கள். ஆனால் நிஜத்திலும் ஒரு ஹீரோ, பெண்ணுக்காகக் களம் இறங்கி, அநியாயத்தைத் தட்டிக் கேட்டதுதான் வெயிலைத் தாண்டியும் செம ஹாட்!

நடந்தது என்ன?

பாரிமுனையைச் சேர்ந்த பிரேம்குமார், அடையார் பாலத்துக்குக் கீழே தனது பைக்கில் சென்று கொண்டிருந்தார். அப்போது முன்னால் சென்ற கார் ஒன்று திடீரென சடர்ன் பிரேக் அடிக்க, நிலைகுலைந்து போன பிரேம்குமார், தடாலென அந்த காரின் பின்புறம் இடித்துவிட... 'தம்பி, ஒழுங்கா வண்டி ஓட்டமாட்டியா...?" என்று காரிலிருந்து இறங்கிய பெண்மணியும், "ஹலோ மேடம், நீங்க ஒழுங்கா பிரேக் போடுங்க...!" என்று பிரேம்குமாரும் நடுரோட்டில் வாக்குவாதம் செய்ய... பின்னால் செம டிராஃபிக்.

இந்த காருக்குப் பின்னால், சூர்யாவின் ஆடி A8. சண்டை முற்றிக் கொண்டே போக, ‘இனிமே சார்ஜ் எடுத்தாதான் சரியா வரும்’ என்று முடிவெடுத்து காரிலிருந்து இறங்கிய சூர்யா, ‘‘பொண்ணுங்ககிட்ட எப்படிப் பேசணும்னு தெரியாது...?’’ என்று பிரேம்குமாரின் கன்னத்தில் ‘சிங்கம்’ பாணியில் அறைவிட, ‘‘வாந்தி வர்ற அளவுக்கு ஓங்கி அடிச்சுட்டார் சூர்யா. என் உயிருக்குப் பாதுகாப்பு வேணும்!’’ என்று பாரிமுனை போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்து, இப்போது அதை வாபஸும் வாங்கி விட்டார் பிரேம்குமார்.இதற்கிடையில் காரில் சடர்ன் பிரேக் பிடித்த புஷ்பா கிருஷ்ணசாமி என்ற அந்தப் பெண்மணி, ட்விட்டரில் சூர்யாவுக்கு நன்றி தெரிவிக்க... பதிலுக்கு சூர்யாவும், ‘உங்கள் தைரியத்துக்குப் பாராட்டுகள்’ என்று மாறி மாறி நன்றி தெரிவித்துக் கொண்டிருக்க, ‘சூர்யா, மனித உரிமையை மீறி சட்டத்தைக் கையில் எடுத்தது தவறு’ என்றும்... ‘அவர் பெண்களுக்காகச் செய்த இந்தச் செயல் சரியே’ என்றும் ‘Savedwoman’ என்ற பெயரில் ஹேஷ்டேக் உருவாக்கி நெட்டிசன்கள் பிஸியாகிவிட்டார்கள்.

கூலாக முடிய வேண்டிய பிரச்னை, வெயில் நேரம் என்பதாலோ என்னவோ செம ஹாட் ஆகிவிட்டது. ''இருந்தாலும் நடிகர் சூர்யா, அந்தப் பெண்ணுக்கு உதவும் நோக்கில் தட்டிக் கேட்டது சரிதான். ஆனால், பிரேம்குமாரைக் கை நீட்டி அடித்தது தவறு!'' என்கிறார் பிரபல மனநல நிபுணர், மருத்துவர் அபிலாஷா,  ‘‘வெயிலோ, மழையோ - நடுரோட்டில் ஏற்படும் எந்தப் பிரச்னையையும் ஈஸியாகக் கையாளலாம்!’' என்றும் சொல்கிறார் அவர்.பெண்கள்/ஆண்கள் - வெளியே கிளம்பும்போதும், வாகனம் ஓட்டும்போதும் கவனிக்க வேண்டியவை என்னென்ன?


 

1. முதலில் நாம் பொறுமை இழப்பது சிக்னல்களில்தான். சிக்னலில் நிற்கும்போது, ஆரஞ்சு விளக்கு எரியும் முன்பே ஆக்ஸிலரேட்டரை முறுக்குவதில் உற்சாகமாக இருக்கும் நாம், சிக்னலில் சிவப்பு விளக்கு எரிய ஆரம்பிக்கும்போது பிரேக் பிடிப்பதற்கு யோசிக்க மறுக்கிறோம். சட்டத்துக்குக் கட்டுப்படுவது ரெண்டாவது விஷயம் - முதலில் மனசாட்சிக்குக் கொஞ்சம் இடம் கொடுக்கலாமே பாஸ்!

2. கிளம்பும்போது, எப்போதுமே கால்மணி நேரம் அல்லது அரைமணி நேரம் முன்கூட்டியே கிளம்பிப் பாருங்களேன். ஆச்சர்யமாக சிக்னலில் நின்றாலும், சிக்கலாக ஃபீல் செய்யமாட்டீர்கள். வெயில் காலத்தில் பொதுவாகவே எல்லோருக்கும் கோபமும், எரிச்சலும் இருக்கும். இந்த நேரத்தில் விட்டுக் கொடுப்பவர்கள் கெட்டுப் போகமாட்டார்கள்.

3. ‘நான் நல்லா ஓட்டுறேனா... ஏதாவது தப்பு இருக்கா?’ என்று உங்கள் டிரைவிங் ஸ்டைல் பற்றி, உறவினர்கள் அல்லது எக்ஸ்பெர்ட்டுகள் யாரிடமாவது மனம் திறந்து கேளுங்கள். இதிலெல்லாம் ஈகோ பார்க்காதீர்கள்.

4. எப்போதுமே கிளம்பும்போது பசியுடன் கிளம்பாதீர்கள். வெறும் வயிற்றுக்காரர்களுக்கு, வெயில் நேரத்தில் டென்ஷன் வயிறைத் தாண்டி தலை உச்சிக்கு ஏறும். கூடவே, எப்போதும் ஒரு வாட்டர் பாட்டிலை வைத்திருங்கள். தண்ணீர் குடிக்கும்போது கோபம் தணியும் வாய்ப்பிருக்கிறது. யாராவது இடித்துவிட்டால், நம்மையும் மீறி வாக்குவாதம் முற்றும்போது நிறுத்திக் கொண்டு, 'இன்ஸூரன்ஸ்' கிளைம் செய்து கொள்ளலாம் என்கிற ரீதியில், பிரச்னைகளை முடிவுக்குக் கொண்டு வரப் பாருங்கள்.

5. எப்போ பார்த்தாலும் ஸ்ட்ரெஸ்ஸிலேயே இருக்காதீர்கள். ‘ச்சே... சீக்கிரம் போய் ஆகணுமே’ என்று கடுப்பாகாமல், என்ஜாய் பண்ணி டிரைவிங் செய்யுங்கள். ‘வாவ்... அதுக்குள்ள வந்துடுச்சா!’ என்று ஆச்சர்யப்படுவீர்கள்.

6. பெரும்பான்மையான விபத்துகளுக்குக் காரணம் - கவனக்குறைவும், பொறுமையின்மையும்தான். ‘எப்படியாவது ஓவர்டேக் பண்ணிடணும்’ என்று அவசரப்படாதீர்கள். எப்போதும் இடது பக்கம் ஓவர்டேக் செய்யாதீர்கள். தேவையானால் மட்டும் ஹார்ன் அடியுங்கள்.

7. யாராவது உங்களை ஓவர்டேக் செய்தால், கோபப்படாதீர்கள். முக்கியமாக குழந்தைகளுடன் வாகனம் ஓட்டிச் செல்பவர்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் செயல்படுவது நல்லது. அவர்கள் முன்பு, தேவையில்லாமல் சண்டை போடாதீர்கள். உங்களுடைய குழந்தையின் எதிர்காலம் முக்கியம்!

8. கிளம்பும்போது வாகனத்தைத் துடைப்பதோடு மட்டும் நிறுத்தாமல் - டயர் பிரஷர், பெட்ரோல், பிரேக் என்று எல்லாவற்றையும் செக் செய்துவிட்டுக் கிளம்புங்கள்.

9. எப்போதும் ரிசர்விலேயே பைக்கை/காரை ஓட்டாதீர்கள். இது முக்கியமான நேரங்களில் டென்ஷனுக்கு வழிவகுக்கும். உங்களை நடுரோட்டில் வண்டி தள்ளவும் வைத்துவிடும்.

10. ஒருவர் விபத்தாகி விழுந்துவிட்டால்,  தாண்டிப் போகாமல் அவருக்கு மனிதாபிமானத்துடன் உதவுங்கள். பிரச்னைகளை அப்புறம் டீல் செய்யலாம்.

(கொசுறு: போகும் பாதையை முன்கூட்டியே முடிவு செய்துவிட்டுக் கிளம்புங்கள். ‘தடால் தடால்’ என சடர்ன் பிரேக் போடாதீர்கள். திரும்பவும் கட்டுரையின் முதல் பாராவைப் படியுங்கள்!)

- தமிழ்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

“மாட்டின் மீதான அக்கறை, சிசுக்கள் மீது கிடையாதா?!” நெஞ்சு பொறுக்குதில்லையே #GorakhpurTragedy
Advertisement

MUST READ

Advertisement
[X] Close