Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

ஆதாரத்தை திரட்டிய அறிவாலயம்! -களையெடுப்பு படலம் ஆரம்பம்

சட்டமன்ற தேர்தலில் கட்சிக்குத் துரோகம் செய்தவர்கள் பட்டியலை தயாரிக்கும் வேலையில் மும்முரமாகியுள்ளது தி.மு.க தலைமை. 'இன்னும் சில நாட்களில் மாவட்ட நிர்வாகிகள் மாற்றம் இருக்கும்' என்கின்றனர் அறிவாலய வட்டாரத்தில்.

தி.மு.க வட்டாரத்தைப் பெரிதும் அதிர வைத்த நிகழ்வு அது. தேர்தல் தோல்விக்குப் பிறகு நடந்த தி.மு.க தலைமை செயற்குழு கூட்டத்தில், தி.மு.க வேட்பாளர்களின் அடுத்தடுத்த புகாரால் ஆடிப் போனது அறிவாலய வட்டாரம். அதிலும், ' ஒவ்வொரு மாவட்டத்திலும் எந்த நிர்வாகி, எப்படி விலை போனார்...கழக வேட்பாளருக்கு எதிராக என்னென்ன சதி வேலைகள் செய்தார்' என்பது பற்றி கருணாநிதியிடம் நேருக்கு நேராக புகார் வாசித்தனர் வேட்பாளர்கள். இதில் ஹைலைட்டாக இருந்தது, கோவை வடக்குத் தொகுதி வேட்பாளர் மீனா லோகுவின் ஆவேசப் பேச்சுதான். 'இந்த ஒரு லேடியை வீழ்த்தணும்னு மாவட்டச் செயலாளர் வரிந்துகட்டிக் கொண்டு வேலை பார்த்தார். இப்ப என்ன நடந்தது... ஒட்டுமொத்தமா ஒரு லேடி பின்னால தமிழ்நாடு போயிருச்சு...' என சரவெடியாக வெடித்தார்.

இதேபோல், சுமார் எட்டு மாவட்டங்களில் இருந்து கட்சி நிர்வாகிகள் மீது அதிரடியான புகார்கள் கிளம்பின. மதுரையில் அழகிரியோடு கை கோத்துக் கொண்டு செயல்பட்ட கட்சி நிர்வாகிகள் பட்டியலும் ஸ்டாலின் வசம் அளிக்கப்பட்டுள்ளது. தென்மாவட்ட பிரமுகர் ஒருவர் அளித்த புகாரில், 'ஒவ்வொரு மாவட்டத்திலும் கட்சியின் சீனியர்கள் கோலோச்சுகின்றனர். தூத்துக்குடியில் பெரியசாமி, நெல்லையில் ஆவுடையப்பன், திருச்சியில் நேரு என முன்னணி நிர்வாகிகள் பலரும் தாங்கள் வெற்றி பெற்றால் போதும் என கழகத்தின் மற்ற வேட்பாளர்களைக் கண்டு கொள்வதில்லை. இதனால்தான் தோல்வி ஏற்பட்டது' எனவும் புகார் சென்றுள்ளது.

இதுபற்றி நம்மிடம் பேசிய அறிவாலய நிர்வாகி ஒருவர், " தேர்தலில் தோற்றுப் போன வேட்பாளர்களிடம், ' எழுத்துப்பூர்வ அறிக்கையைத் தயார் செய்து அனுப்புமாறு' தலைமை அறிவுறுத்தியுள்ளது. மாவட்ட நிர்வாகிகள், ஒன்றியச் செயலாளர்கள், வார்டு செயலாளர்கள் என தேர்தல் நேரத்தில் கழக வேட்பாளருக்கு ஆதரவு கொடுக்காமல், எதிர்க்கட்சிக்கு வேலை பார்த்தவர்கள் பட்டியலைத் தயாரிக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. உள்ளாட்சி தேர்தலுக்குள் களையெடுத்தால் மட்டுமே, நாடாளுமன்றத் தேர்தலை உற்சாகமாக எதிர்கொள்ள முடியும் என தலைமை உறுதியாக இருக்கிறது. நாளை தலைவரின் பிறந்தநாள் விழா நடைபெற இருப்பதால், அதற்கு அடுத்து வரும் நாட்களில் ஒவ்வொரு மாவட்டத்திலும் களையெடுப்பு பணிகள் தீவிரமடையும்" என்றார்.

' களையெடுப்பு யார் மீது பாயும்?' என அறிவாலயத்தையே வலம் வந்து கொண்டிருக்கிறார்கள் மாவட்ட நிர்வாகிகள் சிலர்.


-ஆ.விஜயானந்த்
 

எடிட்டர் சாய்ஸ்

MUST READ