Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

திருமாவிடம் பேசிய இளங்கோவன்! -புதுக்கூட்டணிக்கு அச்சாரம்?

விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவனிடம், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், கூட்டணித் தொடர்பாக பேசியதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனையடுத்து 'காங்கிரஸ் அணிக்குள் நாங்கள் இடம் பெறுவது உறுதியாகிவிட்டது' என்கிறார்கள் வி.சி.கவினர்.

சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க  கூட்டணியில் காங்கிரஸ் போட்டியிட்டது. ஆனால் தேர்தலில் எதிர்பார்த்த வெற்றி கிடைக்காததால் அதிருப்தியில் இருக்கிறார்கள் காங்கிரஸ் தொண்டர்கள். அதிலும், 'பல தொகுதிகளில் தி.மு.க நிர்வாகிகளின் செயல்பாட்டால்தான் தோல்வி ஏற்பட்டது' என காங்கிரஸ் கமிட்டி நிர்வாகிகளிடையே கடும் அதிருப்தி நிலவுகிறது.

இந்நிலையில், 'வரவிருக்கின்ற உள்ளாட்சி மற்றும் நாடாளுமன்ற தேர்தல்களில் எத்தகைய நிலைப்பாட்டை எடுக்க வேண்டும்?' என்பது குறித்து காங்கிரஸ் கமிட்டி நிர்வாகிகளிடம் ஆலோசனை நடத்தி வருகிறார் இளங்கோவன்.

குறிப்பாக, நாடாளுமன்றத் தேர்தலில் மெகா அணியைக் கட்டமைப்பது தொடர்பான பணிகளை காங்கிரஸ் தொடங்கிவிட்டது. நேற்று காலை சுமார் அரை மணி நேரம்,  வி.சி.க தலைவர் திருமாவளவனிடம் பேசியிருக்கிறார் இளங்கோவன். சட்டமன்றத் தேர்தல் அனுபவம், நாடாளுமன்றத் தேர்தலில் எதிர்கொள்ள வேண்டியவை, காங்கிரஸ் கட்சியின் அடுத்தக்கட்ட பயணம், தலைவர் பதவிக்கு வரப் போகும் ராகுல்... என இருவருக்குமிடையே அந்த தொலைபேசி உரையாடல் நீண்டுள்ளது.

இதுபற்றி நம்மிடம் பேசிய விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மாநில நிர்வாகி ஒருவர், " சட்டமன்றத் தேர்தல் தோல்விக்குப் பிறகு கட்சியின் அடிப்படைக் கட்டமைப்பை வலுப்படுத்தும் வேலைகளைத் தொடங்கியிருக்கிறோம். கூடவே, நாடாளுமன்றத் தேர்தலுக்கான அடிப்படை வேலைகளை தொடங்கிவிட்டோம். பொதுவாக, காங்கிரஸ் கட்சியின் வாக்கு வங்கி என்பதே தலித் மக்களின் வாக்குகள்தான். இந்த வாக்கு வங்கி உடைந்ததால்தான், காங்கிரஸ் இளம் தலைவர் ராகுலின் பயணமும் தலித்துகளை நோக்கியே இருந்து வந்தது. ஒவ்வொரு மாநிலங்களிலும் தலித் தலைவர்கள் உருவானதால்தான், காங்கிரஸின் தலித் வாக்கு வங்கி உடைபட்டுப் போனது. இந்த சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க நிர்வாகிகள் சிலரின் அணுகுமுறையால், பெரும்பாலான இடங்களில் காங்கிரஸ் வேட்பாளர்கள் வெற்றி பெற முடியவில்லை என்ற புகைச்சல் அவர்களுக்குள் இருக்கிறது.

எனவே, 'நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கிவிட்டால், தி.மு.கவின் தயவு காங்கிரஸ் கட்சிக்குத் தேவையில்லை. அப்போது காங்கிரஸை நம்பித்தான் தி.மு.க களம் அமைக்க வேண்டியது வரும். அப்போது கூட்டணிக்குள் யார் வர வேண்டும்? என்பதை இளம் தலைவர் ராகுல் முடிவு செய்வார்' என்பதுதான் காங்கிரஸ் நிர்வாகிகளின் கருத்தாக இருக்கிறது. தவிர, பா.ஜ.கவுக்கு எதிரான மதச்சார்பற்ற அரசியல் அணியைக் கட்டமைக்க வேண்டுமென்றால், முற்போக்கு சக்திகள் அணி திரண்டால் மட்டுமே அது சாத்தியமாகும்.

அந்த வகையில், காங்கிரஸ் அணிக்குள் நாங்கள் இடம் பெறுவோம். எங்களோடு வருவதுதான் இடதுசாரிகளுக்கும் பொருத்தமாக இருக்கும். அதை நோக்கித்தான் தலைவர் திருமாவின் அரசியல் பயணம் தீவிரமடைந்து வருகிறது. அதற்கு அச்சாரம் போடும் விதமாகத்தான் இளங்கோவனோடு எங்கள் தலைவர் வெகுநேரம் விவாதித்தார்" என்றார்.

இளங்கோவன் போடும் புது அச்சாரம், கூட்டணி சக்கரத்தை எப்படி இழுத்துக் கொண்டு போகப் போகிறது என்பதற்கான விடை வரும் நாட்களில் தெரிந்துவிடும்.

-ஆ.விஜயானந்த்

 

எடிட்டர் சாய்ஸ்

MUST READ