Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

ஊழலில் புரளும் உன்மத்தர்களைத் திருத்திட ஓய்வின்றி உழைத்திடுவோம்: கருணாநிதி அழைப்பு!

சென்னை: ஊழல் சாக்கடையில் புரளும் உன்மத்தர்களைத் திருத்திட ஓய்வின்றி உழைத்திடுவோம் என தி.மு.க தொண்டர்களுக்கு கருணாநிதி அழைப்பு விடுத்துள்ளோர்.

இதுகுறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில், ''உணர்வில்லா மாந்தர்க்கு உணர்வூட்டுவோம்! உழைப்பை மறந்து ஊழல் சாக்கடையில் புரளும் உன்மத்தர்களைத் திருத்திட ஓய்வின்றி உழைத்திடுவோம்! திராவிடத்தின் துயர் துடைத்துச் செம்மைப்படுத்துவோம்! என என் உயிரினும் மேலான உடன்பிறப்புகளை அன்புக் கரம் நீட்டி அழைக்கிறேன்!

எனது 93-வது பிறந்த நாள்! 92 வயது நிறைவடைந்து, 93-வது வயதில் அடியெடுத்து வைக்கும் இனிய வேளையில், எனை ஈன்று புறந்தந்த என் அருமைத் தாய் அஞ்சுகம் அம்மாள், எனைச் சான்றோனாக்கிய அன்புத் தந்தை முத்துவேலர், கொள்கை வேல் வடித்துத் தந்து வழிப்படுத்திய தந்தை பெரியார், அவையத்து முந்தியிருக்கச் செய்த பேரறிஞர் அண்ணா, அரசியல் களத்தில் வெற்றிகள் குவித்திடத் தோள் வலிமை தந்து, துணைபுரிந்து உதவிய கெழுதகை நண்பர்கள், 'இருக்கிறோம் நாங்கள் எதையும் தாங்கும் இதயத்தோடு; என்றும் உன் அருகில்' என்று எனை எப்பொழுதும் இயக்கிக் கொண்டிருக்கின்ற என் உயிரினும் மேலான அன்பு உடன்பிறப்புகள் அனைவரையும் எண்ணி மகிழ்கிறேன்; உள்ளத்தால் வணங்குகிறேன்! தமிழகத்தில் 15-வது சட்டமன்றத்திற்கான தேர்தல் முடிந்து - ஆட்சி அமைக்கும் வாய்ப்பினை நூலிழையில் தவறவிட்ட போதிலும், திராவிட முன்னேற்றக் கழகம் 89 இடங்களைப் பெற்று - தமிழகச் சட்டப்பேரவை வரலாற்றில் இதுவரை இல்லாத அளவிற்கு மிகப் பெரிய எதிர்க்கட்சியாக உருவெடுத்து; மு.க.ஸ்டாலின் எதிர்க்கட்சித் தலைவர் பொறுப்பை ஏற்றும் கொண்டுள்ள வேளையில் வரும் எனது பிறந்த நாளில் எனது அருமை உடன்பிறப்புகள் அனைவருக்கும் இதயமார்ந்த நல்வாழ்த்துக்களை உரித்தாக்குகிறேன்.

நடைபெற்று முடிந்த சட்டமன்றத் தேர்தலில் ஜனநாயக நெறிமுறைகளுக்கு முற்றிலும் மாறுபாடான பல செயல்பாடுகளைக் காண முடிந்தது. தேர்தல் ஆணையம் திட்டமிட்டு நமக்கு எதிராகவே செயல்பட்டுள்ளது. தமிழகக் கட்சிகளோ, 2011-2016 ஐந்தாண்டு கால அ.தி.மு.க அரசின் அடாவடிகளை, அரசியல் நாகரிகமற்ற அணுகுமுறைகளை, ஜனநாயக விரோதச் செயல்பாடுகளை, செயல்திறனற்ற அரசின் முறைகேடுகளை, ஊரே நாறும் ஊழல் நடவடிக்கைகளை எல்லாம் தொடர்ந்து கண்டித்து வந்தபோதும், 2016 தேர்தலில் அக்கட்சியே வெற்றி பெறுவதற்குக் கொல்லைப்புறத்தில் குறுக்கு வழிவகுத்து, நமது திராவிட முன்னேற்றக் கழகத்தின் வெற்றியை எப்பாடு பட்டேனும் தடுப்பதிலேயே சில கட்சிகள் குறியாய் நின்றன.

மத்திய அரசும், அதன் அமைச்சர்களும் அ.தி.மு.க அரசைக் கடுமையாகக் குறை கூறிக் கொண்டே, முதலமைச்சரை மத்திய அமைச்சர்களாலேயே சந்திக்க முடியவில்லை எனக் குற்றம் சுமத்திக் கொண்டே, தேர்தல் நேரத்தில் அக்கட்சியின் தில்லுமுல்லுகளுக்கெல்லாம் வெளிப்படையாகவே துணைபோன காட்சிகளைத்தான் காண முடிந்தது நம்மால். கரூர் அன்புநாதன் இல்லத்தில் கைப்பற்றப்பட்ட கோடிக்கணக்கான ரூபாய் பணம், திருப்பூரில் 570 கோடி ரூபாயுடன் பிடிபட்ட கண்டெய்னர் லாரிகள், அங்கிங்கெனாதபடி வாக்காளர்களுக்குப் பல தவணைகளில் அ.தி.மு.க அள்ளி வீசிய பணம், எல்லாம் அரசியல் கட்சியின் தலைவர்களால், செய்தி ஊடகங்களால், செய்தி ஏடுகளால், இன்று மறக்கப்பட்ட ஒன்றாகவே மாறிவிட்டனவே? அ.தி.மு.க 2011-2016 ஆட்சி காலத்தில் வளர்ச்சிப் பணிகளில் கவனம் செலுத்தவில்லை; கழக ஆட்சியில் தொடங்கப்பட்ட வடசென்னை, மேட்டூர், வல்லூர் அனல் மின் திட்டங்களின் பயன்களை நுகர்ந்ததே அல்லாமல், புதிய ஒரு மின் திட்டத்தைக்கூட, ஒரு மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யும் திட்டத்தைக்கூட தொடங்கிடவில்லையே? விலைவாசிகளைக் குறைக்கவில்லையே? இளைஞர்களின் வேலைவாய்ப்புகளுக்கு வழிசெய்யப்படவில்லையே? இருந்த தொழில்களை மூடியதுடன், புதிய தொழில் ஒன்றைக்கூடத் தொடங்கிடாமல், தொழில் வளர்ச்சியில் இந்தியாவின் கடைசி மாநிலம் என்ற தலைக்குனிவை ஏற்படுத்தியதே? வரலாறு காணா வகையில் பால் விலை உயர்வு, மின் கட்டண உயர்வு, பஸ் கட்டண உயர்வுகளால், மக்கள் பாதிக்கப்பட்டபோதும் கவலைப்படவில்லையே?

ஐந்தாண்டுகளில் பத்தாயிரம் படுகொலைகள், ஏறத்தாழ ஒரு லட்சம் கொள்ளைச் சம்பவங்கள், வழிப்பறிகள், கற்பழிப்புகள் முதலியவைகளால் சட்டம்-ஒழுங்கு கெட்டுக் குட்டிச்சுவரானதும் ஒரு பொருட்டாகத் தெரியவில்லையே? பால் கொள்முதலில் ஊழல், தனியாரிடம் மின்சாரம் வாங்கியதில் ஊழல், அரசு ஊழியர்கள் நியமனத்தில் ஊழல், பருப்பு கொள்முதலில் ஊழல், முட்டை கொள்முதலில் ஊழல், தாது மணல் கொள்ளை ஊழல், கிரானைட் ஊழல் என அரசின் துறைகள் அனைத்துமே ஊழலின் ஊற்றுக் கண்களாகவே மாறிவிட்டனவே? அரியானா மாநிலத்தில் 2010 வரை நடைமுறையில் இருந்த தமிழ் கற்பிக்கும் முறை தொடரவில்லை என்பதைச் சுட்டிக்காட்டி நீதிமன்றம் குட்டு வைக்கும் நிலைக்குத் தமிழ் வளர்ச்சிப் பணிகள் தேங்கி விட்டனவே? இவை போல இன்னும் அடுக்கிக் கொண்டே போகலாம்! இத்தனையையும் புறந்தள்ளி, ஆட்சி அதிகாரம் அவர்களுக்கே தாரை வார்க்கப்பட்டிருக்கிறது என்றால் ஒரு பழமொழிதான் நினைவுக்கு வருகிறது; 'ஆடு, கசாப்புக் கடைக்காரனைத் தான் நம்புகிறது'.

இருந்தபோதிலும், பல ஆண்டுகாலம் போராடி, தியாகங்கள் புரிந்து, உயிர்ப்பலிகள் தந்து, தமிழும் - தமிழ் மக்களும் - தமிழ்ப் பண்பாடும் - தமிழக முன்னேற்றமும் மட்டுமே நமது குறிக்கோள்கள் என, நாம் அரும்பாடுபட்டு தொழில் வளர்ச்சியில் தமிழகம் முதலிடம், வேளாண்மை உற்பத்தியில் முன்னணி மாநிலம், பொருளாதார வளர்ச்சியில் முதல் வரிசை மாநிலம், கல்வி வளர்ச்சியில் முன்னணி மாநிலம் என்பன போன்ற நாம் படைத்த சாதனைகள் எல்லாம் சரிவடைந்து கொண்டிருக்கின்ற கொடுமைகளைக் கண்டு சகித்துக் கொண்டிருக்க முடியுமா? அவற்றால், பாதிக்கப்படுவது நமது தமிழினம் அல்லவா? இதை இப்படியே விட்டுவிட்டால் நாளைய தலைமுறை, பழிக்குமே நம்மை. இதை எண்ணி விழிப்புடன் செயல்படுவோம்! உணர்வில்லா மாந்தர்க்கு உணர்வூட்டுவோம்! உழைப்பை மறந்து ஊழல் சாக்கடையில் புரளும் உன்மத்தர்களைத் திருத்திட ஓய்வின்றி உழைத்திடுவோம்! திராவிடத்தின் துயர் துடைத்துச் செம்மைப்படுத்துவோம்! என என் உயிரினும் மேலான உடன்பிறப்புகளை அன்புக் கரம் நீட்டி அழைக்கிறேன்!'' எனக் கூறியுள்ளார்.

எடிட்டர் சாய்ஸ்

ஜெர்சி மாடுகள், பிரேசில் காபி, மருத்துவமனை உறுதி! ஜெயலலிதா பற்றி தோழியின் நினைவலைகள்
placeholder

அதே மாதிரி ஜெயலலிதா தன்னுடைய 10 வயதில் சிவாஜி கணேசன் முன்னிலையில் மயிலாப்பூரில் செய்த நடன அரங்கேற்றப் படங்கள் முதல் அதற்குப் பிறகான அவரது சின்ன வயசுப் படங்களை நாங்கள் தொகுத்திருந்தோம். அதை 2012 ம் ஆண்டு, எனக்கு அவரை சந்திக்கும் வாய்ப்புக் கிடைத்த போது கொடுத்தேன். அதைப் பார்த்து ரொம்ப சந்தோஷமாகிட்டாங்க. அந்தப் படத் தொகுப்பை, தன்னோட ஹேண்ட் பேக்ல வச்சுக்கிட்டாங்க. பத்திரமா வைத்துக் கொள்வதாகவும் சொன்னாங்க. சினிமாக்காரங்க என்றால் ஈஸியாக அணுகலாம் என்கிற திரையை உடைத்து, அவங்க தனி ரூட்டைப் போட்டு, அதை மத்தவங்க ஃபாலோ பண்ற அளவுக்கு வாழ்ந்து காட்டினாங்க. குறிப்பா, சினிமா விழாக்கள், நிகழ்ச்சிகளுக்கு போக மாட்டாங்க. 

அம்மாவிடமிருந்து போன் வந்தால்...!? - உருகும் வீணை காயத்ரி
placeholder

''சமீபத்தில் கொலை மிரட்டல் விட்டப் பையனால் அம்மாவை சந்திக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. கடந்த ஜூலை 27-ம் தேதி சி.எம் ஆபீஸ்ல இருந்து போன் வந்தது. அம்மா உங்களை உடனே வரச்சொன்னதா சொன்னாங்க. நான் கொஞ்சமும் யோசிக்காமல் போய் நின்னேன். பொதுவாகவே நானும், அவங்களும்தான் தனியாகத்தான் பேசிப்போம். ஆனா, அன்றைக்கு, எல்லா அதிகாரிகளும், இருந்தாங்க. அவங்க முன்னாடி, 'எப்படி இருக்கீங்க' என கேட்டார். நான் பதில் சொல்லிவிட்டு, 'நவம்பர் மாதத்தோடு என்னோட டர்ன் முடியுது' என சொன்னேன். இதற்கு அவர், எல்லோருடைய முன்னிலையிலும், அடுத்த மூன்று வருஷத்துக்கும் நீங்களே துணை வேந்தரா இருங்க என சொல்லிவிட்டு, அவருக்கு பின்னால் இருக்கும் எல்லோரையும் பார்த்து மறுபடியும்  இதையே சொன்னார். அப்போதுதான் அவர்கிட்ட, 'நான் உங்களை சந்திக்க இரண்டு வருஷமாக முயற்சி செய்துட்டு இருந்தேன். இந்த கொலை மிரட்டல் காரணமாகத்தான் உங்களை சந்திக்கிற வாய்ப்பு கிடைச்சிருக்கு, நான் தனி மனுஷியாக இசை பல்கலைக்கழகத்தை நடத்தி வருகிறேன்' என சொன்னேன். உடனே, சம்பந்தப்பட்டவர்களை அழைத்து, அவங்களுக்குத் தேவையான எல்லா உதவிகளையும் செய்து கொடுங்க என சொன்னார்.  'அடுத்த முறைப் பார்க்கும்போது உங்க முகத்துல சிரிப்பை மட்டும் தான் பார்க்கணும்' என ஆறுதல் சொன்னாங்க. அந்த வார்த்தை இன்னும் என் காதில் கேட்டுட்டே இருக்கு. அதுதான் நான் அவங்களை கடைசியாகப் பார்த்தது.  அதற்குப் பிறகு அவரை பார்க்க முடியவில்லை. அவர் சொன்னது போல அதற்கான வேலைகள் நடந்து கொண்டிருக்கும்போதே அம்மா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுட்டாங்க. நான் இப்போ அடுத்த ஆர்டருக்காக காத்திட்டு இருக்கேன். இன்னும் ஆர்டர் என் கைக்கு வரவில்லை''

MUST READ