Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

குணச்சித்திர நடிகர் பாலு ஆனந்த் திடீர் மரணம்


கோவையை சேர்ந்த திரைப்பட இயக்குனரும், குணச்சித்திர நடிகருமான பாலு ஆனந்த், இன்று அதிகாலை மாரடைப்பால் உயிரிழந்தார்.

'நானே ராஜா நானே மந்திரி', 'அண்ணா நகர் முதல் தெரு', 'ரசிகன் ஒரு ரசிகை', 'உனக்காகப் பிறந்தேன்' உள்ளிட்ட பல திரைப்படங்களை இயக்கியவர் பாலு ஆனந்த். இன்றைய தலைமுறைக்கு நடிகராகவும் அறிமுகமானவர் பாலு ஆனந்த். 'வானத்தைப் போல', 'உன்னை நினைத்து' உள்ளிட்ட பல படங்களில் நகைச்சுவை, குணச்சித்திர நடிகராகவும் நடித்து வந்தார்.

கோவையை அடுத்த காளம்பாளையத்தைச் சேர்ந்த பாலு ஆனந்த்,  இயக்குனர் ஆர்.சுந்தர்ராஜனின் உதவியாளராக 'பயணங்கள் முடிவதில்லை' படத்தின் மூலம் திரைத்துறையில் கால் பதித்தார். ஆர்.சுந்தர்ராஜனிடம் 28 படங்கள் உதவியாளராக இருந்த பாலு ஆனந்த், தொடர்ந்து திரைப்படங்களை இயக்கவும் செய்தார். இன்றும் மக்களால் ரசித்து பார்க்கப்படும் படங்களான 'நானே ராஜா நானே மந்திரி', 'அண்ணாநகர் முதல் தெரு' ஆகிய படங்களை இயக்கியவர் பாலு ஆனந்த் தான்.
 

அதன் பின்னர் 'ரசிகன் ஒரு ரசிகை', 'உனக்காகப் பிறந்தேன்', 'ராஜாதிராஜ ராஜமார்த்தாண்ட காத்தவராயன்', 'பொட்டுவச்ச நேரம்' போன்ற சில படங்களை அவர் இயக்கினாலும் அந்த படங்கள் சரியாக போகவில்லை. அண்மையில் பவர் ஸ்டார் கதாநாயகனாக நடித்த 'ஆனந்த தொல்லை' படத்தை இயக்கினார். ஆனால் அது வெளியாகவே இல்லை. இதற்கிடையே 'வானத்தைப்போல', 'உன்னை நினைத்து' போன்ற படங்களில் நகைச்சுவை, குணச்சித்திர, வில்லன் கதாபாத்திரங்களிலும் பாலு ஆனந்த் நடித்தார்.

இந்நிலையில் கோவை, காளப்பாளையத்தில் உள்ள சொந்த வீட்டில் குடும்பத்தினரோடு இருந்த பாலு ஆனந்துக்கு இன்று அதிகாலை திடீர் மாரடைப்பு ஏற்பட்டது. மருத்துவமனை கொண்டு செல்லும் வழியில் இறந்தார். இதையடுத்து பாலு ஆனந்தின் உடல் மீண்டும் கோவை காளப்பாளையத்தில் உள்ள வீட்டுக்கு கொண்டு வரப்பட்டு, அங்கு பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. இன்று மாலை வீரகேரளம் பகுதியில் உள்ள மாநகராட்சி மின் மயானத்தில் பாலு ஆனந்துக்கு இறுதிச்சடங்குகள் நடைபெறுகிறது. இறந்த பாலு ஆனந்திற்கு உமா மகேஸ்வரி என்ற மனைவியும், சரவணன் என்ற  மகனும் மற்றும் ஐஸ்வர்யா என்ற மகளும் உள்ளனர்.  இவர் அதிமுகவில் தலைமை கழக பேச்சாளராக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

ச.ஜெ.ரவி

எடிட்டர் சாய்ஸ்

அப்போலோ டூ எம்.ஜி.ஆர் சமாதி... ஜெயலலிதாவுக்கு அரண் அமைத்த மன்னார்குடி!

MUST READ