Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

மரணப்படுக்கையில் மாநில மரம்...கண்டுகொள்ளுமா தமிழக அரசு

லகிலுள்ள மொழிகளுக்கு எல்லாம் மூத்த மொழி தமிழ் மொழி. தமிழ் மொழியின் எழுத்துகள் முதன் முதலில் பதியப்பட்டது பனை ஓலையில்தான். பனைமரம் தான் தமிழரின் அடையாளம். மலேசியாவில், ஈழத்தில், மொரீசியஸ் தீவில், தென்னாப்பிரிக்காவில், தமிழகத்தில் என தமிழர் வளர்ந்த இடங்களில் எல்லாம் பனைமரமும் வளர்ந்தது. தமிழகத்தின் மாநில மரம் என்ற பெருமை கொண்டதும் பனைமரம்தான்!

தமிழ்நாட்டின் கால நிலையை ஒத்த மிதவெப்ப மண்டல பகுதிகளில் வளரும் தன்மையுள்ள பனை, குறைந்தது 60 வருடங்களுக்கு மேல் வாழும். வேர் முதல் நுனி வரை பனையின் ஒவ்வொரு பகுதியும் நமக்கு பயன் தருபவை. இதனாலேயே கேட்டதைக் கொடுக்கும் தேவலோகத்து மரமான கற்பகதருவுக்கு ஒப்பிட்டு "பூலோகத்து கல்பகதரு" என்றார்கள் நம் முன்னோர்கள்.

மிக நீளமான உறுதியான சல்லி வேர் தொகுப்பை இது பெற்றிருப்பதால் மண் அரிப்பைத் தடுக்கும் இயற்கையான அரணாக நம் முன்னோர் இதனை வயல் வரப்புகளிலும் குளம், கால்வாய்கள், ஆற்றுப்படுகைகளிலும் கடலை ஒட்டிய பகுதிகளிலும் வளர்த்தனர். இடத்தின் எல்லைகளைக் குறிக்கவும் வயல்களிலும் தோட்டங்களிலும் நட்டனர். கரும் பாறையைப் போன்ற உறுதியான பனையின் தண்டுப்பகுதி குடிசை மற்றும் ஓட்டு வீடுகளில் பனங்கையாகவும் பனம் வரிச்சலாகவும் சிறு கால்வாய்கள், வாய்க்கால்களைக் கடக்க உதவும் மரப்பாலமாகவும் பயன்படுகிறது.

பல சங்க இலக்கிய நூல்கள் கிடைக்கப்பெற்ற ஓலைச்சுவடி என்று சிறப்பித்து கூறப்படுவது பனை தான். பனைமரம் என்ற ஒன்று இல்லாத நிலையை கற்பனை செய்தால் ஒருவேளை சங்கத்தமிழ் நூல்களும் பல வரலாற்றுக் குறிப்புகளும் நமக்கு கிடைக்காமலேகூட போயிருக்கலாம் என்ற அதிர்ச்சி கிடைக்கிறது.
பனையின் பரிமாணங்கள்

சங்க காலத்தில் செய்தி பரிமாற்றங்கள் பனை ஓலையில்தான் நடைபெற்றன. கடும் புயலைக்கூட தாங்கி நிற்ககூடிய வீடுகளை நம்முன்னோர் பனை ஓலையால்தான் முடைந்தனர். தோல்பொருட்கள், பிளாஸ்டிக் பொருட்களின் வரவுக்கு முன்னால் பனை ஓலைகளைக் கொண்டுதான் கூடைகள், சாப்பிட உதவும் தொன்னைகள், குதிர்கள், பெட்டிகள், பாய்கள் போன்றவற்றை நம் முன்னோர் செய்து பயன்படுத்தினர். பனை ஓலையில் வைக்கப்படுகின்ற பொருட்கள் எளிதில் கெட்டுப் போகாது என்பதால் இன்றும்கூட கிராமப்புறங்களில் உணவுகளைப் பனை ஓலையில்தான் கொடுப்பார்கள்.

மின்சாரத்தின் வரவுக்கு முன் வெயில் காலங்களை நம் முன்னோர் பனை விசிறியை பயன்படுத்திதான் சமாளித்தனர். குழந்தைகளின் விளையாட்டு பொருட்கள் பனை மரத்தினால் செய்யப்பட்டன. பனையில் நுங்கு வண்டிகள், காத்தாடிகள், பனை விதைப் பொம்மைகள் செய்து சிறுவர்கள் விளையாடினர். பனை ஓலையைத் தாங்கி நிற்கக் கூடிய மட்டை, வீடுகளைச் சுற்றி வேலி அமைக்கவும், தடுப்புத்தட்டிகள் பின்னுவதற்கும், கயிறு திரிக்கவும் பயன்படுகிறது.

வெயில் காலங்களில் இயற்கை நமக்கு அளித்த கொடை பனை நுங்கு. தித்திக்கும் சுவையுடைய ஜெல்லி போன்ற நுங்கின் சுளை வெயில் காலங்களில் ஒரு சிறந்த அருமருந்தும், சிறந்த குளிர்பானமும்கூட.  தாதுக்கள், வைட்டமின்கள்,  நீர்ச் சத்துக்களைக் கொண்ட ஆரோக்கிய உணவு.

முளைத்து கிழங்கு விட்ட பனை விதை மிகச் சிறந்த சிற்றுணவாக பயன்படுகிறது. அதில் அதிக அளவு நார்ச் சத்துக்கள், தாதுப்பொருட்கள் உள்ளன. பனையிலிருந்து கிடைக்கப்பெறும் பதநீர் ஒரு சிறந்த குளிர்ச்சி தரும் பானமாகும். பதனீரைக் காய்ச்சி பனைவெல்லம் (கருப்பட்டி) செய்யப்படுகிறது. பனைவெல்லம் ஒரு சிறந்த மருத்துவ குணமுடைய இனிப்பு பொருளாகும்.

பனையில் ஆண், பெண் என 2 வகை உள்ளன. பெண் பனையை பருவப் பனை என்றும், ஆண் பனையை அழகுப் பனை எனக் குறிப்பிடுவது வழக்கம். பனை 10 ஆண்டுகளுக்குப் பின்னர் 15 அடி உயரம் வரை வளர்கிறது. அடுத்த 10 ஆண்டுகளுக்குப் பின்னர் தான் பூ பூக்கும். அப்போது தான் ஆண் பனை, பெண் பனைகளை அடையாளம் கண்டறியமுடியும்.

கார்த்திகைத் திருநாளில் கொண்டாட்டத்தில் முக்கியமான அம்சம் மாவலி சுற்றுவது. இன்று வழக்கொழிந்துவிட்ட இந்த மாவலி கொண்டாட்டம் அன்று பிரச்சித்திபெற்றது. ஆண் பனையிலிருந்து பாலைகளை வெட்டி குழி தோண்டி தீ வைத்து மூட்டம் போட்டு கரியாக எடுத்து உரலில் இடித்து துணிப்பையில் வைத்து மாவலி சுற்றுவது இளைஞர்களின் வழக்கமாகும். கார்த்திகை திருநாளன்று எல்லோர் வீட்டின் வாசலிலும் ஒளிப்பிழம்புகளாய் தீப்பொறி பறக்கும் நிகழ்வு தமிழர் பாரம்பரியத்தை சிறப்பாக எடுத்துரைக்கும் நிகழ்வு.

பலன்களை அள்ளி தரும் பனை

பனை மரத்திலிருந்து கிடைக்கும் நுங்கை தொடர்ந்து சாப்பிட்டு வர கோடை காலத்தில் ஏற்படும் வியர்வை கொப்பளங்கள் நீங்கும். தோலுடன் நுங்கை சாப்பிட்டு வர சீதக்கழிச்சல் நீங்கும். பனங்கற்கண்டை சாப்பிட்டு வர அம்மை நோயால் ஏற்பட்ட உடல் வெப்பம் தாகம் போன்றவை நீங்கும். பனங்கிழங்கிற்கு உடல் குளிர்ச்சியை தரும் தன்மை உண்டு. பனங்கிழங்கை சாப்பிட்டு வந்தால் உடல் அழகு பெறும். உடல் பலமும் அதிகரிக்கும். பனையிலிருந்து கிடைக்கும் பதநீர் மேக நோயை தீர்க்கவல்லது.

அழிவின் விளிம்பில் பனை மரங்கள்

காடுகள் பெருமளவிற்கு அழிக்கப்பட்டதால், பல உயிரினங்களின் உயிர் ஆதாரமாக பனை மரங்களே விளங்குகின்றன. பனையின்வேர் பகுதிகளில் எறும்புகளும், பூச்சிகளும் பல சிறு செடிகளும் வாழ்கின்றன. பனையின் வேர்ப்பகுதியில் விழும் தாவரங்களின் விதைகள் பனையைச் சுற்றியும் ஒட்டியும் வளர்கின்றன. இயற்கையில் ஆலமரங்களும் அரச மரங்களும் பெரும்பாலும் பனையை ஒட்டி வளர்பவையே.

பனையின் தண்டுப் பகுதியை ஆதாரமாகக் கொண்டு பல வகையான ஓணான்களும் பல்லி இனங்களும் வாழ்கின்றன. பனையின் கழுத்து பகுதிகளிலும் பனை ஓலைகளிலும் பல வகையான வெளவால்களும் சிறு குருவிகளும் வாழ்கின்றன. ஒரு வெளவால் ஒரு இரவுப் பொழுதில் பல நூற்றுக்கணக்கான ஈக்களையும் கொசுக்களையும் பிடித்து உண்டு விவசாயம் செழிக்க நமக்கு உதவுகிறது.

பனையின் தலைப்பகுதியில் அணில்களும் எலிகளும் கூடு அமைத்து வாழ்கின்றன. மேலும் உயரப் பறக்கும் பறவைகளான பருந்துகளுக்கும் வானம்பாடி பறவைகளுக்கும் இருப்பிடமாக பனை விளங்குகிறது. பனை ஓலையின் நுனியில் தூக்கணாங்குருவிகள் தங்களின் சிறப்புமிக்க கூடுகளைப் பெருமளவு அமைத்து கூட்டாக வாழ்கின்றன. பகல் பொழுதில் வயல்களில் இருக்கின்ற பூச்சிகளையும், கூட்டுப்புழுக்களையும் உண்டு விவசாயத்திற்கு பல நன்மைகளைச் செய்கின்றன.

ஒரு பனை குறைந்தது 30 அடி உயரத்திற்கு வளருமாதலால் பல உயிரினங்களுக்கு இருப்பிடங்களாகவும் கூடுகளை அமைத்து தங்களது இனத்தை விருத்தி செய்யவும், எதிரிகளிடமிருந்து காக்க உதவும் அரணாகவும் பனை விளங்குகிறது.

"இருந்தாலும் ஆயிரம் பொன்; இறந்தாலும் ஆயிரம் பொன்' என்ற அடைமொழி யானைக்கு மட்டுமல்ல பனைமரத்துக்கும் பொருந்தும்.

கள் தடை செய்யப்பட்ட ஒரே மாநிலம் தமிழ்நாடு!

உலகளவில் 108 நாடுகளில் பனை மரங்கள் உள்ளன. எந்த நாட்டிலும் கள் இறக்குவதற்கோ, குடிப்பதற்கோ தடை இல்லை. தமிழகத்தில் மட்டும் தடை உள்ளது. கள் இறக்குவதற்கான அனுமதி இருந்தவரை, அதனால் வருமானம் கிடைத்தவரை பனை மரங்களை காப்பாற்ற வேண்டும் என்ற கவலை விவசாயிக்கு இருந்தது. நேரிடையான வருமானம் இல்லையென்றதும் அதன்பிறகு, பனை மரங்களை கைவிட்டு விட்டனர் விவசாயிகள். வறட்சி காரணமாக பனை மரங்களை காப்பாற்ற முடியாமல் செங்கல் சூளைக்கும், சுண்ணாம்பு களவாய்க்கும் எரிபொருளாக வெறும் ரூ.50க்கு விற்க வேண்டிய நிலை ஏற்படுகிறது.

ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பு தமிழகத்தில் 30 கோடி பனை மரங்கள் இருந்தன. தற்போது வெறும் 5 கோடிதான் உள்ளன. இவையும் தற்போது அழிக்கப்பட்டு வருகின்றன. பனை விவசாய அழிவுக்கு பல்வேறு காரணங்கள் இருந்தாலும், சொந்த மரமில்லாததால் பனைமரம் ஏறியவர்கள் வேறு தொழிலுக்குச் சென்று விட்டனர்.

சிவகங்கை, ராமநாதபுரம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் பூமியின் வறட்சி காரணமாக பனை மரங்களின் எண்ணிக்கை குறைந்து வருகிறது. இந்த நிலையில், எவ்விதக் கட்டுப்பாடும் இன்றி பனைமரங்கள் வெட்டப்பட்டு, செங்கல் சூளைக்கு எரிபொருளாக லாரிகளில் அனுப்பப்பட்டு வருகின்றன என்றார்.

திணைத்துணை நன்றி செயினும் பனைத்துணையாகக் கொள்வர் பயன் தெரிவார் -என்ற குறளின்படி எந்தவித செலவுமின்றி வளர்ந்து நிற்கும் சில கோடி பனை மரங்களையாவது பாதுகாக்க வேண்டும். பனையின் பயனைப் பெற புதிய வழிகளை உருவாக்க வேண்டும். புதிய தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி தமிழர்களின் அடையாளமாக உள்ள பனை மரத்தை அழிவின் விளிம்பிலிருந்து மீட்க வேண்டும் என்பது இயற்கை ஆர்வலர்களின் விருப்பமாகும்.

தமிழர்களின் சொத்தான பனைமரத்தை மீட்டெடுக்கும் முயற்சியை அரசு மேற்கொள்ளவேண்டும்.

- ர.ரஞ்சிதா, ஜி.கே.தினேஷ்
 

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

“மாட்டின் மீதான அக்கறை, சிசுக்கள் மீது கிடையாதா?!” நெஞ்சு பொறுக்குதில்லையே #GorakhpurTragedy
Advertisement

MUST READ

Advertisement
[X] Close