Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

பிரேமலதாவுக்கு நிபந்தனை முன் ஜாமீன்! -சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு!

சென்னை: தமிழக முதல்வர் ஜெயலலிதா குறித்து அவதூறாக பேசியதாக தொடரப்பட்ட வழக்கில் தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்தின் மனைவி பிரேமலதாவிற்கு நிபந்தனை முன் ஜாமீன் வழங்கி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழக சட்டப்பேரவைக்கு நடைபெற்ற தேர்தலை முன்னிட்டு நடைபெற்ற தேர்தல் பிரசாரத்தில் திருப்பூர் பொதுக்கூட்டத்தில் பேசியபோது, முதலமைச்சர் ஜெயலலிதாவை அவதூறாக பேசியதாக பிரேமலதா விஜயகாந்த் மீது திருப்பூர் வடக்கு காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இதன் அடிப்படையில் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

இதனிடையே இந்த வழக்கில் தனக்கு முன்ஜாமீன் வழங்க கோரி பிரேமலதா சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவில், ''எனது கணவர் விஜயகாந்த், தே.மு.தி.க. தலைவராக உள்ளார். சட்டப் பேரவைத் தேர்தலை முன்னிட்டு, கடந்த சில நாட்களாக, தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் நடைபெறும் பொதுக் கூட்டங்களில் பேசி வருகிறேன்.

இதேபோல் திருப்பூரில் கடந்த ஏப்ரல் 1ம் தேதி நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் பேசினேன். அப்போது, தமிழக முதல்வர், அமைச்சர்களை பற்றி அவதூறாக பேசியதாக, என் மீது திருப்பூர் வடக்கு காவல் நிலையத்தில் அமைச்சர் ஆனந்தன் புகார் கொடுத்தார். இந்த புகாரின் பேரில், என் மீது திருப்பூர் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

ஆனால், அந்தக் கூட்டத்தில், நான் அவதூறாக எதுவும் பேசவில்லை. ம.தி.மு.க.. பொதுச்  செயலாளர் வைகோ தெரிவித்தக் கருத்தைத் தான் வலியுறுத்தி பேசினேன். இதன் காரணமாக, ம.தி.மு.க. பொதுச் செயலாளரையும் இந்த வழக்கில் முதல் குற்றவாளியாக சேர்த்துள்ளனர்.

இதன் மூலம் எனக்கும், தே.மு.தி.க.வுக்கும் பாதிப்பை ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கில், இந்த வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. புகாரில் கூறியது போல், எந்த நிகழ்வும் நடைபெறவில்லை. எனவே, இந்த வழக்கில் முன் ஜாமீன் வழங்க வேண்டும்" என்று கோரியிருந்தார்.

இந்த மனு சமீபத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது, திருப்பூர் வடக்கு காவல்துறையினர் சார்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், ''அவதூறான கருத்துகளை மனுதாரர் பேசியிருக்கிறார். அவருக்கு முன் ஜாமீன் வழங்கினால், சாட்சிகளை கலைத்து விடுவார். மேலும், விசாரணை ஆரம்பக் கட்டத்தில் இருப்பதால், மனுதாரருக்கு முன் ஜாமீன் வழங்கக் கூடாது" என எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து, இந்த மனு நீதிபதி எஸ்.வைத்தியநாதன் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, நிபந்தனை அடிப்படையில் அவருக்கு முன் ஜாமீன் வழங்குவதாக நீதிபதி உத்தரவிட்டார். மேலும், சென்னை விரும்பாக்கம் காவல் நிலையத்தில், இரண்டு வாரத்துக்கு பிரேமலதா தினமும் 10.30 மணிக்கு நேரில் ஆஜராகி கையெழுத்திட வேண்டும் என்றும் நீதிபதி உத்தரவிட்டார்.

எடிட்டர் சாய்ஸ்

அப்போலோ டூ எம்.ஜி.ஆர் சமாதி... ஜெயலலிதாவுக்கு அரண் அமைத்த மன்னார்குடி!

MUST READ