Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

எம்.ஜி.ஆரிடம் முகமது அலி கேட்ட மீன் குழம்பு!

விளையாட்டுப் போட்டியில் " த கிரேட்டஸ்ட்" என்ற தகுதியைப் பெற்ற ஒரே வீரராக போற்றப்பட்டவர்,  குத்துச் சண்டை உலகின் முடிசூடா மன்னன் முகமது அலி.  சில வருடங்களாக சுவாசக் கோளாறால் பாதிக்கப்பட்டிருந்த முகமது அலி, அரிசோனா மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் இருந்து இன்று காலை மரணமடைந்தார்.

அமெரிக்காவில் 1942-ம் ஆண்டு ஜனவரி 17-ம் தேதி பிறந்த அலியின்  இயற்பெயர் காசியஸ் மார்செல்லஸ் கிளே ஜூனியர். அவருக்கு "தி கிரேட்டஸ்ட்', "தி சாம்ப்', "தி லூயிஸ் வில்லி லிப்' என்ற  'நிக்' நேம்களும் உண்டு.  1964-ல் இஸ்லாமிய தேசம் என்ற அமைப்பு தொடங்கப்பட்ட போது அதில் தன்னை இணைத்துக்கொண்டு தனது பெயரை முகமது அலி என மாற்றிக்கொண்டார். பின்னர் 1975-ல் சன்னி முஸ்லிம் பிரிவுக்கு முழுமையாக மதம் மாறினார். அலியின் மகள் லைலா அலி, தந்தையைப் போன்றே குத்துச் சண்டையை  தீவிரமாக நேசித்ததால், அவரும் பெண்கள் குத்துச் சண்டைப் போட்டியில் உலக சாம்பியன் பட்டம் வென்றிருக்கிறார்.

முகமதுஅலி யார் ?


தன்னுடைய பதினெட்டாவது வயதிலேயே உலகளாவிய குத்துச் சண்டை விருதை வென்றவர், அலி. 1960-ஆம் ஆண்டு ரோம் நகரில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்று தங்கப் பதக்கத்தை எளிதாகத் தட்டிச் சென்றார். ஆனால், குத்துச் சண்டை உலகம் முகமது அலியை அப்போது,  சாதாரணமான ஒரு டெக்னிகல் பாக்ஸராகத்தான்  பார்த்தது.
 
சாம்பியன் ஆனார்


1965 பிப்ரவரி 25 ந்தேதி முகமது அலியின் வாழ்க்கையில் ஒரு திருப்புமுனை நாளாக அமைந்தது. ஆம், அன்றுதான்  'சோனி லிஸ்டன்' என்ற ( 'ஆபத்தான வீரர்' என்றறியப்பட்டவர் )  முதல் நிலை குத்துச் சண்டை வீரரை  தன்னுடைய 7-வது சுற்றில் டெக்னிக்கல் குத்துக்களால் வீழ்த்தினார். இதையடுத்து,  உலக ஹெவி வெய்ட் குத்துச் சண்டை  சாம்பியன் விருது முதன் முதலாக அலி, கைக்கு வந்து சேர்ந்தது.
 
மீண்டும், மீண்டும் வெற்றி !

அலியை எப்படியும் வீழ்த்த வேண்டும் என்று உறுதி எடுத்துக்கொண்டு தீவிர பயிற்சியை மேற்கொண்ட  சோனி லிஸ்டன் மீண்டும் ஒருமுறை அலியை களத்தில் சந்தித்தார். ஆனால், அதிக வேலை வைக்காமல் முதல் ரவுண்டிலேயே  சோனி லிஸ்டனை நாக்-அவுட் முறையில் மண் கவ்வ வைத்தார் முகமது அலி.

பறிபோன பதக்கம்

அமெரிக்க ராணுவத்தில் கட்டாயமாக  சேரும் ஆணையை ஏற்க மறுத்ததால்  குத்துச்சண்டை போட்டியில் பங்கேற்பதற்கு  சுமார் 4 ஆண்டுகளுக்கு தடையும், முகமது அலியின் சாம்பியன் பட்டமும் பறிக்கப்பட்டது. அந்த பட்டத்தை  மீண்டும் தக்க வைத்துக் கொள்ள, வலிமை மிக்க 'ஜோ- பி-ரேசியர்'  என்ற வீரருடன் மோதி முதல்முறை அலி தோல்வியுற்றார். ஆனால், அவரது விடா முயற்சி, 1974-ல்  மீண்டும் , ஜோ பிரேசியருடன் மோதி உலக சாம்பியன் விருதை  கைப்பற்ற காரணமானது.

வெற்றியும், தோல்வியும்

 அதேபோல் முதலில் மோதி, தோல்வியைக் கொடுத்த 'லியோன் ஸ்பிங்ஸ்' என்ற வீரரை சில ஆண்டுகள் இடைவெளியில் மீண்டும்  களத்தில் சந்தித்து மூன்றாவது முறையாக  உலக சாம்பியன் விருதைக் கைப்பற்றினார் அலி. நான்காவது முறையும் அதே பட்டத்தை தக்க வைத்துக் கொள்ள 'லாறி-ஹோம்ஸ்' என்ற மனித மலையுடன் மோதி தோல்வியைத் தழுவினார்.

தன்னை தோற்கடித்தவர்களையே மீண்டும் தோற்கடித்து "ஒவ்வொரு வெற்றியும், முயற்சியாலும், பயிற்சியாலும் மட்டுமே சாத்தியப்படும், வெற்றி என்பது, எவர் ஒருவருக்கும் தனிப்பட்ட சொத்தல்ல" என்று வெற்றி மேடையிலேயே வெளிப்படையாக அறிவித்து பதக்கத்தை முத்தமிட்டவர் அலி.

இதன் பின்னரே அலிக்கு 'தி கிரேட்டஸ்ட்' என்ற பட்டம் அளிக்கப்பட்டது. அலியின் வாழ்க்கையை மையமாக வைத்து 'தி கிரேட்டஸ்ட்' என்ற சினிமாப்படமும் இதன் பின்னர் வெளியாகி அவர் புகழை பரப்பியது.

5 முறை தோல்வி , 56 முறை வெற்றி

தன்னுடைய வாழ்நாளில்  61 முறை மேடையேறி குத்துச் சண்டை  போட்ட அலி, அதில் 56 முறை வெற்றியை ருசித்தவர். அவருடைய தோல்வியானது, மொத்தமே ஐந்துமுறைதான் இருந்தது. அதில் 37 முறை எதிராளியை மண் கவ்வ வைத்து எழுந்திருக்க முடியாத அளவு 'நாக்-அவுட்' முறையில் 'பஞ்ச்' களை விட்டவர் அலி.

வெற்றிக்கு காரணம்

ஒருமுறை முக்மது அலியிடம்,  ' புதிதாய் களம் காணும் வீரர்களுக்கு ஏதாவது சொல்லுங்களேன் ?' என கேட்கப்பட்டது, அதற்கு பதிலளித்த அலி, "வீரர்கள்  உடற்பயிற்சி கூடங்களில் மட்டுமே உருவாக முடியாது. அவர்களுக்கு ஆழ்மனதில் ஒரு கனவு, ஒரு தொலைநோக்கு, ஒரு விருப்பம் இருக்க வேண்டும். அதேபோல், அவர்களுக்கு  திறமையும் முக்கியம்,  மனோதிடமும் முக்கியம். அதில், மனோதிடம் தான் மிகவும் முக்கியம்" என்றார்.

முகமது அலியை ஏன் விரும்புகின்றனர் ?

ஃபவுல் -பன்ச் எனப்படும் விதிமுறைகளை மீறிய குத்துக்களை எதிராளி மீது விடுவதும், எதிராளியை ஏமாற்றி குத்துவதும், களைப்பாகி விட்டது போல் நடித்து 'மவுத்- கார்ட்'  டை (பற்கள், தாடைகளின் பாதுகாப்புக்காக வாய்க்குள் பொருத்தப் படும் ரப்பர் தட்டை) கீழே துப்புவதும் போன்ற விரும்பத்தகாத செயல்களை தன்னுடைய வாழ்நாளில்  எப்போதும் செய்யாத 'டீஸன்ட்சி - பாக்ஸர்' என்ற நற்பெயர் அலிக்கு இருந்ததால்தான் அவரை உலகம் முழுவதும் குத்துச் சண்டை ரசிகர்கள் மட்டுமல்ல,  குத்துச் சண்டை வீரர்களும் கொண்டாடுகின்றனர்

சென்னையும், முகமது அலியும்

அது, 1980-ம் வருடம்...சென்னை ஜவகர்லால் நேரு ஸ்டேடியத்தில் குத்துச் சண்டை பிரியர்கள் 20 ஆயிரம் பேர்களுக்கு மேல் திரண்டிருக்க,  அரங்கமோ விசில் சத்தங்களாலும், கைதட்டல் களாலும் ஆர்ப்பரித்துக் காணப்பட்டது. "என்னைக் கவர்ந்த குத்துச் சண்டை வீரர் அலி மட்டும்தான்" என்று சொல்லியிருந்த, அன்றைய தமிழக முதல்வரும், குத்துச் சண்டைப் பிரியருமான எம்.ஜி.ஆர். அழைப்பின் பேரிலேயே சென்னைக்கு வந்திருந்தார் அலி.   விழாவுக்கான ஏற்பாடுகளை அன்றைய ஒய்.எம்.சி.ஏ. பாக்ஸிங் கிளப் (நந்தனம்)  செயலர், ஹெச்.மோகனகிருஷ்ணன் ( எம்.ஜி.ஆர். முகமது அலிக்கு மாலையிடும் படத்தில் உடன்  இருப்பவர்) செய்திருந்தார்.
 
அலியுடன் மோதிய சென்னை வீரர்கள்


காட்சி குத்துச் சண்டைப் (ஷோ- பைட்) போட்டியில் அலி பங்கேற்று மோதுகிறார் என்பதே மக்கள் அங்கு திரளக் காரணம். முதல்,  'ஷோ- பைட்' டில்  வீரர், 'ஜிம்மி எல்லிஸ்' முகமது  அலியுடன் மோத, இரண்டாவது ஷோ- பைட்டில் தமிழ்நாடு சாம்பியனான ராக்கி-ப்ராஸ், அலியுடன் மோதினார் .
 
'முகமது அலியுடன் மோதிய ஷோ- பைட்தான், எட்டாவது வகுப்பு கூட  படித்து முடிக்காத என்னை  தென்னக ரெயில்வேயில் விளையாட்டு வீரருக்கான தகுதி அடிப்படையில் வேலைக்கு சேர்த்துக் கொள்ள காரணமாக இருந்தது' என்று பின்னாளில் சொல்லி பெருமையுடன் நினைவு கூர்ந்தார், ராக்கி-ப்ராஸ்.
 
எம்.ஜி.ஆரிடம் அலி கேட்ட மீன் குழம்பு


ஷோ பைட் போட்டிகளின் முடிவில், முகமது அலிக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய எம்.ஜி.ஆர் எங்கள் தமிழகத்திற்கு வந்திருக்கிறீர்கள் உங்களுக்கு என்னவேண்டுமோ கேளுங்கள்...என அலியிடம் கேட்டார். அதற்கு அலி, “சென்னையில் மீன் உணவு சுவை என்கிறார்களே... அது எங்கு கிடைக்கும்? " என்றார். விருந்தோம்பலுக்குப் பெயர் பெற்ற எம்.ஜி.ஆரிடம் இப்படி ஒருவர் கேட்டால் அதுவும் உலக பிரபலம் கேட்டால் சும்மா விடுவாரா...அடுத்த நொடி ராமாவரம் தோட்டத்திற்கு போன் பறந்தது.

ராமாவரம் தோட்டத்தில் அசைவ உணவு சமைப்பதில் தேர்ந்தவரான மணி என்பவரிடம் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டது. ஜானகி அம்மையாரின் மேற்பார்வையில் வஞ்சிரம் மீன் வறுவல், வெள்ளை சாதம்,  மீன் குழம்பு, வேகவைத்த முட்டை குழம்பு, இறால் ஃப்ரை, சிக்கன் வறுவல், உடன் பாயாசம் என விதவிதமான உணவுவகைகள் அன்று முகமது அலி தங்கியிருந்த இடத்திற்கு வந்து சேர்ந்தது.

உணவு அருந்தியபின் உணவு எப்படி இருந்தது என எம்.ஜி.ஆர் கேட்டாராம். அதற்கு முகமது அலி,  'எனக்கு உலகில் எங்கு சென்றாலும் விதவிதமான உணவைத்தர ஆயிரம் பேர் இருக்கிறார்கள். ஆனால் அது என்னைக்கவர்வதற்கானதாக இருக்கும். நீங்கள் அளித்த உணவில் சுவையை விட கூடுதலாக இருந்தது உங்கள் அன்புதான்' என்று நெகிழ்வாக கூற, எம்.ஜி.ஆர் நெகிழ்ந்துநின்றாராம். முகமது  அலியின் சென்னை விசிட் இப்படிதான் நெகிழ்வாக இருந்தது.

திகட்டத் திகட்ட மீன் குழம்பு சாப்பாடும், வறுவலுமாக சென்னை மக்களிடமும், மக்கள் திலகத்திடமும்  இருந்து பிரியாவிடை பெற்ற முகமது அலி, இன்று உலக மக்களிடம் இருந்து பிரியாவிடை பெற்றுக் கொண்டு விட்டார். 

முகமது அலி மீது அதீத பிரியம் கொண்டிருந்த, எம்.ஜி.ஆருக்கும், முகமது அலிக்கும் ஒரு ஒற்றுமை,  இருவருமே ஜனவரி 17-ஆம் தேதி பிறந்தவர்கள்

- ந.பா.சேதுராமன்

இது தொடர்பா வேற என்னலாம் நடந்திருக்குனு தெரிஞ்சுக்கலாமா?

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

'சாக்கடையில் கலந்த ஜெயலலிதா ரத்தம்!'   -எம்பால்மிங் சீக்ரெட்டை உடைக்கும் மருத்துவர்கள் #VikatanExclusive
placeholder

'இருதயம் செயலிழந்து போனதற்கான காரணம் என்ன? திடீரென்று செயலிழந்து நின்று போன இருதயத்தை ஏன் மீண்டும் செயல்பட வைக்க இயலவில்லை? உலகத் தரம் வாய்ந்த உபகரணங்களையும் நிபுணத்துவத்தையும் தோல்வியைத் தழுவச் செய்த காரணங்கள் யாவை?' என்ற கேள்விகளையே மருத்துவர் பீலேயும் அப்போலோ மற்றும் எய்ம்ஸ் மருத்துவர்களும் தமிழக-இந்திய மருத்துவ உலகத்தாரும் தமிழ்நாடு-மத்திய அரசுகளும் கேட்டிருக்க வேண்டும். அதற்கான பதிலைக் கண்டறிய இயன்றளவில் முயற்சியை மேற்கொண்டிருக்க வேண்டும். ஆனால் அதற்கான ஒரு சிறிய துரும்பு அளவிலான முயற்சியைக்கூட இவர்கள் எவரும் மேற்கொள்ளவில்லை என்பதுதான் உண்மை.

Advertisement

MUST READ

Advertisement
[X] Close