Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

விவசாயம்.. வீர விளையாட்டு...வித்தியாசமான வாழ்வியல் பள்ளி!​

யற்கை எழில் கொஞ்சும் தேனியைச் சார்ந்தவர்தான், பிரீத்தா நிலா. யார் இந்த பிரீத்தா? இவர் மருத்துவராகப் பணியாற்றுகிறார். ஆனால், இது இவரது அடையாளம் இல்லை. இவருடைய அடையாளம் "கற்றல் இனிது".

கற்றல் இனிது என்பது ஒரு வாழ்வியல் பள்ளி. "நம்ம நிலம் சார்ந்த,​ விட்டுப்போன மரபு சார்ந்த விஷயங்களை அடுத்த தலைமுறைக்குக் கொண்டு போவதுதான் இந்தப் பள்ளியின் நோக்கம். நம் பாரம்பர்ய வீர விளையாட்டுக்கள், இயற்கை வேளாண்மை, நம் மரபு சார்ந்த உணவு மற்றும் மருத்துவம் ஆகியவை இங்கு பயிற்றுவிக்கிறோம். இது தவிர நம் மொழிக்கே உரித்தான பிரத்யேக உச்சரிப்புகள் 'ழ', 'ள', 'ற' ; இலக்கணம், இலக்கியம் ஆகியவற்றையும் கற்றுக் கொடுக்கிறோம். நம் கலாச்சார மாற்றத்தால் நாம் தொலைத்த நம் அடையாளங்களை மீட்டெடுப்பதற்கான ஒரு முயற்சியே கற்றல் இனிது"​ என்கிறார் ப்ரீத்தா.

தற்போது தேனி வீரபாண்டிநல்லூரில் விடுமுறைப் பள்ளியாக நடந்துவரும் இது மிக விரைவில் தினசரிப் பள்ளியாக மாற்றப்பட உள்ளதாக அவர் குறிப்பிடுகிறார். இங்கு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் வாழ்வியலைப் பயில்கிறார்கள். பயில்பவர்களிடம் கட்டணம் எதுவும் வசூலிக்கப்படவில்லை. தனிப்பட்ட நபர்களின் நன்கொடை மூலம்தான் இப்பள்ளி நடத்தப்பட்டுவருகிறது.

இப்படி ஒரு பள்ளியை நடத்தும் எண்ணம் எப்படி தோன்றியது என்றோம். "சிறு வயதிலிருந்தே வீர விளையாட்டுக்களில் எனக்கு ஆர்வம் அதிகம். நம் பாரம்பர்ய வீர விளையாட்டுக்களைத் தேடிய போது, அதைக் கற்றுக் கொடுக்க இங்கு யாரும் இல்லை​.​

இதுபோல பல விஷயங்களை நாம் தொலைத்தது தெரிய வந்தது. அவை அனைத்தையும் நம் அடுத்த தலைமுறைக்குக் கற்றுக் கொடுக்க வேண்டும் என்று மனதில் தோன்றியது. இப்படி ஒவ்வொரு கலையைக் கற்றுக் கொடுக்கவும், இங்கு தனித்தனியாக ஆசிரியர்கள் உள்ளனர்" முகத்தில் பெருமிதம் படர கூறுகிறார் ப்ரீத்தா.

“குழந்தைகளுக்கு அவ்வளவு எளிதாக ஒரு விஷயத்தைப் புரிய வைக்க முடியாது. அப்படி இருக்கையில், அவர்களை எப்படி இதில் கொண்டு வரமுடிகிறது என்றோம். "நீங்கள் எண்ணுவது போல இல்லை. நானும் இப்படித்தான் முதலில் நினைத்தேன். ஆனால், பெரியவர்களைவிட குழந்தைகள்​தான் அனைத்தையும் விரைவில் புரிந்துகொள்கின்றனர். பெற்றோருக்கே அறிவுரை கூறுகின்றனர். பிளாஸ்டிக் உபயோகத்தை தான் தவிர்ப்பதோடு மட்டுமல்லாமல், தன் குடும்பத்தினரையும் தவிர்க்க வைக்கிறார்கள். நாம் பிறருக்குச் சொல்லிக் கொடுப்பதை, இவர்கள் பிறருக்குச் செய்து காட்டுகின்றனர்", என்கிறார் ப்ரீத்தா.

ஒரு பள்ளியில் 17 வருடம் படித்துவிட்டு வரும் மாணவனுக்குத் தன்னைப் பற்றியோ, தன் சமூகத்தைப் பற்றியோ, சுற்றுச்சூழலைப் பற்றியோ அக்கறை இருப்பதில்லை. அல்லது அதுபற்றி தெரிவதில்லை. அவனுக்கு தைரியமும் இருப்பதில்லை. கற்றல் இனிது பள்ளியில் உளவியல் ரீதியாகவும் குழந்தைகள் வளப்படுகிறார்கள். பிறரோடு எப்படி பேதம் பார்க்காமல் பழகுவது எனத் தெரிந்து கொள்கின்றனர். கற்றலுக்குத் தேர்வு செய்யும் இடங்கள் ஆற்றங்கரை, தோட்டம் என இயற்கையான இடங்கள்​தான்​என்பதால் இது எளிதாகிறது.

அங்கு எப்படி நடந்து கொள்ள வேண்டும், இயற்கையை எப்படி பேண வேண்டும் எனக் கற்கிறார்கள். "யாராவது பிளாஸ்டிக் குப்பையை தோட்டத்தில் போட்டால் போடாதீர்கள் எனக் கூறுகிறார்கள். ​மேலும்​ இங்கு பயிலும் குழந்தைகள் இயற்கை முறையில் கீரை பயிர் செய்துள்ளனர். நாங்கள் அடுத்ததாக இக்குழந்தைகளை வைத்து இயற்கை விவசாயத்தைப் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தப் போகிறோம்", என்கிற ப்ரீத்தா நிலாவுக்கு இன்னும் பல வாழ்வியல் பள்ளிகளை பரவலாக துவங்கும் எண்ணமுள்ளது. 

அதேசமயம் இது எந்த சூழலிலும் வணிகமயமாக மாறி விடக்கூடாது என்பதில் எச்சரிக்கையாக இருக்கிறார் நிலா.

கற்றல் இனிது ஒரு நல்ல தொடக்கம்தான்...ப்ரீத்தா நிலாவுக்கு வாழ்த்துக்கள்!

- ந. ஆசிபா பாத்திமா பாவா
(மாணவப் பத்திரிக்கையாளர்)

 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close