Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

போலீஸ் வேன் மோதி மாணவர்கள் இறந்த விவகாரம்...நீடிக்கிறது பதற்றம்!

சென்னை; போலீஸ் வேன் மோதிய விபத்தில் சிகிச்சையில் இருந்த மற்றொரு மாணவனும் உயிரிழந்ததால் அயனாவரம் பகுதியில் பதற்றநிலை நீடிக்கிறது. கல்வீச்சு தடியடிக்குப்பிறகும் பதற்றம் நீடிக்கிறது அயனாவரம் பகுதியில்..

சென்னை அயனாவரம் ஏகாங்கிபுரம் பகுதியைச் சேர்ந்த நண்பர்கள் ராம்குமார், சாலமன். நடந்து முடிந்த பத்தாம் வகுப்புத் தேர்வில் தேர்ச்சி பெற்ற இவர்கள், பிளஸ் 1 சேர இருந்தனர். கால்பந்து விளையாட்டில் ஆர்வம் கொண்டவர்களான இருவரும் தினமும் அதே பகுதியிலுள்ள பனந்தோப்பு காலனி விளையாட்டு மைதானத்தில் விளையாடி பயிற்சி செய்வது வழக்கம்.

வழக்கம்போல நேற்று காலை (5.6.2016) மைதானத்துக்கு மோட்டார் சைக்கிளில் கிளம்பிச் சென்ற ராம்குமார் மற்றும் சாலமன் விளையாட்டை முடித்து விட்டு பகலுணவுக்காக 2 மணியளவில் மோட்டார் சைக்கிளில் பிருந்தாவன் காலனி வழியாக வீட்டுக்கு திரும்பிவந்துகொண்டிருந்தனர். மோட்டார் சைக்கிளை ராம்குமார் ஓட்டிவந்தார். அப்போது அந்த வழியாக வந்த போலீஸ் வாகனம் எய்ச்சர் வேன் மோட்டார் சைக்கிள் மீது பயங்கரமாக மோதியது.  இதில் அவர்கள் இருவரும் துாக்கிவீசப்பட்டனர். இதில் பலத்த காயமடைந்த ராம்குமார் விபத்து நடந்த இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

பின்னால் அமர்ந்து வந்த சாலமன் கவலைக்கிடமான நிலையில் அரசு கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் சிகிச்சைக்கு கொண்டு போகப்பட்டார். விபத்து குறித்து தகவல் அறிந்து வந்த ராம்குமாரின் தாயார் மற்றும் உறவினர்கள்,  பொதுமக்கள் வெகுண்டெழுந்து அயனாவரம் -கொன்னூர் நெடுஞ்சாலையை மறித்து மறியலில் ஈடுபட்டார்கள். போலீஸ் துணை கமிஷனர்கள் பரவேஷ்குமார், மயில்வாகனன் மற்றும் போலீசார் நடத்திய சமாதானப் பேச்சுவார்த்தை பலனில்லாமல் போகவே சுமார் 2 மணி நேரம் மறியல் நீடித்தது. 

இந்த மறியலால் சென்னை அண்ணாநகர், வில்லிவாக்கம், செம்பியம், கொளத்தூர், ஓட்டேரி பிரதான சாலைகள் முடங்கின. இதைத் தொடர்ந்து போலீஸ் இணை கமிஷனர் சந்தோஷ்குமார்    சம்பவ இடத்துக்கு வந்து பொதுமக்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினார். ஆனால் அது தோல்வியில் முடியவே போலீசார் பொதுமக்கள் மீது தடியடி நடத்தினர். அதில் விமலா என்பவரின் மண்டை உடைந்தது. ராம்குமாரின் தாயார் கவிதாவும் இதில் காயமடைந்தார். அதேசமயம் தீவிர சிகிச்சையில் இருந்த சாலமன், சில மணிநேரங்களில் பரிதாபமாக உயிரிழந்த தகவல் பரவியது. இதனால் அயனாவரம் பகுதியில் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டது. உடனடியாக அங்கு போலீசார் ஏராளமாக   குவிக்கப்பட்டனர்.

முதல்வர் ஜெயலலிதா இன்று ஆர்.கே.நகர் தொகுதி வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்கவுள்ளார். அப்போது கொளத்தூர் தொகுதியில் அடங்கியுள்ள அயனாவரம், வில்லிவாக்கம் உள்ளிட்ட சென்னையின் முக்கியமான சில பகுதிகளுக்கும் செல்லக் கூடும் என்ற சூழ்நிலை உள்ளதால் இந்த விவகாரம் போலீசாருக்கு தலைவலியாக அமைந்துள்ளது.

ராம்குமாரின் தாயாரிடம் பேசினோம். “என் மகன் மீது வேனை மோதிக் கொலை செய்த போலீஸ் டிரைவர் ஏழுமலையை கைது செய்ய வேண்டும். போலீஸ் வண்டியில் மோதி வீசப்பட்ட என் மகனை ஒரு ஆட்டோவில் ஏற்றிதான் ஆஸ்பிட்டலுக்கு அங்கிருந்தவர்கள்  அனுப்பி அனுப்பி வைத்தனர்.  ஸ்பீட் பிரேக் இருந்தும் வேகமாக வந்து விபத்து ஏற்படுத்திய போலீஸ் வேனை பொதுமக்கள் அடித்து உடைத்து விட்டனர்.  நியாயம் கேட்டு வந்த ஊர்க்காரர்கள் மீது லத்தி சார்ஜ் செய்தனர். சிலரை பிடித்து வைத்துக் கொண்டனர். எனக்கு ஒரே மகன் ராம்குமார். என் கணவர் விக்டர் போன வருடம் இறந்து விட்டார். எனக்கு துணையாக இருந்த ஒரே மகனையும் இப்படி அநியாயமாக பறிகொடுத்து விட்டேன்” என்று கண்ணீர் விட்டு கதறி அழுதார்.

இரண்டு மாணவர்கள் போலீஸார் வாகனம் மோதி இறந்த சம்பவத்தால் அயனாவரம் பகுதியில்  தொடர்ந்து பதற்றம் நீடிக்கிறது.

- ந.பா.சேதுராமன்

எடிட்டர் சாய்ஸ்

MUST READ