Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

' இனி ஐவரணியும் கிடையாது; ஆட்டமும் கிடையாது! -கறார் காட்டும் கார்டன்

அ.தி.மு.க அரசை ஆட்டுவித்து வந்த ஐவர் அணிக்கு மொத்தமாக மூடுவிழா நடத்திவிட்டார் முதல்வர் ஜெயலலிதா. ' ஐவர் அணியின் அதீத வளர்ச்சியும் திரண்ட சொத்துக்களும்தான் இந்த அதிரடி முடிவுக்குக் காரணம்' என்கின்றனர் தலைமைச் செயலக வட்டாரத்தில்.
 
சட்டசபைத் தேர்தலில் வெற்றி பெற்ற கையோடு, அதிகாரத்தை மிகுந்த கவனத்தோடு வழிநடத்தி வருகிறார் ஜெயலலிதா. காரணம். எதிர்க்கட்சியின் அசுர பலம். கடந்த ஆட்சியில், ' கட்சிக்காரர்களின் புகார்கள், கோரிக்கைகள் ஆகியவற்றைப் பரிசீலித்து நடவடிக்கை எடுப்பதற்காக' ஐவரணி என்ற ஒன்றை நியமித்தார் முதல்வர். இந்த அணியில், ஓ.பன்னீர்செல்வம், நத்தம் விஸ்வநாதன், வைத்திலிங்கம், எடப்பாடி பழனிச்சாமி, பழனியப்பன் ஆகியோர் இடம்பெற்றிருந்தனர். கட்சியில் இவர்கள் செலுத்திய ஆதிக்கத்தால் கதிகலங்கிப் போனார்கள் கட்சியின் சீனியர் நிர்வாகிகள் பலரும். தலைமைச் செயலகத்தில் எந்தக் கூட்டம் நடந்தாலும், முதல்வர் அருகில் ஐவரணியினரே நின்றார்கள்.

' ஆட்சி அதிகாரமே நாங்கள்தான்' என்ற மிதப்பில் ஐவரணி செயல்பட்டு வந்தது. தேர்தலுக்கு முன்பு, ஓ.பி.எஸ் வீட்டின் முன்பு சீட்டுக்காக திரண்டிருந்த கூட்டம்தான், முதல்வருக்கு மிகப் பெரிய எச்சரிக்கையைக் கொடுத்தது. இதுபற்றி உளவுத்துறை அதிகாரிகள் கார்டனுக்கு விரிவான தகவல் அனுப்பினர். இதையடுத்து, ஐவரணியைத் தீவிரக் கண்காணிப்பு வளைத்திற்குள் கொண்டு வந்தார் ஜெயலலிதா. அடுத்தடுத்த நாட்களில், ஓ.பி.எஸ், பழனியப்பன் மற்றும் ஒரு சீனியர் அமைச்சர் வீடுகள், உதவியாளர் வீடுகள் என ரெய்டு தூள் பறந்தது. ' இந்த ரெய்டில் முப்பதாயிரம் கோடி ரூபாய் அளவுக்குப் பணம் பறிமுதல் செய்யப்பட்டதாக', தி.மு.க தலைவர் கருணாநிதி அறிக்கை வெளியிட்டார். அதே போல பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ்,மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, இந்திய கம்யூனிஸ்ட் முத்தரசன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் ஆகியோரும் அமைச்சர்களிடம் நடத்தப்பட்ட ரெய்டு குறித்து விளக்கம் கேட்டு இருந்தனர். இதற்கு அ.தி.மு.க தரப்பில் இருந்து எந்தப் பதிலும் வரவில்லை.

சட்டமன்றத் தேர்தலிலும் ஐவரணியில் கோலோச்சிய இருவர் தோல்வியைத் தழுவினர். எனவே, ' இந்தமுறை ஐவரணியில் யார் இடம் பெறுவார்கள்?' என சீனியர்களுக்குள் போட்டி ஏற்பட்டது. ஆனால், " ஐவரணி என்ற ஒன்றுக்கே முதல்வர் இடமளிக்க விரும்பவில்லை" என்கிறார் அ.தி.மு.கவின் சீனியர் நிர்வாகி ஒருவர். அவர் நம்மிடம், " கடந்த ஆட்சிக்குக் கெட்ட பெயரை உருவாக்கித் தந்ததில், ஐவரணிக்குப் பெரிய பங்கு உண்டு. தொழிலதிபர்கள் உள்பட காரியம் சாதிக்க நினைப்பவர்கள் எல்லாம், ஐவரணியின் வீடுகளையே தஞ்சம் அடைந்தார்கள். ஓரிரு ஆண்டுகளில் ஐவரணி அமைச்சர்களின் வளர்ச்சியைப் பார்த்து கட்சிக்காரர்கள் அதிர்ந்து போனார்கள்.

சில அமைச்சர்கள் பற்றி உள்ளூர் கட்சிக்காரர்கள் அனுப்பும் புகார் மனுக்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. புகார் சொல்பவர்களை கட்டம் கட்டும் வேலைகள்தான் நடந்து வந்தன. இந்தமுறை ஓ.பி.எஸ், எடப்பாடி ஆகியோருக்கு மட்டுமே அமைச்சர் பதவி கொடுத்துள்ளார் முதல்வர். பழனியப்பன் மீது இன்னமும் கோபத்தில்தான் இருக்கிறார் முதல்வர். ஆட்சியின் முதல்நாளிலேயே, ' ஆய்வுக் கூட்டங்களில் துறை அமைச்சர், அதிகாரிகள் பங்கேற்றால் மட்டுமே போதும்' என அதிரடியாக உத்தரவிட்டுள்ளார் முதல்வர். இதனால் தங்கள் துறைகளைக் கவனிக்க அமைச்சர்களுக்கு முழு சுதந்திரம் வழங்கிவிட்டார் அம்மா. இனி ஐவரணியும் கிடையாது. ஆட்டமும் கிடையாது" என்றார் உற்சாகமாக.

கார்டனைப் பொறுத்தவரையில், யாருக்கு எப்போது அதிகாரம் வரும் என்பது முதல்வருக்கு மட்டுமே தெரிந்த ரகசியம். ' இனியொரு ஐவரணி அமையாமல் இருந்தாலே போதும்' எனப் கும்பிடு போடுகிறார்கள் ரத்தத்தின் ரத்தங்கள்.

ஆ.விஜயானந்த்

 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close