Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

உயர் நீதிமன்ற சட்டத் திருத்தத்துக்கு எதிர்ப்பு...சென்னையில் திரண்ட தமிழக வழக்கறிஞர்கள்!

சென்னை: வழக்கறிஞர்களுக்கு எதிராக சென்னை உயர் நீதிமன்றம் கொண்டுவந்துள்ள சட்ட திருத்தத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று தமிழக வழக்கறிஞர்கள் சென்னையில் பேரணி நடத்தினர்.

1961 ம் ஆண்டு வழக்கறிஞர்கள் சட்டம் பிரிவு 34(1)ல்  சென்னை உயர் நீதிமன்றம் மேற்கொண்ட சட்ட திருத்தம், வழக்கறிஞர்களுக்கு எதிரானது என எதிர்ப்பு தெரிவித்து தமிழ்நாடு மற்றும் புதுவை வழக்கறிஞர்கள் இன்று சென்னையில் உரிமைப் பேரணி நடத்துகின்றனர்.

 1961 ம் ஆண்டு வழக்கறிஞர்கள் சட்டம் பிரிவு 34(1)ல்  சென்னை உயர் நீதிமன்றம் தனக்குள்ள அதிகாரத்தை பயன்படுத்தி சில திருத்தங்களை கொண்டுவந்துள்ளது. அதன்படி உயர் நீதிமன்றத்திற்கு எதிராக முறை தவறி செயல்படும் வக்கீல் மீது நடவடிக்கை எடுக்க வழக்கறிஞர்கள் சட்டம் பிரிவு 14-பி அடிப்படையில் உயர் நீதிமன்றத்துக்கு அதிகாரம் உள்ளது. அந்த வக்கீல் உயர் நீதிமன்றம் மற்றும் அனைத்து சார்பு நீதிமன்றங்களிலும் ஆஜராக தடை விதிக்கப்படுவார்.

மாவட்ட முதன்மை நீதிபதிக்கு முன்பாக நெறி தவறி நடவடிக்கையில் ஈடுபடும் வழக்கறிஞர் மீது நடவடிக்கை எடுக்க மாவட்ட முதன்மை நீதிபதிக்கு அதிகாரம் உள்ளது. சம்பந்தப்பட்ட வழக்கறிஞர் அந்த மாவட்ட நீதிபதியின் கட்டுப்பாட்டில் உள்ள நீதிமன்றங்களில் ஆஜராக தடை விதிக்கப்படுவார்.

எந்த சார்பு நீதிமன்றத்திலும் நெறி தவறி நடக்கும் வழக்கறிஞர் குறித்து அந்த சார்பு நீதிமன்ற நீதிபதி மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் புகார் செய்யலாம். அந்த வக்கீலை அந்த மாவட்டத்தில் உள்ள எந்த நீதிமன்றத்திலும் தொழில் செய்ய தடை விதிக்க மாவட்ட முதன்மை நீதிபதிக்கு அதிகாரம் உள்ளது. வழக்கஞர்கள் சட்டப் பிரிவு 14-ஏ.யின் அடிப்படையில் நடவடிக்கை எடுப்பதற்கு முன்பு உயர் நீதிமன்றம் அல்லது சம்பந்தப்பட்ட மாவட்ட முதன்மை நீதிமன்ற நீதிபதிகள் சம்பந்தப்பட்ட வழக்கறிஞருக்கு சம்மன் அனுப்பி அந்த வழக்கறிஞரிடம் விளக்கம் கேட்க வேண்டும்.

வழக்கறிஞர் தொழில் செய்ய தடை விதிப்பதற்கு முன் அவர் தொழில் செய்ய தடை விதித்து இடைக்கால உத்தரவு பிறப்பிக்க வேண்டும். விசாரணை முடிவடைந்தவுடன் அந்த அவர் தவறு செய்தது நிரூபிக்கப்பட்டால் அவரை நிரந்தரமாக தொழில் செய்ய தடை விதிக்க வேண்டும்.

இவ்வாறு பல திருத்தங்கள் செய்யப்பட்டிருப்பது வழக்கறிஞர்களுக்கு எதிரானது என வழக்கறிஞர்கள் சங்கங்கள் போர்க்கொடி துாக்கியுள்ளன. வழக்கறிஞர்கள் சட்டத்தில் உயர் நீதிமன்றம் கொண்டுவந்துள்ள இந்த திருத்தங்கள் தமிழக அரசிதழிலும் வெளியிடப்பட்டுள்ளது.

தவறு செய்ததாக கருதப்படும் வழக்கறிஞர்கள் மீதான மீது நடவடிக்கையை  முன்பு தமிழ்நாடு பார் கவுன்சில் மட்டுமே எடுத்து வந்தது. இப்போது கொண்டுவரப்பட்ட இந்த சட்ட திருத்தத்தால் பார்கவுன்சிலின் பொறுப்புகள் பறிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

தமிழை வழக்காடு மொழியாக அறிவிக்கக்கோரி சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்ந்திருந்த முதல் டிவிஷன் பெஞ்சில் சில வக்கீல்கள் கோரிக்கைகள் அடங்கிய அட்டையைப் பிடித்து ஆர்ப்பாட்டம் செய்த விவகாரத்திற்கு பின்னர் உயர் நீதிமன்ற வளாகத்தில் மத்திய தொழில் பாதுகாப்பு படையின் பாதுகாப்பு போடப்பட்டது. உயர் நீதிமன்ற பதிவாளர் ஜெனரலின் பரிந்துரையின் அடிப்படையில் 40க்கும் மேற்பட்ட வக்கீல்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு அவர்கள் தொழில் செய்ய இடைக்காலத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் தற்போது நீதிமன்றம் மற்றும் நீதிபதிகளுக்கு எதிராக செயல்படும் வக்கீல்கள் மீது நீதிமன்றங்களே நடவடிக்கை எடுத்து சம்பந்தப்பட்ட வக்கீல்களை தொழில் செய்ய நிரந்தரத் தடை விதிக்க வகை செய்யும் சட்ட திருத்தம் கொண்டுவரப்பட்டிருப்பது வழக்கறிஞர்களுக்கு கிடுக்குப்பிடி போடும் வேலை என வழக்கறிஞர்கள் சங்கங்கள் கருதுகின்றன.

இதனால் வழக்கறிஞர்கள் சட்டம் 1961 சட்டப்பிரிவு 34 (1 ) கீழ் கொண்டு வரப்பட்டுள்ள சட்டத் திருத்தத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கம், , மற்றும் தமிழ்நாடு புதுச்சேரி  வழக்கறிஞர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு மற்றும் இதர சங்கங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கான வழக்கறிஞர்கள் தங்களது எதிர்ப்பை காட்டும் விதமாக சென்னையில் இன்று பேரணி நடத்திவருகின்றனர்.

- எஸ்.கிருபாகரன்
படங்கள்; தி.குமரகுருபரன்

 

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close