Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

யார் யாருக்கு வாரியத் தலைவர் பதவி? -பட்டியலை இறுதி செய்த முதல்வர்

அ.தி.மு.க அரசு பதவியேற்ற நாள் முதலாக, வாரியப் பதவியை குறிவைத்து காய்களை நகர்த்தத் தொடங்கிவிட்டார்கள் அ.தி.மு.கவின் சில சீனியர் புள்ளிகள். ' 11 வாரியத்தலைவர்கள் உள்பட 30 பதவிகளுக்கு வரலாறு காணாதப் போட்டி நடக்கிறது' என்கின்றனர் அ.தி.மு.கவினர்.

சட்டப் பேரவையில் அ.தி.மு.க தலைமையிலான அமைச்சரவை பதவியேற்ற நாள் முதலாக, வாரியத் தலைவர் பதவியைக் கைப்பற்றுவதற்கான வேலைகளில் கட்சியின் சீனியர்கள் இறங்கிவிட்டனர். முதல்கட்டமாக, திருமயம் தொகுதியில் தி.மு.கவின் ரகுபதியிடம் தோற்றுப் போன, வைரமுத்துவுக்கு வீட்டுவசதி வாரியத் தலைவர் பதவியைக் கொடுத்தார் ஜெயலலிதா. ' வாரியத் தலைவர் பதவிகளுக்கு யார் யார் பட்டியலில் இருக்கிறார்கள்?' என அ.தி.மு.க தலைமைக்கழக வட்டாரத்தில் விசாரித்தோம். நம்மிடம் பேசிய கட்சியின் மூத்த நிர்வாகி ஒருவர்,

" தேர்தலில் தோற்றுப்போன பலர் வாரியத் தலைவர் பதவியை எதிர்நோக்கிக் காத்திருக்கிறார்கள். அமைச்சர் பதவிக்கு இணையான அந்தஸ்து கிடைப்பதால்தான் இவ்வளவு போட்டியும். மாவட்டத்தில் அமைச்சருக்கு இணையான அந்தஸ்துடன் வலம் வரலாம் என்பதால், முன்னாள் அமைச்சர்கள் பலரும் இப்பதவிக்காகக் காத்திருக்கின்றனர். கடந்த ஆட்சியில் தே.மு.தி.க அதிருப்தி எம்.எல்.ஏக்கள் சிலர் அ.தி.மு.கவுக்கு ஆதரவாக இருந்தனர். இவர்களில் மா. ஃபா.பாண்டியராஜன், பண்ருட்டி ராமச்சந்திரன் தவிர வேறு யாருக்கும் தேர்தலில் போட்டியிட 'சீட்' கிடைக்கவில்லை.

இவர்களில் பண்ருட்டியார் அல்லது பொன்னையன் ஆகிய இருவரில் ஒருவருக்கு வாரியத் தலைவர் பதவியைக் கொடுக்க முடிவு செய்யப்பட்டிருக்கிறது. அதேபோல், மன்னார்குடி எஸ்.காமராஜ், கும்பகோணம் பகுதியைச் சேர்ந்த ஒருவர், புதுக்கோட்டை தொகுதியில் தோற்றுப் போன கார்த்திக் தொண்டைமான், சென்னையில் தோல்வியைத் தழுவிய அ.தி.மு.க சீனியர் ஒருவர் ஆகியோர் கடுமையாக முயற்சி செய்து கொண்டிருக்கிறார்கள். தற்போது சில வாரியங்களில் பதவியில் இருக்கும் சீனியர்கள் சிலர், அதே பதவியில் தொடரவும் வாய்ப்பு இருக்கிறது. தவிர, வாரியத் தலைவர் பதவிகளில் பெரிய அளவில் மாற்றம் செய்யவும் தலைமை முடிவு செய்திருக்கிறது.

அதாவது, வேளாண் துறையில் உள்ள சில பகுதிகளை ஒருங்கிணைத்து ஒரே வேளாண் வாரியமாக மாற்றுவது, ஒரே துறையின் கீழ் இயங்கும் சில வாரியங்களை ஒன்றிணைப்பது என சில முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டிருக்கின்றன. இதுதவிர, தாட்கோ தலைவர் பதவி உள்பட முப்பது அரசுப் பதவிகளுக்கும் கடுமையான போட்டி நடக்கிறது. தேர்தலில் 'சீட்' கிடைத்தும் தோற்றுப் போன பலர், இப்போது வாரியத் தலைவர் பதவியை எதிர்பார்த்து காத்துக் கிடக்கிறார்கள். இந்தமுறை, முழுக்க முழுக்க மன்னார்குடி சிபாரிசில்தான் வாரியத் தலைவர் பதவிகள் நிரப்பப்பட உள்ளன. இன்னும் சில நாட்களில் அறிவிப்பு வெளியாகும்" என்றார் அந்த நிர்வாகி. 

' சட்டப்பேரவைத் தேர்தலில் தோற்றுப் போனவர்களுக்கு வாய்ப்பளிப்பதைவிடவும், கட்சிக்காக உழைக்கும் உண்மைத் தொண்டர்களுக்கு வாரியப் பதவியை வழங்க வேண்டும்' என்ற குரல்களும் எழும்பத்தான் செய்கின்றன. 

-ஆ.விஜயானந்த்
 

எடிட்டர் சாய்ஸ்

MUST READ