Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

விபத்துக்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க சொன்னால் தடியடியா? -கண்டிக்கும் கருணாநிதி

சென்னை: அயனாவரத்தில் காவல் துறை காவனம் மோதியதில் சிறுவர்கள் இருவர் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த விபத்துக்குக் காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்கும்படி கேட்டுக் கொண்டால், அவர்கள் மீது காவல் துறையினர் தடியடி நடத்தி இருப்பது சிறிதும் விரும்பத்தக்கதல்ல; கடுமையாகக் கண்டிக்கத் தக்கதாகும் என்று கருணாநிதி கண்டனம் தெரிவித்து உள்ளார்.

இது குறித்து தி.மு.க. தலைவர் கருணாநிதி வெளியிட்டுள்ள அறிக்கையில், ''கிருஷ்ணகிரி அருகே இரண்டு  நாட்களுக்கு முன்பு தேசிய நெடுஞ்சாலையில்  டயர் வெடித்து  கட்டுப்பாட்டை இழந்து  தாறுமாறாக  ஓடிய  சரக்கு லாரி, தனியார் பேருந்து, கார் மீது  மோதியதில் 6 பெண்கள் உட்பட 17 பேர் இறந்தனர். 30க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்து, மருத்துவ மனையிலே சிகிச்சை பெற்று வருகின்றனர்.

நேற்றைய தினம்  புதுக்கோட்டை அருகே, அரசுப் பேருந்து ஒன்றும், கார் ஒன்றும் மோதிக் கொண்டதில், ஐந்து பேர் இறந்தனர். அந்தப் பகுதியிலே கடந்த ஆறு மாதத்துக்குள் 7 முறை  இதுபோன்ற கோர விபத்துகள் நடைபெற்றுள்ளதாம்.

நேற்றைய தினமே, சென்னை அயனாவரத்தில், காவல் துறை வேன் மோதியதில் இரு சிறுவர்கள் உயிரிழந்துள்ளனர். விபத்தை ஏற்படுத்திய போலீஸ் மீது நடவடிக்கை கோரி அந்தப் பகுதியிலே உள்ள பொதுமக்கள் சாலை மறியல் நடத்தியபோது, அவர்கள் மீது தடியடி நடத்தப்பட்டதில் 2 மூதாட்டிகள் உட்பட ஐந்து பேர் காயமடைந்துள்ளனர்.

தமிழ்நாட்டில் 2012 ஆம் ஆண்டு சாலை விபத்துகளில் 16,175 பேர் மரணமடைந்து, இந்தியாவிலேயே தமிழகம் முதலிடம் வகித்தது. 2013 ஆம் ஆண்டு 15,563 பேரும்; 2014 ஆம் ஆண்டு 15,190 பேரும் மரணமடைந்தனர் என்ற புள்ளி விபரங்கள் நமக்கு அதிர்ச்சியூட்டுகின்றன.

அண்மைக் காலத்தில் தேசிய நெடுஞ்சாலையில் இப்படிப்பட்ட விபத்துகள் ஏற்பட்டு பலர் பலியாவதும், விபத்துக்குக் காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்கும்படி கேட்டுக் கொண்டால் காவல் துறையினர் அவர்கள் மீது தடியடி நடத்துவதும் சிறிதும் விரும்பத்தக்கதல்ல; கடுமையாகக் கண்டிக்கத் தக்கதாகும். இரக்கமற்ற முறையில் பொது மக்கள் மீது  காவல் துறையினர் தடியடி நடத்துவதற்கும் எனது கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

முதலமைச்சர் ஜெயலலிதா மெட்ரோ ரெயில் சேவையை உருவாக்குவது என்ற கருத்துரு, அவருடைய ஆட்சிக் காலத்திலேயே உருவானது என்பதைப்போல பிரதமருக்கு எழுதிய தனது கடிதத்திலே செயற்கையாகப் பெருமை தேடிக் கொண்டிருக்கிறார். கழக ஆட்சியில் தொடங்கப்பட்ட முயற்சிக்குத் தான் தற்போது மத்திய அரசு ஒப்புதல் அளித்திருக்கிறது என்பதையும் ஜெயலலிதாவும் மற்றவர்களும் புரிந்து கொண்டால் சரி.

எப்படியோ கழக ஆட்சியில் மேற்கொண்ட விரிவாக்கத் திட்டம் சம்பந்தமான முயற்சிக்கு மத்திய அரசு தற்போது ஒப்புதல் அளித்திருப்பது, அந்தத் திட்டத்திற்காக முதலில் முயற்சி மேற்கொண்டவன் என்ற முறையில் மத்திய அரசுக்கும், பிரதமர் மோடிக்கும் சென்னை மாநகர மக்களின் சார்பில் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்" என்று கூறி உள்ளார்.

எடிட்டர் சாய்ஸ்

MUST READ