Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

' நாம் சொன்னால் இந்த நாடு கேட்கத்தான் வேண்டும்!' -அதிர வைக்கும் இயக்குநர் ராம்

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி படுகொலை வழக்கில், காவல்துறையால் குற்றம் சுமத்தப்பட்ட ஏழு பேரும் வருகிற 11-ம் தேதியோடு,  25 ஆண்டு கால சிறைத்தண்டனையை நிறைவு செய்கிறார்கள். இவர்களின் விடுதலையை எதிர்நோக்கும் வாகனப் பேரணி,  வேலூரில் இருந்து சென்னைக் கோட்டையை நோக்கி கிளம்ப இருக்கிறது.

நடிகர்கள் சத்யராஜ், விஜய் சேதுபதி, கலையரசன், இயக்குநர்கள் ரஞ்சித், நவீன் உள்ளிட்டவர்கள், பேரறிவாளன் விடுதலைக்கான வாகனப் பேரணிக்கு ஆதரவாக கருத்துக்களை கூறியுள்ளனர்.

இந்நிலையில், இதுபற்றி விரிவாகப் பேசிய இயக்குநர் ராம், " நீங்களும் நானும் வாழும் இந்த ஊர் நல்லா இருக்கணும்கிறதுதான் நம்முடைய ஆசை. 'அநீதி தோற்கணும் நீதி ஜெயிக்கணும்' னு நினைக்கின்ற வெகுளியானக் குழந்தைகள்தான் நாம். தினம்தோறும் செய்திகளைப் படிக்கிறோம். அதில், நல்லவர்கள் தோற்கடிக்கப்படும்போது வரும் ஆற்றாமையை எப்படித் தீர்த்துக் கொள்வது? எனத் தெரியாமல் வாழ்ந்திருக்கிறோம்.

இப்போதெல்லாம் கோபம் வந்தால், ஃபேஸ்புக்கில் ஒரு ஸ்டேட்டஸ் போட்டு மனதைத் தேற்றிக் கொள்கிறோம். ஆனால், கடந்த 25 வருடங்களாக, அதாவது 1991 ஜூன் 11 முதல் இன்று வரை, ஒரு அம்மா நீதிக்காகப் போராடிக் கொண்டிருக்கிறார். அவர் பெயர் அற்புதம் அம்மாள். அந்த அம்மாவை நீங்கள் எதாவது ஒரு பஸ் ஸ்டேண்டில், தன் மகனின் விடுதலைக்காக பேம்ப்லெட் கொடுக்கும் அம்மாவாக நீங்கள் பார்த்திருக்கலாம். ஏதோ ஒரு இடத்தில் அவர் உண்ணாவிரதம் இருப்பதைப் பார்த்துக் கொண்டு நீங்கள் கடந்து போயிருக்கலாம். கடந்த 25 வருடங்களாக ஜனநாயக முறைப்படி, தன்னுடைய மகனின் விடுதலைக்காக அத்தனை வழிகளிலும் போராடியவர் அவர்.

தன் மகன் உள்பட 7 பேரின் விடுதலைக்காகவும் அவர் போராடிக் கொண்டிருக்கிறார். பேரறிவாளன் யார் என்று உங்களுக்குத் தெரியாமல் இருக்கலாம். ஏனென்றால், என்னுடைய உதவியாளருக்கு ராஜீவ் காந்தி யார் என்று தெரியவில்லை. ராஜீவ்காந்தி நமது பாசத்திற்கு உரிய உலகத் தலைவர்களில் ஒருவர். அவர் மரணத்திற்குக் காரணமானவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் என்பதுதான் ஒவ்வொரு இந்தியனின் ஆசையும். ஆனால், அதற்காக அந்தக் கொலையில் துளியும் சம்பந்தம் இல்லாத பேரறிவாளனை தண்டிப்பது எந்த வகையில் நியாயம்? பேரறிவாளனை விசாரித்த அதிகாரியே, ' அவர் குற்றவாளி அல்ல' எனச் சொல்லியிருக்கிறார். நீண்டகாலம் கழித்துத்தான் அந்த அதிகாரி உண்மையைச் சொன்னார்.

இந்தத் தேர்தலில் புதிதாக ஓட்டுப் போட்ட 2 கோடி பேரும் பிறப்பதற்கு முன்பிருந்தே சிறையில் இருக்கிறார் பேரறிவாளன். அவர் விடுதலை செய்யப்பட வேண்டும் என்பதை, இந்த அரசு ஏற்றுக் கொள்ள வேண்டும். அவருடைய விடுதலைக்காக வருகிற 11-ம் தேதி நடக்கும் வாகனப் பேரணிக்கு, அற்புதம் அம்மாள் தலைமை தாங்க இருக்கிறார். இது நம்முடைய நாடு. நாம் சொன்னால் இந்த நாடு கேட்கத்தான் வேண்டும். சென்னையை நோக்கிக் கிளம்பும் அந்தப் பேரணியில் நாமும் பங்கேற்று, அவர்கள் விடுதலை செய்யப்பட வேண்டும் என்பதை உரக்கச் சொல்வோம். நாம் சொல்வதை இந்த நாடு கட்டாயம் கேட்கும்" என சொல்லி முடித்தார்.



அரசியல் கட்சித் தலைவர்களும், ' மனிதநேயத்தோடு பேரணியில் பங்கேற்போம்' என வலியுறுத்தி வருகின்றனர். திரையுலகப் பிரமுகர்களின் அடுத்தடுத்த ஆதரவுக்கரங்களால் மனதளவில் உற்சாகமாக இருக்கிறார் அற்புதம் அம்மாள்.

ஆ.விஜயானந்த்
 

எடிட்டர் சாய்ஸ்

MUST READ