Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

ரூ.570 கோடி விவகாரம்... தி.மு.க. புகார் மீது எடுத்த நடவடிக்கை என்ன? -சி.பி.ஐ.க்கு உயர் நீதிமன்றம் கேள்வி

சென்னை: கன்டெய்னர் லாரியில் ரூ.570 கோடி பிடிபட்டது தொடர்பாக தி.மு.க. கொடுத்த புகாரில் எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன? என்று சி.பி.ஐ.க்கு சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பி உள்ளது.

தமிழகத்தில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் இருந்தபோது, திருப்பூரில் மூன்று கன்டெய்னர் லாரிகளில் எடுத்துச் செல்லப்பட்ட 570 கோடி ரூபாய் பணத்தை தேர்தல் பறக்கும்படை பறிமுதல் செய்தது. இது குறித்து சென்னை உயர் நீதிமன்றத்தில், தி.மு.க. செய்தி தொடர்பாளர் டி.கே.எஸ்.இளங்கோவன் ஒரு மனு தாக்கல் செய்திருந்தார்.

அந்த மனுவில், ''தமிழக சட்டசபைக்கு தேர்தல் நடந்தபோது, கடந்த மே மாதம் 13-ம் தேதி திருப்பூரில் 3 கன்டெய்னர் லாரிகளில் ஏற்றிச் செல்லப்பட்ட பணத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். அந்த லாரிகளில் ரூ.570 கோடி இருந்தது. இந்த பணத்தை கொண்டு வந்தவர்களிடம் முறையான ஆவணங்கள் எதுவும் இல்லை.

பணம் கொண்டு வந்த 3 கன்டெய்னர் லாரிகளின் பதிவு எண்களும் போலியானது என்று தெரிய வந்துள்ளது. இந்த பணம் யாருக்காக, எங்கிருந்து எடுத்துச் செல்லப்படுகிறது என்பது குறித்து விசாரித்து, தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு பலமுறை புகார் செய்தும் நடவடிக்கை எடுக்கவில்லை.

அதன் பின்னர், சட்டத்துக்கு புறம்பாக எடுத்துச் செல்லப்பட்ட இந்த பணம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்த வேண்டும் என்று கடந்த மே 30ம் தேதி சி.பி.ஐ. இயக்குநர், இணை இயக்குநர் உள்ளிட்டோருக்கு புகார் மனு அனுப்பியும் நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே, என் புகார் மீது வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்த சி.பி.ஐ. இயக்குநருக்கு உத்தரவிட வேண்டும்" என்று கூறப்பட்டு இருந்தது.

இந்த மனு, நீதிபதி ஆர்.சுப்பையா முன் இன்று காலை விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் பி.வில்சன், ''பறிமுதல் செய்யப்பட்ட ரூ.570 கோடி யாருக்காக எடுத்துச் செல்லப்பட்டது என்பதில் மர்மம் நீடித்துக் கொண்டே வருகிறது. சி.பி.ஐ. விசாரணை நடத்தினால், இந்த மர்மம் விலகும்" என்று வாதிட்டார்.

இதைத் தொடர்ந்து நீதிபதி பிறப்பித்த உத்தரவில், ''மனுதாரர் கடந்த மே 30-ம் தேதி கொடுத்த புகார் மீது இதுவரை என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது? அந்த புகாரின் நிலை என்ன என்பது உள்ளிட்ட அனைத்து விவரங்களையும் அறிக்கையாக சி.பி.ஐ. தரப்பில் தாக்கல் செய்ய வேண்டும். மேலும், சி.பி.ஐ. விசாரணை வேண்டும் என்ற கோரிக்கை குறித்து 2 வாரங்களுக்குள் பதில் அளிக்க வேண்டும்" என்றும் கூறி உள்ளார்.

எடிட்டர் சாய்ஸ்

அப்போலோ டூ எம்.ஜி.ஆர் சமாதி... ஜெயலலிதாவுக்கு அரண் அமைத்த மன்னார்குடி!

MUST READ