Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

புத்தகக் கண்காட்சி, விவசாய விழிப்பு உணர்வு: இப்படியும் நடத்தலாம் திருமணம்!

யிரம் காலத்துப் பயிர் என திருமணத்திற்கு முக்கியத்துவம் தந்த காலமெல்லாம் மலையேறிப் போய்விட்டது. தனக்கு சரியெனப்பட்டதை தயக்கமின்றி கூறும் இன்றைய தலைமுறை தன் வாழ்க்கை இணையை தேர்வு செய்யும் வைபவத்திலும் அத்தகைய அணுகுமுறையையே கையாண்டு அசத்துகிறார்கள்.

திருவாரூரில் நடந்த புத்தக கண்காட்சி விவசாய விழிப்பு உணர்வு என அசத்தலான அம்சங்களுடன் அரங்கேறியது ஒரு திருமணம். திருவாரூர் வேலுடையார் கல்வி நிறுவனங்களின் தாளாளர் கே.எஸ்.எஸ்.தியாகபாரி. இவரது மகள் கவுசல்யாவிற்கு திருமணம் நடைபெற்றது. நகரின் முக்கிய பிரமுகர்கள் பொதுமக்கள் என திரளான பேர் கலந்துகொண்ட இந்த திருமணத்தில் நிகழ்ந்த பல அம்சங்கள் அனைவரையும் கவர்ந்தது. தமிழக கலாச்சாரப்படி அட்சதையாக நெல்மணிகள் தரப்பட்டதே முதல் ஆச்சர்யம்.

மணவிழா அரங்கில் ஸ்டால்கள் பல இடம்பெற்றிருந்தன. ஒரு ஸ்டாலில் திருவாரூரில் இயங்கி வரும் 'மாற்றத்திற்கான மக்கள் களம்' சார்பில் சமுதாய விழிப்புணர்வு புகைப்படங்கள் பார்வைக்கு வைக்கப்பட்டிருந்தன. மற்றொரு ஸ்டாலில், 'நமது நெல்லைக் காப்போம்' அமைப்பின் சார்பில் பாரம்பரிய விவசாயத்தின் முக்கியத்துவமும், நெல் சேமிக்கும் கோட்டையும் மற்றும் அடுத்த தலைமுறை விவசாய எடுகோள்கள் குறித்த கண்காட்சியும் இடம்பெற்றன. கைவினைக் கலைஞர்களை ஊக்குவிக்கும் வகையில் சில ஸ்டால்கள் அமைக்கப்பட்டிருந்தன.

ஒரு பெரிய அரங்கில் புத்தகக் கண்காட்சியும் இடம்பெற்றது. அதில், பலதரப்பட்ட நூல்களும் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்தன. 'யாழ் நூலங்காடி' ஏற்படுத்திய இந்த ஸ்டாலில் விற்பனையாகும் புத்தகங்கள் அனைத்திற்கும் 50% தள்ளுபடி தரப்பட்டது. அதாவது நாம் வாங்கும் புத்தகங்களின் பாதித் தொகையை நாம் செலுத்தினால் போதும், மீதித் தொகையினை மணமக்கள் சார்பில் செலுத்துவார்கள் என அறிவிக்கப்பட்டது.

திருமணத்திற்கு வந்தவர்கள் இதைப் பார்த்து ஆச்சரியப்படவும், பாராட்டவும் செய்தனர். இதுவரை மஞ்சள் பையும், மரக்கன்றுகளும் கொடுத்து வந்த திருமண வீடுகள் புது வகையில் அறிவை விரிவு செய்யும் வகையில் புத்தகக் களஞ்சியத்தை தந்தது இதுவே முதல்முறை.  இதனால் திருமணத்திற்கு சென்ற பலரும் கையில் மரக்கன்றுகளுடனும், புத்தகங்களுடனும் திரும்பினர்.

வசதி படைத்தவர் வீட்டு திருமணங்கள் என்றால் நகர் முழுக்க ஃப்ளக்ஸ் போர்டுகள், சுவர் விளம்பரங்கள், விளக்கு அலங்காரங்கள் எனப் பலவிதங்களில் பணம் செலவழித்து தங்கள் படோடோபத்தை காட்டும் திருமண நிகழ்ச்சிகளில், இந்தத் திருமணம் அந்த பிம்பத்தை மாற்றி இருக்கிறது. இப்படியும் பயனுள்ள வகையில் செலவழிக்கலாம் என வகுத்துக் கொடுத்திருக்கிறது. திருமணத்திற்கு முந்தைய நாள் தொடங்கிய இந்த புத்தகக் கண்காட்சி திருமண நாளோடு நிறைவடையாமல் இன்னும் ஒரு நாள் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்காகவும் நீட்டிக்கப்படிருக்கிறது.

யாழ் நூலங்காடி உரிமையாளர் கந்தன் பேசினோம், '' இது போன்ற திருமண விழாக்களில் புத்தகக் கண்காட்சி நடத்துவது இதுதான் முதல்முறை. பணத்தை  ஃப்ளக்ஸ் போர்டுகள், சுவர் விளம்பரங்கள், விளக்கு அலங்காரங்கள் என  வீண் ஆடம்பரத்திற்கு செலவு செய்வதை விட்டு, பிறருக்கு வாழ்நாள் முழுவதும் பயனளிக்கும் இதுபோன்ற அறிவுசார் புத்தகங்களில் முதலீடு செய்தால் நமது பெயரை காலத்திற்கும் கொண்டு செல்லும். அந்த  வகையில் நானும் இதற்கு ஒரு  வகையில் பயன்பட்டிருப்பது மகிழ்ச்சியே'' என்றார்.

திருமண விழாவில் அசத்திய இன்னொரு விஷயமும் உண்டு. மாங்கல்யம் கட்டிமுடித்தபின் மணமக்கள் மேடையில் இருந்து இறங்கி வந்து, வந்திருந்தவர்களை அவரவர் இடம் தேடிச்சென்று வாழ்த்து பெற்றனர்.
புது வகையில் தனது இல்லறத்தை தொடங்கிய இந்த கவுசல்யா – பாரி தம்பதிகளை வாழ்த்துவதோடு பாராட்டவும் செய்வோம்.

- த.க.தமிழ் பாரதன்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

“மாட்டின் மீதான அக்கறை, சிசுக்கள் மீது கிடையாதா?!” நெஞ்சு பொறுக்குதில்லையே #GorakhpurTragedy
Advertisement

MUST READ

Advertisement
[X] Close