Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

'கடைகளை மூடுங்கள்... எங்கள் வாழ்வாதாரத்தை மூடிவிடாதீர்கள்!' - அலறும் டாஸ்மாக் ஊழியர்கள்!

மிழகத்தில் ஆளும்கட்சியான அதிமுகவைத்தவிர ஒட்டுமொத்த அரசியல் கட்சிகள், பொதுமக்கள் என்று அனைத்துத் தரப்பினரும் ஓரணியில் திரண்டு நின்ற விவகாரம் தமிழக அரசியல் வரலாற்றில் 'டாஸ்மாக்'  விவகாரமாகத்தான் இருக்கும்.

மது ஒழிப்புப் போராளி சசிபெருமாள் இறந்து போனார், மதுரை நந்தினி வெற்றிகரமாக 50- வது முறை கைதானார். 'மக்கள் அதிகாரம்' பிரசாரக் கலைஞர் கோவன், தேசத் துரோக வழக்கில் கைதானார். மனித ஆரோக்கியம் குறித்து வகுப்பெடுத்த மருத்துவர்கள் கூட,  மதுவின் தீமை குறித்து விளக்கம் கொடுக்கத் தயங்கினர். டாஸ்மாக்கை விமர்சித்தால்,  அது ஆளும் அரசை நேரடியாக விமர்சிக்கும் அளவிற்கு அது கொடுங் குற்றமாகவே கருதப் பட்டது.

நடந்து முடிந்த தமிழக சட்டசபை தேர்தல் 2016-ன் போது மதுவிலக்கு கோஷம் சற்று அதிகமாகவே எதிரொலித்தது. தி.மு.க. கூட,  டாஸ்மாக்கிற்கு எதிரான மக்கள் கோபத்தைப் பார்த்து விட்டு தன்னுடைய தேர்தல் அறிக்கையில், தாங்கள்  ஆட்சிக்கு வந்தால் முழு மதுவிலக்கு கொண்டு வரப்படும் என்று கூறியிருந்தது.

அ.தி.மு.க. மட்டும் தன்னுடைய தேர்தல் அறிக்கையில், 'தமிழ்நாட்டில் மதுவிலக்கு படிப்படியாக கொண்டு வரப்படும்'  என்று சொன்னது. மே-19, 2016-ன் தேர்தல் முடிவுகள் அதிமுகவுக்கு சாதகமாக அமைய, முதல்வராக பொறுப்பேற்ற ஜெயலலிதா, முதல் நாள் கையெழுத்தில்,  5 திட்டங்களை அறிவித்தார். அதில் ஒன்று, முதற்கட்டமாக 500 டாஸ்மாக் கடைகளை மூடுவதற்கான கையெழுத்து.

அதே உத்தரவில் டாஸ்மாக் மதுக்கடைகள் இயங்கும் நேரத்தையும் குறைப்பதாக முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார். இதனால்,  தமிழ்நாடு முழுவதும் 6500 டாஸ்மாக் மதுக்கடைகள் வழக்கமாக திறக்கப்படும் காலை 10 மணிக்கு மாற்றாக  மதியம் 12 மணி முதல் இரவு 10 மணி வரை செயல்படும் நடைமுறை அமலானது.

முதல்வர் கையெழுத்திட்ட  மறுநாளே, (மே 24) இது நடைமுறைக்கு வந்தது. மூட உத்தரவிடப்பட்ட 500 மதுக்கடைகள் எவையெவை என்பது தொடர்பான கணக்கெடுப்பு தொடர்ந்து நடத்தப்பட்டது.

பள்ளிக்கூடங்கள், கோவில்கள், சர்ச்சுகள், மசூதிகள் உள்ளிட்ட வழிபாட்டுத் தலங்கள் அருகில் ஏராளமான டாஸ்மாக் மதுக்கடைகள் உள்ளன. அந்த கடைகளைத்தான் நாம் முதலில் மூட வேண்டும் என்று கலெக்டர்கள் தங்களது பரிந்துரைகளில் குறிப்பிட்டிருந்தனர்.

சென்னை மாவட்ட கலெக்டர் தனது பரிந்துரை கடிதத்தில், முதலில் 50 மதுக்கடைகளை மூடலாம் என்று பட்டியல் தயாரித்து கொடுத்துள்ளார். அதில் பெரும்பாலான கடைகள் வழிபாட்டுத் தலங்கள் அருகில் உள்ள கடைகளாகும். சென்னையைத் தவிர பிற மாவட்ட கலெக்டர்கள், தங்களது மாவட்டங்களில் 10 முதல் 20 மதுக் கடைகளை அகற்றலாம் என்று, மூடப்பட வேண்டிய மதுக்கடைகளின் விபரத்தை கொடுத்துள்ளனர்.

இந்நிலையில் தமிழக அரசு மூடுவதாகச் சொன்ன 500 டாஸ்மாக் கடைகள் எது, அது எந்தெந்த மாவட்டத்தில் வருகிறது போன்ற கேள்விகளுக்கு இன்னும் முழுமையாக இன்னும் விடை தெரியாத நிலைதான் இருக்கிறது.

ஒவ்வொரு கடையிலும் பணியாற்றி வருகிற அல்லது பணியாற்றி வந்த (?) டாஸ்மாக் ஊழியர்கள் மூன்றாயிரம் பேரின் 'மாற்றுப்பணி' குறித்து ஏதும் சொல்லப் படவில்லையே என்ற 'வாழ்வாதார அலறல்' ஊழியர்கள் தரப்பில் எதிரொலிக்க ஆரம்பித்துள்ளது.

சி.ஐ.டி.யு. டாஸ்மாக் ஊழியர்கள் சங்கத்தின் மாநில பொதுச் செயலாளரான கே.பி.ராமு இது குறித்து நம்மிடம் கூறுகையில், " இப்போது பிரச்னையே எந்தக் கடையை முதலில் மூடுவது, அது யார் கடை என்பதுதான். அது அமைச்சர் கடை, அதனால் கடைசியில் மூடலாம் என்பது போல கடைக்கான பாதுகாப்பு பரிந்துரையை செய்து கொண்டிருக்கிறார்கள்.

மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சி என்று ஏ, பி, சி, டி,  ஆகிய நான்கு நிலைகளில் டாஸ்மாக் மதுபானக் கடைகள் இயங்குகின்றன. கிராமப் புறங்களில் ஒரு கடைக்கு 3 பேரும் நகர்ப்புறங்களில் 4 முதல் 5 பேரும் சென்னை போன்ற பெரு நகரங்களில், ஒரு டாஸ்மாக் கடைக்கு 7 பேரும் வேலையில் இருக்கின்றனர்.

மூடப்படுவதாக சொல்லப்படும் கடைகளில் பணியாற்றும் ஊழியர்களுக்கான மாற்றுப் பணி ஏற்பாடுகள்  என்ன என்பது குறித்து அரசு எந்த முடிவையும் சொல்லவில்லை. அவர்களால் எந்தக் கடையை மூடுவது என்ற முடிவுக்கே இன்னும் வர முடியவில்லை.

ஆட்சியைப் பிடித்ததும் அந்த சந்தோஷத்தில் 500 கடைகளை முதலில் மூடுவோம் என்று அறிவித்து விட்டார்கள்.  ஆனால் , நெடுஞ்சாலைகளிலும், பள்ளிகள், வழிபாட்டுத் தலங்களிலும் உள்ள இடங்களில் காணப்படும் 729 கடைகளை மூடச் சொல்லி சுப்ரீம் கோர்ட் கொடுத்த உத்தரவையே இன்னும் அமல்படுத்தாமல் இருக்கிறார்கள்.

அரசு மூடுவதாகச் சொல்லியுள்ள 500 மதுக் கடைகளால் டாஸ்மாக் ஊழியர்கள் மட்டும் பாதிப்பு அடையப் போவதில்லை. அருகில் ' பார் ' வைத்து நடத்துகிற டாஸ்மாக் சார்ந்த தொழிலில் உள்ளவர்களும்தான்.முப்பது லட்சம் அட்வான்சுடன், முப்பதாயிரம் ரூபாய் வாடகை கொடுத்து அதற்கான இடத்தைப் பிடித்து 'பார்' நடத்துகிறவர்கள், 'பார்' நடத்த ஹோட்டல் போல அதற்கான சமையல் உபகரணங்களை எல்லாம் வாங்கி வைத்து விட்டு,  இப்போது புலம்பிக் கொண்டிருப்பது தனிக்கதை.

பார்- நேரத்தைக் குறைத்துள்ளதாகச் சொல்லி, இந்த அரசு பெருமைப்பட்டுக் கொள்வதில் எந்த நியாயமும் இல்லை. முன்பெல்லாம்,  காலை 10 மணிக்கு டாஸ்மாக் கடையைத் திறக்கும் போது வழக்கமாக நான்கு பேர் இருப்பார்கள், இப்போது நானூறு பேர் கடைக்கு முன்னால் நிற்கிறார்கள்.

அவர்களை வரிசையில் நிற்க வைக்க போலீஸ் பந்தோபஸ்து வேறு போடப்படுகிறது. டாஸ்மாக் கடைகளின் அளவே  அதிக பட்சமாக எட்டுக்கு , எட்டு என்ற அளவில் இருக்கும்போது நானூறு குடிமகன்கள்  ஒரே நேரத்தில் வந்து மேலே விழுந்தால் அந்த விற்பனையாளர்களின் நிலையை கொஞ்சம் எண்ணிப் பாருங்கள்.

கடையின் விற்பனை நேரத்தை குறைத்ததால், சரக்கு விற்பனை குறையும், குடிப்பவர் எண்ணிக்கை குறையும் என்ற கணக்கே மிகவும் தவறான கணக்காகும். அவங்க, கணக்கை சரியாகப் போட்டிருக்கணும் " என்று முடித்துக் கொண்டார்.

டாஸ்மாக் கடைகள் 500 அல்ல அனைத்துமே மூடப்பட வேண்டியவைதான்; அதில் மாற்றுக்கருத்துக்கு இடமில்லை. எனவே இதுபோன்ற நடவடிக்கைகளை மேற்கொள்ளும்போது பாதிக்கப்படும் ஊழியர்கள் தரப்பிலிருந்து 'மாற்று வேலை'  என்ன, வாழ்வாதாரத்திற்கான உத்தரவாதம் என்ன என்பது போன்ற கேள்விகள் எழத்தான் செய்யும். டாஸ்மாக் கடைகள் மூடப்படுவதில் எவ்வளவு நியாயம் உள்ளதோ அதே அளவுக்கு அதில் பணியாற்றும் ஊழியர்களுக்கான மாற்று வேலை உத்தரவாத கோரிக்கையும் நியாயமானதே.

எனவே முதல்கட்டமாக மூடுவதாக அறிவித்துள்ள 500 டாஸ்மாக் கடைகளை கண்டறிவதில் மேலும் தாமதிக்காமல், அதனை விரைந்து செயல்படுத்தும் அதே தருணத்தில்,  அதன் ஊழியர்களின் வாழ்வாதாரத்திற்கான மாற்று வேலை குறித்த அறிவிப்பையும்   வெளியிட்டு, ஊழியர்களின் அச்சத்தை போக்குவதும் அரசின் கடமையே!

- ந.பா.சேதுராமன்
 

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

“மாட்டின் மீதான அக்கறை, சிசுக்கள் மீது கிடையாதா?!” நெஞ்சு பொறுக்குதில்லையே #GorakhpurTragedy
Advertisement

MUST READ

Advertisement
[X] Close