Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

மதுரை டு சென்னை...கூலிப்படை திகிலில் தமிழகம்!

‘டேய் மாப்ளே வாங்கடா, நம்ம மாமாவுக்கு குடைச்சல் தர்ற ஒருத்தனை இன்னைக்கு முடிக்க போறோம்’’ என்று வில்லாபுரம் பகுதி நண்பர்களை அட்டாக் பாண்டி விசுவாசி அழைத்ததும், என்ன ஏதுவென்று விசாரிக்காமல், யாரை முடிக்க போகிறோம் என்பதுகூட தெரியாமல், நண்பன்  கூப்பிட்டதும், கேஷுவலாக போய் முடித்துவிட்டு வீடு திரும்பினார்கள் அவர்கள். மறுநாள் பேப்பரில் பார்த்தபின்தான் அவர்களுக்கு தெரியவந்தது, தாங்கள் பொலி போட்டது, மதுரையின் மெகா பிரபலம் பொட்டு சுரேஷ் என்று.

இருபது வருடங்களுக்கு முன்பு நடந்த கம்யூனிஸ்ட் கவுன்சிலர் லீலாவதி படுகொலை, முன்னாள் அமைச்சர் தா.கிருஷ்ணன், சிவகங்கை சேர்மன் முருகன், இப்படி நீண்டு கொண்டே போகும் கூலிப்படை படுகொலைகள்….அந்தளவுக்கு கொலைகள் செய்வதென்பது மிக சர்வ சாதாரணமாகிவிட்டது.

அரசியல் மற்றும் சாதீயப்படுகொலையோ, பழிக்குப்பழி கொலையோ, ஆதாயக்கொலையோ, திட்டமிடப்பட்ட படுகொலையோ.... இதுபோன்ற கொடூரமான கொலைகள் தமிழகத்தில் எங்கு நடந்தாலும்,அதில் மதுரையை சேர்ந்த கூலிப்படை கும்பல்கள் சம்பந்தப்பட்டிருப்பது தொடர்கிறது.

குமரி முதல் கும்மிடிப்பூண்டி, கோவை முதல் நாகை வரை தமிழகத்தின் குறுக்கும் நெடுக்குமாக சென்று கொலை செய்வது, ஆள் கடத்துவது என்று, மார்கெட்டிங் எக்ஸ்கியூட்டிவ் போல மதுரையிலிருந்து கூலிப்படையினர் சென்று வருகிறார்கள். அடையாள அட்டை இல்லாதது மட்டுமே குறை(?!).

மதுரையில் அஸ்ரா கார்க் எஸ்.பி.யாகவும், போலீஸ் கமிஷனராக கண்ணப்பனும் இருக்கும்போது கூலிப்படையினரின் அட்டகாசம் அடங்கியிருந்தது. அவர்கள், கூலிப்படையினரை நிரந்தரமாக உள்ளேயே வைத்திருக்க முயற்சிகளை மேற்கொண்டனர். அவர்கள் மாறிச் சென்றபின், பழைய திருடி கதவைத்திறடி கதையாகிவிட்டது. மதுரை மாநகரின் சட்டம் ஒழுங்கே கேள்விக்குறியாகி விட்டது.
 
கட்சி பேதமின்றி தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு நிலையை கேலிக்குரியதாக்கி வருகிறார்கள் இந்த கூலிப்படையினர், அல்லது அவர்களது பின்னணியில் இருக்கும் முக்கிய புள்ளிகள். 

கடந்த வருடங்களில் கூலிப்படையினரின் அட்டகாசத்தை குறைக்க, சம்பந்தப்பட்ட குற்றவாளிகளை பிடித்து சிறையில் அடைத்தாலும், குண்டாஸில் போட்டாலும் சட்டத்தின் இண்டு இடுக்குகளை பயன்படுத்தி வெளியே வந்து மீண்டும் தொழிலில் (!) இறங்கி விடுகிறார்கள். அவர்களுக்கு சிறை பயமோ, தண்டனை பயமோ கொஞ்சமும் இருப்பதில்லை.

நீதிமன்றங்களில் வழக்கு நிற்காமல் சட்டத்தின்மூலம் தண்டிக்கமுடியாமல், பல்கிப்பெருகிக் கொண்டிருக்கும்   கூலிப்படையின் தீவிரத்தை கட்டுப்படுத்த, சம்பந்தப்பட்ட கேங்லீடர்களை குறி வைத்து காவல்துறையினர்  என்கவுண்டர் மூலம் 'போட்டு' விடுவதும் உண்டு. அல்லது போட்டி கூலிப்படைகள் தங்களுக்குள் மாற்றிமாற்றி போட்டுக்கொள்வதுண்டு. அப்படியிருந்தாலும் செத்துப்போகும்   கூலிப்படைத்தலைவனின் விழுதுகள் விருட்சமாக கிளம்பி விடுகின்றன வெகுவிரைவில்.

தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் இடைவிடாமல் குற்ற சம்பவங்கள் நடந்து வருகின்றன. பல கொலைகளில் கூலிப்படையினரின் கைவரிசை உள்ளதாக காவல்துறையினர் சொல்கிறார்கள். அதிலும் மதுரை மற்றும் தென் மாவட்டங்களைசேர்ந்த கூலிப்படையினர்.

கூலிப்படையினரின் பெருக்கம் தமிழக அரசியல் கட்சிப் பிரபலங்களையே அசைத்துப்பார்த்துவிட்டதுதான் இப்போதைய அதிர்ச்சி. மாற்றம் முன்னேற்றத்தையும் எதிர்பார்த்து தமிழக தெருக்களில் சர்வசாதாரணமாக உலவ வந்துவிட்ட இளம்தலைமுறை அரசியல்வாதிகளுக்கு இது பெரும் கலக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது. பாஜக தமிழக தலைவர் தமிழிசை தனக்கு வந்த ஒரு எஸ்.எம்.எஸ் தகவலுக்கு அஞ்சி அலறி கமிஷனர் அலுவலக படிகளில் கால்வைக்கவேண்டியதானது.

திமுக தலைவர் கருணாநிதி, சமீப காலமாக தமிழகத்தில் பயங்கரமான கொலைகள், கடத்தல், திருட்டு சம்பவங்களை குறிப்பிட்டு, தமிழகத்தில் கூலிப்படையின் அட்டகாசம் அதிகரித்து விட்டதாக அறிக்கை விட்டுள்ளார்,  அதில் விருதுநகர் மாவட்டம் திருச்சுழியில் திமுக ஒன்றிய செயலாளர் படுகொலை செய்யப்பட்டது, திருவண்ணாமலையில் மாணவி அஸ்வினி பலாத்காரம் செய்து படுகொலை, சென்னை பெரியமேட்டில் பைனான்ஸ் அதிபர் பட்டப்பகலில் ரோட்டில் ஓட ஓட வெட்டி கொலை செய்யப்பட்டது, பெரியமேடு காவல் நிலையம் அருகே சமூகஆர்வலர் இளங்கோ வெட்டிக்கொலை செய்யப்பட்டது, அரியலூரில் புதிய நிதிக்கட்சி நிர்வாகி முருகேசன் படுகொலை,வடபழனியில் நாகேஸ்வராஜ் என்ற வங்கி ஊழியர் கொலை, கோடம்பாக்கத்தில் வக்கீல் முருகன் கொலை என்று பரபரப்பான கொலை சம்பவங்களையும், மிகபெரியரிய திருட்டு சம்பவங்களையும் பட்டியல் போட்டிருக்கிறார், இதில் சில கூலிப்படையினரால் நடந்த கொலைகளையும் குறிப்பிட்டிருக்கிறார். கள்ள உறவுக் கொலைகளை அவர் குறிப்பிடவில்லை.

தொழிற்போட்டி, அரசியல் படுகொலை என்ற நிலையில் இருந்த கூலிப்படையினரின் சேவை இன்று குடும்ப உறவுச் சிக்கல்களில் 'தீர்வு' காண்பது வரை என வந்து நிற்கிறது. சென்னையில் உயர்நீதிமன்ற வழக்கறிஞரை அவரது மனைவியே தனது கள்ளக்காதலுடன் திட்டமிட்டு கொன்றது சமீபத்திய செய்தி. ஒழுக்கக்கேடான உறவுகள் இறுதியில் இப்படி கொலையில்தான் வந்து முடிகின்றன. ஆயிரம் ரூபாயிலிருந்து 50 லட்சம் வரைக்கும் ஆளுக்கு தக்கபடி சர்வ சாதாரணமான கூலிப்படை நபர்கள் கிடைப்பது பெரும் ஆபத்தின் அறிகுறி.

எதைப்பற்றியும் யோசிக்காமல், தனக்கு எந்த வகையிலும் சம்பந்தமில்லாத ஒருவனை காசுக்காக பட்டப்பகலில் கொலை செய்துவிட்டு பதற்றமின்றி செல்லும் இவர்கள் யார், இவர்களை உருவாக்குபவர்கள் யார், கொலை செய்வதை தொழிலாக கொண்டிருக்கும் இந்த கூலிப்படையினர் நிம்மதியாக வாழ்கிறார்களா? கொலை செய்வது அவர்களுக்கு பாவமாக தெரியவில்லையா? போன்றவைகளை விசாரித்தால், பணமும், சாதியும், அதற்கு பின்னால் உள்ள அரசியலும்தான் கூலிப்படையினரை உருவாக்கி வருகிறது  தெரிகிறது.

கடந்த வருடம் மதுரை ஜெய்ஹிந்த்புரத்தில் ஒரு கொலை வழக்கில் உள்ளே சென்று ஜாமீனில் வெளி வந்த அண்ணன், தம்பி இருவரும் அவர் நண்பர் ஒருவரும் வீட்டில் இருக்கும்போது இன்னொரு கும்பலால் மிக கொடூரமாக பொலி போடப்பட்டார்கள். எத்தனை வெட்டு என்று கணக்கெடுக்க முடியவில்லை,  அவ்வளவு கொடூரம். கொல்லப்பட்டவர்களின் வயது இருபதுக்குள். இப்படி ரத்தவெறி பிடித்த இவர்கள் உருவாவது எப்படி...

1950 களிலிருந்தே மதுரையில் கேங்க் ஸ்டார்கள் தொடர்ச்சியாக வந்திருக்கிறார்கள். ஏரியாவுக்கு ஒரு தாதா, ரவுடிகள் உடல் உழைக்காமல் கட்டப் பஞ்சாயத்து, மிரட்டி பணம் பறிப்பது, காசுக்காக கொலை செய்வது என்று உடல் உழைக்காமல் வாழ பழகிக்கொண்டார்கள். ஆனால் அன்று விரல்விட்டு எண்ணும் அளவில் அடையாளம் காட்டமுடிந்தவர்களாக இருந்தார்கள். ஆனால் இன்று அது ஒரு சமூகமாக பெருகியிருக்கிறது தமிழகத்தில்.

கடந்த வருடத்தில் மட்டும் சென்னை, கோவை, பொள்ளாச்சி, விருதுநகர் பகுதிகளில் நடந்த கொலைகளில் மதுரையைச் சேர்ந்த 20க்கும் மேற்பட்ட கூலிப்படையினரை போலீசார் கைது செய்தனர். அதே வருடத்தில் விருதுநகர் மாவட்டத்தில் 18 கொலைகள், சிவகங்கை மாவட்டத்தில் 12 கொலைகள், ராமநாதபுரம் மாவட்டத்தில் 15 கொலைகள், தேனி மாவட்டத்தில் 28 கொலைகள், திண்டுக்கல் மாவட்டத்தில் 56 கொலைகளுடன், 78க்கும் அதிகமான கொள்ளைச் சம்பவங்கள் நடந்திருக்கின்றன. மாநிலத்தில் எங்கு கொலை நடந்தாலும் அதில் மதுரை, நெல்லை கும்பலுக்கு தொடர்பிருக்கிறது. இக்கும்பல் மதுரையில் வில்லாபுரம், கீரைத்துறை, அண்ணாநகர், திடீர் நகர், கரிமேடு, செல்லூர் பகுதிகளைச் சேர்ந்தவர்களாக உள்ளனர். 

துவக்கத்தில் சிறு குற்றங்களுக்கு சிறைக்குச் சென்றவர்களே கூலிப்படையாகின்றனர். சிறையில் இவர்களை நண்பராக்கி, வெளியில் வந்தும் நட்புக்காக குற்றங்கள் செய்ய தூண்டிவிடுவதும், அதற்காக தொகையைப் பெற்றுக்கொள்ளும்போது கூலிப்படையாக உருவெடுக்கும் நிலை ஏற்படுகிறது. இன்னும் சிலரோ குடும்பப் பொறுப்பின்றி ஊரைச் சுற்றும்போது, கைச்செலவுக்கும், சாப்பாடு, மது, மாது, போதை போன்றவற்றுக்கும் கூலிப்படையாக மாறி விடுகின்றனர்.

மதுரை சுப்ரமணியபுரத்தில் கண்ணீர் அஞ்சலி போஸ்டர்  விவகாரத்தில் சின்ன வாய்த்தகராறில்  சர்வசாதாரணமாக ஒரு இளைஞர் கொலை செய்யப்பட்டார். திருமண வீட்டில், மதுக்கடையில், இப்படி சின்ன சின்ன விஷயங்களுக்கெல்லாம் கொலை நடப்பது சகஜமாகிவிட்டது.  சில மாதங்களுக்கு முன்பு முனிச்சாலையில் அப்பகுதி அதிமுக கவுன்சிலர் விஜயராகவன், வழக்கமாக அமர்ந்திருக்கும்  டீக்கடையில் வைத்து படுகொலை செய்யப்பட்டார்.

மதுரை நெல்பேட்டை பகுதியில் சமுதாயத்துக்காக பாடுபடுவதாக சொல்லி மத அமைப்பை சேர்ந்தவர்கள் சிலர்,  சில வழக்குகளில் உள்ளே சென்ற பின், அவர்களை கூலிப்படையாக சில முக்கிய புள்ளிகளும், போலீசில் ஒரு விங்கும்  பயன்படுத்திக்கொண்டதாக புகாரொன்று சமீபத்தில் கிளம்பியது..

கூலிப்படையினரில் பெரும்பாலானவர்கள் 18 வயது முதல் 30 வயது இளைஞர்கள்தான். பொதுவாக கொலை சம்பவத்தில் ஈடுபடும் கூலிப்படை கும்பல் மீது இந்திய தண்டனை சட்டம் பிரிவு 302 ன்கீழ்  கொலை வழக்கே பதிவு செய்யப்படுகிறது. ஆனால், கூலிப்படையை ஏவி விட்டவருக்கு, கொலை வழக்குடன் கூடுதலாக 120 பி பிரிவின் கீழ் சதித்திட்டம் தீட்டியதற்கான வழக்கும் பதிவு செய்யப்படுகிறது. எனினும் ஏவி விட்டவரை, இக்கும்பல் காட்டிக் கொடுப்பதில்லை.

கூலிப்படையினரின் பட்டியலை போலீஸ் வைத்திருந்தாலும், புதிதாக உருவாகும் குற்றவாளிகளையும் போலீசார் கண்காணித்து வருகின்றனர். இதற்கிடையே, மதுரை நகரில் கூலிப்படை கும்பல்கள் கட்டுப்படுத்த முடியாமல் அதிகரித்து வருவது பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்களை பீதியில் ஆழ்த்தியுள்ளது.

சென்னை, காஞ்சிபுரம், தருமபுரி,சேலம், வேலூர், தஞ்சை, திருவாரூர், நாகை, கடலூர், விழுப்புரம் மாவட்டங்களில் சமீப காலமாக நிகழ்ந்து வரும் பல பயங்கராமான படுகொலைகளில் மதுரை கூலிப்படை கும்பலுக்கு சம்பந்தமிருப்பதாக சொல்கிறார்கள்.

கூலிக்கு கொலை செய்தாலும் தூத்துக்குடி, நெல்லை, மாவட்ட கூலிப்படைகள், சாதி அனுதாபத்துடன் செயல்படுகிறதாம். ஒவ்வொரு சாதிக்கொரு கூலிப்படை என்று அங்கு செயல்படுகிறார்கள். ஆனால், மதுரையில் அப்படி இல்லை. காசுக்காக யாரையும் போட்டுத்தள்ளுவார்கள். பச்சை குழந்தை, முதியவர் என்று கூட ஈவிரக்கம் பார்ப்பதில்லை. காரணம், மதுரை கூலிப்படையினரில் பெரும்பாலோர் போதை அடிமைகள்.

மதுரையில் அரசியல் கட்சிப் புள்ளிகள் பலருக்கு பின்னாலும் ஒரு கூலிப்படை இயங்கி வருவதாக சொல்லப்படுகிறது. அதை வைத்துதான் பலரிடம் மிரட்டி பணம் கறந்தும், அசைண்மென்டுகளை முடித்துத்தந்தும் வளமாக வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். எக்காரணம் கொண்டும் தங்களை இயக்குபவர்கள் யாரென்பதை, போலீஸிடம் சிக்குகிற கூலிப்படை கும்பல் காட்டிக்கொடுப்பதில்லை. அந்த விசுவாசம் நீடிக்க கூலிப்படை ஆள் உள்ளே இருந்தாலும் அவர்களின் குடும்பத்தை அக்கறையாக பார்த்துக்கொள்வார்கள் இந்த அரசியல் புள்ளிகள்.

இப்போது தமிழக கூலிப்படைகளுக்கு சவாலாக களம் இறங்கியுள்ளனர் வெளிமாநில கூலிப்படையினர். சென்னை சவுகார்பேட்டையில் சேட்டு ஒருவர் கொல்லப்பட்ட சம்பவத்தில் பீகார் போய்தான் குற்றவாளிகளை பிடிக்க முடிந்தது. இதுபோன்ற இன்னும் பல சம்பவத்தில் வெளிமாநில கூலிப்படை தேடுதல் வேட்டையில் இருக்கின்றனர், அல்லது சிக்கி சிறையில் இருக்கின்றனர்.

கூலிப்படை என்ற ஒரு சட்ட விரோத சமூகம் தமிழகத்தில் காலுான்றி விறுவிறுவென தன் எல்லையை விரிவுபடுத்திவரும் நிலையில் தமிழகத்தின் எதிர்காலம் கருதி இதை தடுக்க வேண்டிய பொறுப்பும் கடமையும் காவல்துறையின் முன் கடினமான பணியாக உள்ளது.

மிக மோசமான குற்றவாளிகள், மக்களுக்கு அச்சுறுத்தலை தரும் ரவுடிகள் மீது நடவடிக்கை எடுப்பதில் தயக்கம் காட்டாத ஜெயலலிதா, மீண்டும் ஆட்சிக்கு வந்துள்ள நிலையில் கூலிப்படையினருக்கு அச்சம் தரும் நடவடிக்கைகளை எடுத்து மீண்டும் தன்னை நிரூபிக்கவேண்டும் என்கிறார்கள் சமூக ஆர்வலர்கள்.

பிரச்னைகளை தீர்ப்பதற்கு பதிலாக பிரச்னைக்குரியவர்களையே தீர்க்க நினைப்பவர்களின் எண்ணங்களை நிறைவேற்றும் கூலிப்படைகளை ஒடுக்கவேண்டியது அரசின் அவசியமான கடமை

- செ.சல்மான்
 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close