Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

குற்றாலம் போகலாம் வாரீங்களா? #WhereIsMyGreenWorld

குற்றாலத்தில் குவிந்துகிடக்கிறார்கள் மக்கள். தவழும் தென்றலுடன் மழையின் சாரல் காலையில் குளிக்கச் சொல்கிறது, மாலையில் பயமுறுத்தி தள்ளி நிற்கவைத்து தனது ரசிகர்களுடன் கண்ணாமூச்சி விளையாடுகிறது. குற்றாலம் என்றாலே குதூகலம் பிறக்க என்ன காரணம்....

மேற்குத் தொடர்ச்சி மலையின் அடர்ந்த பசுமையான காடுகளும், கண்ணுக்கு விருந்தளிக்கும் கானக பறவையினங்களும், அச்சத்தை உருவாக்கும் காட்டு விலங்குகளும் மட்டும் அல்லாமல் பல்லாயிரக்கணக்கான அரிய வகை மூலிகைகளும் நிரம்பிய இடம் குற்றாலம். அகத்திய முனிவர் வாழ்ந்த இந்த மேற்குத் தொடர்ச்சி மலையானது ஏழைகளின் சொர்க்கபுரி. அதனால் தான், மூலிகைக் காடுகளின் வழியாக ஓடிவந்து அருவியாக கொட்டும் நீரில் குளிக்க ஆர்வம் காட்டுகிறார்கள் மக்கள்.

மூலிகைக் குளியலான அருவிகளைக் கொண்ட குற்றாலத்தை தென்னகத்தின் 'ஸ்பா' என வர்ணிக்கிறார்கள். இது உற்சாகத்தையும் புத்துணர்வையும் அளிப்பதால் ஆண்டுதோறும்  பல லட்சம் மக்கள் இங்கு வந்து செல்கிறார்கள். மேற்குத் தொடர்ச்சி மலையின் தகுந்த சீதோஷ்ணநிலை காரணமாக அரிய வகை மூலிகைகள் இந்தப்பகுதியில் மட்டுமே வளர்கின்றன.

இங்கு 4000க்கும் அதிகமான மலர்கள் உள்ளன. இந்த மலைப்பகுதியில், உலகின் வேறு எங்குமே காணக்கிடைக்காத அரிய வகை பட்டாம் பூச்சிகள் இருப்பதுவும் சமீபத்தில் நடந்த கணக்கெடுப்பில் தெரிய வந்துள்ளது. ஆன்மீக முக்கியத்துவம் வாய்ந்த இடமாகவும் குற்றாலம் விளங்குகிறது. சிவ ஸ்தலமாகவும் விளங்கும் இந்த பகுதியில் வசித்த அகத்தியருக்கு சிவபெருமான் மணக்கோலத்தில் காட்சியளித்ததாகவும் வரலாறு உள்ளது. உற்சாக குளியலுக்கு உகந்த குற்றாலம் அருவிகள் பற்றி பார்ப்போமா..?

களை கட்டும் சீசன்!


தென் மேற்குப் பருவக் காற்று வீசத் தொடங்கியதும் குற்றாலத்தில் சீசன் களைகட்டத் தொடங்கிவிடும். தென்மேற்குப் பருவமழை காரணமாக கேரளாவில் மழை பெய்யத் தொடங்கியதும் மலைகளில் உள்ள நீரானது மூலிகைக் காடுகளின் வழியாக பாய்ந்தோடி வந்து அருவிகளில் ஆர்ப்பரித்துக் கொட்டும். அந்த சமயத்தில் சாரல் மழையும் இதமான காற்றும் வீசுவதால் அந்த சீசனை அனுபவித்து மகிழ்வதற்காக மக்கள் கூட்டம் பல்வேறு இடங்களிலும் இருந்து வந்து சேர்கிறார்கள்.

ஜூன் மாதத்தில் தொடக்கும் குற்றால சீசன் ஆகஸ்ட் மாதம் வரையிலும் களைகட்டி நிற்கும். இந்த மூன்று மாதங்களிலும் அருவிகள் அனைத்திலும் தண்ணீர் கொட்டுவதுடன் இதமான சூழலும் சாரல் மழையும் பெய்யும். இந்த சீசனை அனுபவிப்பதற்காகவே நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் இருந்து சுற்றுலாப் பயணிகள் வந்து குவிகிறார்கள். இந்த மூன்று மாதத்தில் மட்டும் லட்சக்கணக்கான பயணிகள் வந்து செல்வதால் தற்காலிகக் கடைகள் அமைக்கப்பட்டு சீசன் காலத்தில் இரவு பகல் பாராமல் கடைகளில் வியாபாரம் கொடிகட்டிப் பறக்கிறது.

ஆனந்தக் குளியலுக்கு உகந்த அருவிகள்!

குற்றாலத்தை சுற்றிலும் ஒன்பது அருவிகள் இருக்கின்றன. இவை அனைத்துமே சுற்றுலாப் பயணிகளை கவரக்கூடியவை. இது தவிர, குற்றாலத்துக்கு அருகில் உள்ள கேரள எல்லையில் கும்பாவுருட்டி அருவி, பாலருவி என இரு அருவிகள் அமைந்துள்ளன. இவையும் சீசன் சமயத்தில் முக்கியத்துவம் பெறுவதால் இருமாநில மக்களும் இந்த அருவிகளுக்கு செல்கிறார்கள்.

குற்றாலத்தை சுற்றிலும் இருக்கும் 'மெயின்ஃபால்ஸ்' எனப்படும் பிரதான அருவி,  பழைய குற்றாலம், சிற்றருவி, புலியருவி, ஐந்தருவி, புது அருவி, பழத்தோட்ட அருவி ஆகிய ஏழு அருவிகளும் மலையின் அடிப்பகுதியில் அமைந்துள்ளன. செண்பகாதேவி அருவி, தேனருவி ஆகிய அருவிகள் மலையின் மீது அமைந்து இருக்கின்றன. அத்துடன், தனியார் இடங்களின் வழியாக வழிந்தோடி வரும் நீரானது சில இடங்களில் அருவிகளாய் கொட்டுகின்றன. தனியாருக்கு சொந்தமான இடங்களில் உள்ள அந்த அருவிகளைக் காண உரியவர்களிடம் அனுமதி பெற்றுச் செல்லும் பயணிகளும் இருக்கவே செய்கிறார்கள்.

பிரதான அருவி!

குற்றாலத்தின் பேரழகு என்றால், அது 'மெயின் ஃபால்ஸ்' எனப்படும் பிரதான அருவிதான். அந்த அளவுக்கு இந்த அருவி அழகு நிறைந்தது. மலைகளில் ஓடிவரும் அருவியானது தரைப்பகுதியில் தலைக்காட்டும் இடத்தில் அமைந்திருக்கும். இந்த அருவியானது, சுமார் 90 அடி உயரத்தில் இருந்து விழுகிறது, இடையில் பொங்குமா கடல் என்கிற மலையின் பள்ளத்தில் விழுந்து, ஆக்ரோஷமாக பொங்கி எழுந்து தரையில் விழுகிறது,

இந்தக் காட்சியை காண்பதே பேரானந்தம். நாம் தென்காசி நகரை கடந்து குற்றாலம் நோக்கி செல்லும்போதே, தூரத்தில் இந்த அருவி தெரியத் தொடங்கும். அந்த அழகை ரசித்தபடி பிரதான அருவிக்கு சென்று குளித்து மகிழ்வது சிறப்பு. இந்த அருவியின் கரையில் குற்றாலநாதர் ஆலயமும் அமைந்து இருக்கிறது. அருவியின் அருகில் உள்ள சித்திர சபையும் சென்று பார்க்க வேண்டிய இடங்களில் ஒன்று.

சிற்றருவி

பிரதான அருவிக்கு மேலே உள்ள மலையில் சுமார் ஒரு கி.மீ தூரத்துக்கு நடந்து சென்றால் இந்த அருவி இருக்கிறது. குளிப்பதற்கு வனத்துறை சார்பில் வசதி செய்யப்பட்டு உள்ள போதிலும் மிகக் குறைந்த உயரத்தில் இருந்து அருவி விழுவதால் பெரிய சுவாரஸ்யம் எதுவும் இருக்காது. வயதானவர்கள், குழந்தைகள் குளிப்பதற்கு உகந்த இடம்.

செண்பகாதேவி அருவி


பிரதான அருவி அமைந்துள்ள இடத்தில் இருந்து மலையின் மீதான வனப்பகுதிக்குள் 2 கி.மீ தூரத்துக்கு நடந்து சென்றால இந்த அருவியை அடையலாம். இந்த வழிகள் ஒற்றையடிப்பாதையாக இருக்கும். மழைக்காலத்தில் வழுக்கும். அத்துடன், வனத்துறையின் கட்டுப்பாட்டில் இந்த அருவி இருக்கிறது. இந்த அருவி அமைந்துள்ள இடத்துக்கு அருகில் புலி,  யானை உள்ளிட்ட காட்டு விலங்குகள் சர்வசாதாரணமாக வந்து செல்லக்கூடியது என்பதால் வனத்துறை அனுமதி இல்லாமல் செல்ல இயலாது.

குளிப்பதற்கு இங்கு அனுமதி கிடையாது. காரணம் இங்கு உள்ள தண்ணீரே பிரதான அருவியாக கொட்டுகிறது. அதனால் இந்த அருவியில் அசுத்தம் செய்தால் அது கீழே குளிப்பவர்களுக்கு பாதகமாக அமைந்துவிடும் என்பதால் அனுமதி மறுக்கப்படுகிறது. இந்த அருவிக்கு அருகில் செண்பகாதேவி கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு செல்வதற்கு பக்தர்களுக்கு அனுமதி கொடுக்கப்படுகிறது. 

தேனருவி


பிரதான அருவில் இருந்து 4 கி.மீ உயரத்தில் உள்ள மலைப்பகுதிக்கு நடந்து சென்று இந்த அருவியை எட்ட முடியும். இதற்கென சரியான பாதை எதுவும் இல்லாததால் அடர்ந்த காட்டுப் பகுதியில் அருவி நீர் கீழிறங்கி வரும் வழியின் ஓரமாகவே நடக்க வேண்டும். பாறைகள், புதர்களை கடந்து சிரமங்களுக்கு பின்னரே இந்த அருவியை எட்ட முடியும்.

இந்த அருவி அமைந்திருக்கும் மலையின் உச்சிக்கு செல்வதற்கு முன்பாக தேனீக்களின் கூடுகள் பலவற்றை கடந்து செல்ல வேண்டும். சில நேரங்களில் அவை தங்களுக்கு அச்சுறுத்தல் உள்ளதாக உணர்ந்தால் கூட்டமாக கிளம்பி வந்து கொட்டும். அந்த ஆபத்துக்களை கடந்தால் மட்டுமே தேனருவிக்கு செல்ல முடியும். இந்த அருவி அடர்ந்த காட்டின் நடுவே மலை உச்சியில் இருப்பதால் இங்கு செல்ல வனத்துறை தடை விதித்துவிட்டது.

ஐந்தருவி

பிரதான அருவி அமைந்துள்ள இடத்தில் இருந்து 5 கி.மீ தொலைவில் இருக்கிறது, இந்த அருவி.
திரிகூடமலையின் உச்சியில் இருந்து வரும் நீரானது மலையில் ஐந்து கிளைகளாக விழுவதால் ஐந்தருவி எனப் பெயர் பெற்றது. இந்த ஐந்து கிளைகளில் மூன்றில் ஆண்களும் இரண்டில் பெண்களும் குளிக்க தனித்தனி வசதிகள் செய்யப்பட்டு உள்ளன. அத்துடன், பெண்கள் உடை மாற்றும் அறை உள்ளிட்ட வசதிகளும் உள்ளன. இந்த அருவியின் அருகிலேயே, சபரிமலை சாஸ்தா கோயிலும் முருகன் கோவிலும் இருக்கின்றன.

இங்கு செல்ல பேருந்து வசதி உண்டு. ஷேர் ஆட்டோக்களும் செல்கின்றன. இந்த அருவிக்கு செல்லும் வழியில் தமிழ்நாடு சுற்றுலா கழகத்தின் படகுக் குழாம் உள்ளது. இங்கு படகு சவாரி செய்து மகிழலாம். அத்துடன் எக்கோ டூரிசம் வசதியும் ஐந்தருவிக்கு அருகிலேயே அமைந்துள்ளது.

பழத்தோட்ட அருவி!

குற்றாலத்தின் ‘வி.ஐ.பி ஃபால்ஸ்’ என்கிற அந்தஸ்தைப் பெற்றிருந்த அருவி பழத்தோட்ட அருவி. வனத்துறையின் கட்டுப்பாட்டில் இருந்த இந்த அருவியில் குளிக்க சாமான்ய மக்களுக்கு  அனுமதி கிடையாது. சிறப்பு அனுமதி பெற்றவர்கள் மட்டுமே குளிக்க முடியும் என்கிற நிலைமை இருந்து வந்தது. இந்த நிலையை மாற்றிய வனத்துறை அருவிக்கு செல்லும் வழியை முற்றிலுமாக மறைத்து சுவர் எழுப்பி விட்டதால் இப்போது அங்கு யாராலும் செல்ல முடியாத நிலைமை உருவாகி விட்டது.

குழந்தைகளுக்கு பாதுகாப்பு 'புலியருவி' 

குற்றாலம் பிரதான அருவியில் இருந்து பழைய குற்றாலத்துக்கு செல்லும் வழியில் புலியருவி இருக்கிறது. இந்த அருவியானது செயற்கையாக உருவாக்கப்பட்டது என்பதால் மிகவும் பாதுகாப்பானது. குழந்தைகள், வயதானவர்கள் இந்த அருவியில் அச்சம் எதுவுமே இல்லாமல் உற்சாகமாக குளித்து மகிழ்கிறார்கள். இந்த அருவியில் இருந்து ஓடிவரும் நீர் செல்லும் இடத்தில் உள்ள தடாகத்தில் குழந்தைகள் உற்சாகமாக குளித்து மகிழ்கிறார்கள்.

பழைய குற்றாலம்!

குற்றாலத்தின் பிரதான அருவியில் இருந்து 16 கி.மீ தொலைவில் இருக்கிறது, பழைய குற்றாலம். அழகனாற்று நதியில் அமைந்துள்ள இந்த அருவியானது சீராக்கப்பட்ட பாறைகளின் உச்சியில் இருந்து கொட்டுவதையும் அதில் குளிப்பதிலும் உற்சாகம் அதிகம். இந்த அருவிப் பகுதியில் இருந்து கொட்டும் தன்ணீரானது அங்கு வீசும் காற்றில் கலந்து துளித்துளியாக பறந்து வந்து முகத்தில் படும் போது கிடைக்கும் ஆனந்தத்துக்கு எல்லையே கிடையாது.

இந்த அருவிக்கு செல்ல பேருந்து வசதி இருக்கிறது., இந்த அருவியானது காட்டுப் பகுதியில் இருந்தாலும் இங்கு 24 மணி நேரமும் காவல்துறை பாதுகாப்பு இருப்பதால் அச்சமின்றி குளித்து மகிழலாம். இங்கு பெண்கள் உடை மாற்ற உரிய வசதிகள் செய்யப்பட்டு இருக்கிறது.

புது அருவி!


புலி அருவிக்கு செல்பவர்கள் அங்குள்ள வனப்பகுதிக்குள் சென்றால் இந்த அருவியை காணமுடியும். இந்த அருவிக்கு வனத்துறை அனுமதி பெற்றால் மட்டுமே செல்ல முடியும். அடர்ந்த காட்டுப் பகுதிக்குள் வனவிலங்குகளின் எல்லைக்குள் இந்த அருவி அமைந்து இருப்பதால் இங்கு செல்ல பயணிகளுக்கு அவ்வளவு சுலபத்தில் வனத்துறை அனமதி கொடுப்பது இல்லை. ஆனால் மலையின் மீது ஏறிச் சென்று இந்த அருவியில் குளிப்பது சுகமான அனுபவமே

பயணிகளின் கனிவான கவனத்திற்கு..!


குற்றாலத்தில் உள்ள அருவிகளில் மூன்று மாதங்களுக்கு தண்ணீர் ஆர்ப்பரித்துக் கொட்டும். கேரள மலைப்பகுதியில் கனமழை பெய்தால் அங்கிருந்து வரும் நீரின் அளவு அதிகரித்து அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரிக்கும். பாதுகாப்பு வளைவுகளைத் தாண்டி தண்ணீர் கொட்டும் காலங்களில் சுற்றுலாப் பயணிகள் குளிப்பதற்கு தடை விதிக்கப்படும். ஆனால், அப்படிப்பட்ட சமயத்தில் குற்றாலத்தை சுற்றிலும் இருக்கும் சீதோஷ்ண நிலையை அனுபவித்தால் மட்டுமே உணர முடியும். 

குற்றாலம் அருவியானது நெல்லையில் இருந்து 55 கி.மீ தொலைவில் இருக்கிறது. தென்காசியில் இருந்து 6 கி.மீ தொலைவில் உள்ளது. மதுரையில் இருந்து குற்றாலத்துக்கு 160 கி.மீ தூரம் உள்ளது. சென்னையில் இருந்து வருபவர்கள் நெல்லைக்கு ரயில் மூலமாக வந்து அங்கிருந்து பேருந்து அல்லது ரயில் மூலமாக செல்ல முடியும்., நெல்லையில் இருந்து தினமும் செங்கோட்டை வரையிலும் பாசஞ்சர் ரயில் இயக்கப்படுகிறது.

அத்துடன், சென்னையில் இருந்து தென்காசி வரையிலும் தினமும் பொதிகை எக்ஸ்பிரஸ் ரயில் இயங்குகிறது. அதில் வந்து தென்காசியில் இறங்கியும் குற்றாலத்துக்கு செல்ல முடியும். மதுரையில் இருந்து நேரடியாக நிறைய பேருந்துகளும் இயக்கப்படுகின்றன.

என்னங்க குற்றாலத்துக்கு கிளம்பிட்டீங்களா...

- ஆண்டனிராஜ்
படங்கள்: எல்.ராஜேந்திரன்

எடிட்டர் சாய்ஸ்

ஜெயலலிதா வாழ்வின் சில ‘கடைசி’கள்!

MUST READ