Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

'வேந்தர் மூவிஸ்' மதன் விவகாரத்தில் ரகசியம் காக்கும் போலீஸ்..! விலகாத மர்மம்

வேந்தர் மூவிஸ் மதன் மாயமான விவகாரத்தில் போலீஸார் அமைதியாக இருப்பது பல்வேறு சந்தேகங்களை கிளப்புகின்றன.

'வேந்தர் மூவிஸ்' மதன், காசிக்கு சென்று கங்கையில் சமாதியடைகிறேன் என்று கடந்த 27ம் தேதி கடிதம் எழுதி வைத்து விட்டு மாயமாகி விட்டார். மேலும், அந்தக் கடிதத்தில் எஸ்.ஆர்.எம் குழுமம் குறித்து சில தகவல்களையும் குறிப்பிட்டு இருந்தார். மதனை கண்டுப்பிடித்து தரும்படி அவரது தாயார் தங்கம், விருகம்பாக்கம் போலீஸில் கொடுத்த புகாரின் அடிப்படையில் போலீஸார் வழக்குப்பதிவு செய்தனர். அடுத்து எஸ்.ஆர்.எம் குழுமம் சார்பில் கொடுத்த 200 கோடி ரூபாய் மோசடி புகாரிலும் எப்.ஐ.ஆர் போடப்பட்டுள்ளது. ஆனால், மதனிடம் பணம் கொடுத்து ஏமாந்தவர்கள், மதன் மீதும், எஸ்.ஆர்.எம் குழுமத்தின் மீது புகார் கொடுத்திருந்தாலும் அதற்கு இதுவரை எந்த நடவடிக்கையும் போலீஸார் எடுக்காததது ஏன் என்று தெரியவில்லை.

இந்நிலையில் மதனின் தாயார் தங்கம் சார்பில் வழக்கறிஞர் இன்ஃபென்ட் தினேஷ், சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனுவை தாக்கல் செய்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், இதுதொடர்பாக போலீஸார் அறிக்கை சமர்பிக்க வேண்டும் என்று தெரிவித்தது. அதன்படி, போலீஸாரும் மதனின் தேடுதல் வேட்டை தொடர்பான அறிக்கையை தாக்கல் செய்தனர். அப்போது மதன், தொடர்பான அனைத்து வழக்குகளையும் விசாரிக்க சென்னை போலீஸ் கமிஷனர், ஒரு விசாரணை அதிகாரியை நியமிக்க வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன்பேரில் சென்னை மத்திய குற்றப்பிரிவு கூடுதல் துணை கமிஷனர் ராதாகிருஷ்ணன், மதன் வழக்கில் விசாரணை அதிகாரியாக நியமிக்கப்பட்டார். அவரது தலைமையில் போலீஸார் மதனை தீவிரமாக தேடி வருகின்றனர்.

இதுகுறித்து வழக்கறிஞர் இன்ஃபென்ட் தினேஷிடம் பேசினோம். "மதன், வழக்கில் விசாரணை அதிகாரியாக கூடுதல் துணை கமிஷனர் ராதாகிருஷ்ணன் நியமிக்கப்பட்டுள்ளார். அவரது தலைமையில் செயல்படும் தனிப்படை போலீஸார், மதனை தேடி வருகின்றனர். மேலும், மதன் தொடர்பான வழக்கில் போலீஸார் நீதிமன்றத்தில் அறிக்கை சமர்பித்துள்ளனர். அதில், காசியில் உள்ள ஓட்டலில் மதன் தங்கி இருந்ததற்கான சி.சி.டி.வி கேமிராவின் பதிவு மற்றும் அவரது உடமைகள் ஓட்டல் அறையில் இருப்பதாகவும் தெரிவித்துள்ளனர். ஓட்டலில் இருந்து வெளியே சென்ற மதன் குறித்து விசாரித்து வருவதாகவும் சொல்லி உள்ளனர். இந்த வழக்கில் மருத்துவ கட்டணம் விவகாரமும் உள்ளதால் சி.பி.ஐ விசாரணை தேவை என்று நீதிமன்றத்தில் வலியுறுத்தினோம். அதற்கு நீதிபதிகள், சி.பி.ஐ விசாரிக்க வேண்டும் என்றால் அதற்கான அனுமதி பெற காலஅவகாசமாகும் என்று தெரிவித்து விட்டனர். மதன், குறித்த முழுமையான தகவல் கிடைக்கவில்லை. அடுத்த வழக்கு விசாரணைக்குள் மதன் குறித்த தகவல் கிடைக்கும் என்று எதிர்பார்க்கிறோம்" என்றார்.

இந்த வழக்கில், நீதிமன்றம் தலையிட்ட பிறகும், போலீஸாரின் செயல்பாடுகள் ஆமை வேகத்திலேயே இருப்பதாக போலீஸ் வட்டாரங்கள் தெரிவித்தன. இதற்கு காரணம் மேலிட செல்வாக்கு என்று ஒற்றை வரியில் போலீஸ் தரப்பில் பதில் சொல்லப்படுகிறது.

இதுகுறித்து போலீஸ் வட்டாரங்கள் கூறுகையில், "மதன் வழக்கு தொடர்பாக தகவல்களை யாருக்கும் வெளியிட வேண்டும் என்று போலீஸ் உயரதிகாரிகள் வாய்மொழியாக உத்தரவிட்டுள்ளனர். அதே நேரத்தில் சம்பந்தப்பட்ட போலீஸார், வழக்கில் அதிக ஆர்வம் செலுத்துவதில்லை. பெயருக்கு விசாரணை நடத்தப்படுகிறது. மதனின் நண்பர்களில் சிலரிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது. மதன் மீது குவியும் புகார்களுக்கு கூட சரியான நடவடிக்கை எடுக்கப்படுவதில்லை. இந்த வழக்கில் மதன், எஸ்.ஆர்.எம். குழுமம், பணம் கொடுத்து ஏமாந்தவர்கள் என மூன்று தரப்பினரில் பணம் கொடுத்து ஏமாந்தவர்களிடம் மட்டுமே துருவி, துருவி விசாரணை நடத்தப்படுகிறது. மதன் தரப்பினரிடமோ, எஸ்.ஆர்.எம். குழுமத்திடமோ பெயரளவில் மட்டுமே விசாரணை நடத்தப்பட்டுள்ளது. வழக்கமாக இதுபோன்ற செய்திகளை பிரஸ் ரீலாஸாக காவல்துறையே வெளியிடும். ஆனால் மதன் வழக்கை ஏனோ சிதம்பர ரகசியமாக போலீஸார் கையாள்வது புரியாத மர்மமாக உள்ளது. இதனிடையே, வடமாநிலங்களில் உள்ள அனைத்து காவல் நிலையங்களிலுக்கும் மதனின் புகைப்படத்தை தமிழக டிஜிபி அலுவலகம் மூலம் அனுப்ப காவல்துறை திட்டமிட்டுள்ளது" என்றனர்.

மதன் உயிருடன் இருக்கிறார்?

கங்கையில் சமாதியடைவதாக சொன்ன மதன், ஒருவேளை இறந்திருந்தால் அவரது உடல் ஏதாவது ஒரு இடத்தில் ஒதுங்கி இருக்கலாம். ஆனால் அவர் மாயமாகி இதுவரை அப்படி எந்த உடலும் போலீஸாருக்கு கிடைக்கவில்லை. அவரைக் காணவில்லை என்று காசி முழுவதும் புகைப்படத்துடன் போஸ்டர் ஓட்டியப்பிறகும் போலீஸாருக்கு எந்தத் தகவலும் கிடைக்கவில்லை. இதையெல்லாம் வைத்துப் பார்க்கும் போது மதன் உயிருடன் இருக்க அதிக வாய்ப்பு உள்ளது. அதே நேரத்தில் ஓட்டலை விட்டுச் வெளியே சென்ற மதன் எங்கு இருக்கிறார் என்ற கேள்விக்கு போலீஸாருக்கு பதில் கிடைக்கவில்லை.


எஸ்.மகேஷ்

எடிட்டர் சாய்ஸ்

MUST READ