Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

கடல்நீரில் அதிகாரிகள் கரைத்த ரூ.900 கோடி? -அம்பலப்படுத்தும் அரசுப் பொறியாளர்கள்

டல்நீரைக் குடிநீராக்கும் திட்டத்தில் நடந்துள்ள முறைகேடுகளை ஆதாரபூர்வமாக அம்பலப்படுத்துகின்றனர் சென்னை குடிநீர்வாரியத்தின் முன்னாள் பொறியாளர்கள் சிலர். அதிலும், ' தொழில்நுட்ப குளறுபடிகளாலும் அதிகாரிகளின் ஊழல்களாலும் கண்ணுக்கு முன்னால் ஒரு நல்ல திட்டம் சீரழிந்து வருகிறது' என்கின்றனர் வேதனையோடு.

காஞ்சிபுரம் மாவட்டம் நெம்மேலியில், 871 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கடல்நீரைக் குடிநீராக்கும் திட்டத்தை, 2013 பிப்ரவரி மாதம் 22-ம் தேதி தொடங்கிவைத்தார் முதல்வர் ஜெயலலிதா. அதற்கு முன்னதாக, 2008-ம் ஆண்டிலேயே இத்திட்டத்தைக் கொண்டு வருவதில் மிகுந்த அக்கறை செலுத்தினார் அன்றைய துணை முதல்வர் ஸ்டாலின். அவரது முயற்சியால்தான் இத்திட்டம் சாத்தியமானது. வளர்ந்து வரும் சென்னை மாநகரின் குடிநீர்த் தேவையினை சமாளிக்கும் வகையில், 100 மில்லியன் லிட்டர் திறனுள்ள கடல்நீரைக் குடிநீராக்கும் வகையில், காஞ்சிபுரம் மாவட்டம், சூளேரிக்காடு, நெம்மேலியில் 871 கோடியே 24 லட்சம் ரூபாய் திட்ட மதிப்பீட்டில் 40 ஏக்கர் நிலப்பரப்பில் சுத்திகரிப்பு பிளான்டுகள் அமைக்கப்பட்டன. இதன்மூலம் நாளொன்றுக்கு 265 மில்லியன் லிட்டர் கடல் நீர் எடுக்கப்பட்டு, 100 மில்லியன் லிட்டர் கடல்நீர் சுத்திகரிக்கப்பட்டு, மீதமுள்ள 165 மில்லியன் லிட்டர் கடல்நீர் மீண்டும் கடலுக்குள் கொண்டு செல்லும் வகையில் திட்டம் வடிவமைக்கப்பட்டது.

சுத்திகரிப்பு செய்து கிடைக்கும் குடிநீர் வேளச்சேரி, பள்ளிப்பட்டு, திருவான்மியூர் மற்றும் தகவல் தொழில்நுட்ப வளாகத்தைச் சார்ந்த பகுதிகளுக்கு குழாய் மற்றும் நீரேற்று நிலையங்கள் வாயிலாக வழங்கப்பட்டு வருகிறது. " இந்தத் திட்டத்தில்தான் பெருமளவு ஊழல் நடந்துள்ளதாக" புகார் வாசிக்கின்றனர் அரசுப் பொறியாளர்கள். இதுதொடர்பாக, நம்மிடம் விரிவாகப் பேசினார் தமிழ்நாடு பொறியாளர்கள் கூட்டமைப்பின் முன்னாள் தலைவர் சி.ஆர்.ராஜன். இவர் இயற்கை இயக்கத்தின் தலைவராகவும் இருக்கிறார்.

" தொடக்கம் முதலே கடல்நீரைக் குடிநீராக்கும் திட்டத்தின் வடிவமைப்பில் அதிகாரிகள் குளறுபடி செய்தார்கள். மெக்கான், வி.ஏ.டெக் வேபக் என்ற இரண்டு கம்பெனிகள் இதற்கான பணிகளைச் செய்து வந்தன. இதில், வி.ஏ டெக் நிறுவனம் சென்னை குடிநீர் வாரியத்தின் கறுப்புப் பட்டியலில் இருந்தது. இதை 2.8.2008-ம் ஆண்டு நடந்த மெட்ரோ வாரியத்தின் 292-வது கூட்டத்தில் தீர்மானம் எண் 167-ன்படி கறுப்பு பட்டியலில் இருந்து நீக்கம் செய்துவிட்டனர். இதன் பின்னணியில் வாரியத்தின் அதிகாரிகள் இருந்துள்ளனர்" என்றவர்,

" கடலில் இருந்து 1,040 மீட்டர் நீளம் வரையில், அதாவது சுத்திகரிப்பு பிளான்ட் வரையில் குழாய் பதித்தனர். இந்தக் குழாய்கள் 16 மீட்டர் ஆழத்தில் இருக்க வேண்டும். இதில், 340 மீட்டர் நீளம் வரையில் பிரச்னை ஏற்பட்டுள்ளது. பல இடங்களில் பாறைகள் முட்டியதால், எட்டு மீட்டர் முதல் 14 மீட்டர் வரையில்தான் குழி தோண்டி குழாய் பதிக்க முடிந்தன. இதற்காக ஒவ்வொரு 100 மீட்டருக்கும்(ஒரு லாட் என்கின்றனர்) 10 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டது. இந்த பத்து கோடி ரூபாய் என்பது 16 மீட்டர் ஆழத்தில் குழாய் பதிக்கத்தான். இவர்கள் எட்டு மீட்டர் தோண்டியதற்கும் பணம் ஒதுக்கீடு செய்துவிட்டனர். இதுதொடர்பாக, சில கேள்விகளை தகவல் அறியும் உரிமைச் சட்டம் மூலம் கேட்டேன். அதற்குப் பதிலளித்த மெட்ரோ வாரியத்தின் பொறியியல் பிரிவு இயக்குநர், ' ஜீரோ மீட்டரில் இருந்து 170 மீட்டர் வரையில் 16 மீட்டர் ஆழத்திற்கு குழி தோண்ட முடியாததால், சம்பந்தப்பட்ட நிறுவனத்திற்குக் கொடுக்க வேண்டிய தொகையில் 100 கோடி ரூபாய் வரையில் பிடித்தம் செய்திருக்கிறோம்' எனப் பதில் அளித்தார்.

அதாவது, ' பணிகளுக்காக ஒதுக்கப்பட்ட 452 கோடி ரூபாயில் 352 கோடியை மட்டுமே ஒதுக்கியுள்ளதாகவும், 20 சதவீத வேலைகள் முடியாததால் மீதி 100 கோடி ரூபாய் நிதியை ஒதுக்கவில்லை' எனப் பதில் அளித்தார். என்னுடைய ஆர்.டி.ஐ கேள்விகளுக்கு இவ்வாறு பதில் அளித்துவிட்டு, சம்பந்தப்பட்ட நிறுவனத்திற்கு 100 கோடி ரூபாயை அதிகாரிகள் கொடுத்துவிட்டனர். இந்த ஊழலில் ஈடுபட்ட வாரியத்தின் அதிகாரிகள், தனியார் நிறுவனத்தின் அதிகாரிகள் பத்து பேர் மீது நடவடிக்கை எடுக்குமாறு, கடந்த மே மாதம் 12-ம் தேதி சென்னை குடிநீர் வாரியத்தின் நிர்வாக இயக்குநர் விக்ரம் கபூர் ஐ.ஏ.எஸ்ஸிடம் புகார் மனு அளித்தேன். அவரும், 'இந்த விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுப்பதாக' உறுதியளித்தார்.

 

இதுதவிர, கடலில் இருந்து நீரை உறிஞ்சும் குழாய்களில் அடிக்கடி மீன்கள் வந்து விழுவதால், மாதத்திற்கு மூன்று நாட்கள் சுத்திகரிப்பு மையங்கள் பழுதாகி நின்றுவிடுகின்றன. மீன்கள் உள்ளே வராத அளவுக்கு பில்டர் ஸ்கிரீன் போடப்பட்டிருக்க வேண்டும். இதில் அதிகாரிகள் போதிய அக்கறையோடு இருக்கவில்லை. தினமும் 65 மில்லியன் லிட்டர் நீர்தான் சுத்திகரிக்கப்படுகிறது. பிளான்டில் உள்ள ஒரு டர்பைனில் ஒரு மணி நேரத்திற்கு 5,530 மீட்டர் கியூப் நீரை எடுக்க வேண்டும். இதில், பாதி அளவுக்குத்தான் தண்ணீர் எடுக்க முடிகிறது. அடிக்கடி தொழில்நுட்ப கோளாறுகள் ஏற்படுகின்றன. திட்டத்தில் எவ்வளவு முடியுமோ அந்தளவுக்கு சுருட்டுவதில்தான் அதிகாரிகள் கவனமாக இருந்துள்ளனர். இவர்கள் மீது அரசு உரிய நடவடிக்கை எடுக்கவில்லையென்றால், சட்ட ரீதியான போராட்டத்தை நடத்தவும் தயாராக இருக்கிறோம்" என்றார் கொந்தளிப்போடு.

சென்னை குடிநீர் வாரிய அதிகாரிகளோ, " நெம்மேலி திட்டம் இன்று வரையில் வெற்றிகரமாக செயல்பட்டு வருகிறது. வாரியத்தின் விதிமுறைகளுக்கு உட்பட்டே அனைத்து பணிகளும் நடந்து வந்தன. புகார் சொல்பவர்கள் எப்போதும் குறைகளை அடுக்கிக் கொண்டேதான் இருப்பார்கள். அவர்களைப் பற்றி எங்களுக்குக் கவலையில்லை. தினமும் 15 லட்சம் மக்கள் இத்திட்டத்தால் பயனடைந்து வருகின்றனர்" என்கின்றனர் உறுதியாக.

'உப்புநீரைச் சுத்திகரிக்கும் நல்ல திட்டத்தில் ஊழல் கரையான்களின் அரிப்பைத் தடுத்தாலே போதும்' என்கின்றனர் வாரியத்தின் பொறியாளர்கள்.

ஆ.விஜயானந்த்

 

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close