Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

'தேர்தலில் நிற்க பணம் வாங்கினேனா?' -மனம் திறந்த விஜயகாந்த்

ட்டமன்றத் தேர்தல் படுதோல்விக்குப் பிறகு, தே.மு.தி.கவை சீரமைக்கும் வேலைகளில் தீவிரமாக இருக்கிறார் விஜயகாந்த். ' கட்சியின் அடிமட்ட நிர்வாகிகள் சந்திப்பு, தொடர் சுற்றுப்பயணம் என புதிய உற்சாகத்தோடு வலம் வர இருக்கிறார் கேப்டன்' என்கின்றனர் தே.மு.தி.க நிர்வாகிகள்.

மக்கள் நலக் கூட்டணியோடு சட்டமன்றத் தேர்தலில் அணி சேர்ந்த தே.மு.தி.க,  2.5 சதவீத வாக்குகளை மட்டுமே வாங்கியது. கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் ஐந்து சதவீத வாக்குகளோடு இருந்த கட்சி, இவ்வளவு குறைவான வாக்குகளை வாங்கும் என விஜயகாந்த் எதிர்பார்க்கவில்லை. மாநிலம் முழுவதும், போட்டியிட்ட 104 தொகுதிகளிலும் கட்சிக்கு ஏற்பட்ட பின்னடைவை சரி செய்யும் முயற்சியில் இறங்கியிருக்கிறது தே.மு.தி.க தலைமை. நேற்று கோயம்பேட்டில் உள்ள கட்சி அலுவலகத்தில் சென்னை மற்றும் திருவள்ளூர் மாவட்டத்தின் வட்ட, பகுதிக் கழக பிரதிநிதிகளைச் சந்தித்துப் பேசினார் விஜயகாந்த். இந்தக் கூட்டத்தில், தலைமை நிலையச் செயலாளர் பார்த்த சாரதி மற்றும் இளங்கோவன் ஆகியோர் மட்டும் இடம் பெற்றிருந்தனர். இளைஞரணி தலைவர் சுதீஷ் மற்றும் பிரேமலதா ஆகியோர் கூட்டத்தில் பங்கேற்கவில்லை.

இதுபற்றி நம்மிடம் பேசிய தே.மு.தி.க மாநில நிர்வாகி ஒருவர், " மாவட்டச் செயலாளர்களைத் தவிர்த்து இந்தக் கூட்டம் நடத்தப்பட்டது. அவர்கள் பங்கேற்றால், ' அடிமட்ட நிர்வாகிகள் கருத்துச் சொல்ல பயப்படுவார்கள்' என்பதால், வட்ட, பகுதி பிரதிநிதிகளுக்கு மட்டுமே அழைப்பு அனுப்பப்பட்டது. சுமார் மூன்றரை மணி நேரம் பொறுமையாக அமர்ந்து கருத்துக்களைக் கேட்டார் கேப்டன். பலரும், 'மக்கள் நலக் கூட்டணியோடு நாம் சேர்ந்ததை மக்கள் ஏற்றுக் கொள்ளவில்லை. கட்சித் தொடங்கிய காலங்களில் எட்டு சதவீத வாக்குகளோடு வலிமையாக இருந்தோம். இப்போது 2.5 சதவீத அளவுக்கு வாக்குகள் குறைந்து போகக் காரணமே, தேர்தலில் நிற்பதற்காக பணம் வாங்கிவிட்டோம் என்ற பிரசாரம் மக்கள் மத்தியில் தீவிரமாகப் போய்ச் சேர்ந்துவிட்டதுதான் காரணம். தி.மு.க, அ.தி.மு.கவுக்கு மாற்றாக நாம் நிற்கிறோம் என்பது மக்கள் மத்தியில் சரியாகச் சென்று சேரவில்லை. ' அ.தி.மு.கவின் வெற்றிக்காகத்தான் நிற்கிறோம்' என மக்கள் நம்பிவிட்டார்கள்.  கட்சியின் மாவட்ட நிர்வாகிகளும், தேர்தலின் கடைசி நாட்களில் கைக்காசை செலவு செய்யாமல் ஒதுங்கிவிட்டார்கள். இதனால், பல பூத்துகளில் ஆட்களே இல்லாத நிலைமை ஏற்பட்டுவிட்டது' என விவரித்தனர்.

அவர்களுக்கு பதில் அளித்துப் பேசிய விஜயகாந்த், 'நாம் தோற்றுப் போனதற்கு இது மட்டும்தான் காரணமா? நமது ஓட்டுக்கள் எல்லாம் எங்கே போனது? தேர்தலில் நிற்பதற்காக பணம் வாங்கிவிட்டோம் என்று வரும் தகவல்கள் பொய்யானது. நான் யாரிடமும் பணம் வாங்கவில்லை. மக்கள் நலக் கூட்டணியோடு இணைந்ததற்குக் காரணம், மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்பதற்காகத்தான். இதனால் நமக்கு பெரிய அளவில் இழப்பு ஏற்படவில்லை. மீண்டும் நாம் வருவோம். இப்படியொரு கூட்டணி வைத்தது தவறான முடிவு எனச் சொல்கிறீர்கள். அந்த நேரத்தில், மக்களின் நலன் கருதி எடுக்கப்பட்ட முடிவுதான் அது. உள்ளாட்சித் தேர்தலில் தனித்துப் போட்டியிட்டு நமது பலத்தைக் காட்டுவோம். நாம் இழந்த செல்வாக்கை வரும் தேர்தல்களில் மீட்டெடுப்போம்'  என உறுதியான குரலில் பேசினார்.

இதையடுத்து, வரும் நாட்களில் அனைத்து மாவட்டங்களிலும் உள்ள அடிமட்ட நிர்வாகிகளை சந்தித்துப் பேச இருக்கிறார் கேப்டன். மாநிலம் முழுவதும் தீவிர சுற்றுப் பயணம் செல்லவும் முடிவு செய்திருக்கிறார்" என்றார் விரிவாக.

பீனிக்ஸ் பறவையாக தே.மு.தி.க உயிர்த்தெழுமா? என எதிர்பார்ப்போடு காத்துக் கிடக்கிறார்கள் தே.மு.தி.க தொண்டர்கள்.

ஆ.விஜயானந்த்
 

எடிட்டர் சாய்ஸ்

ஜெர்சி மாடுகள், பிரேசில் காபி, மருத்துவமனை உறுதி! ஜெயலலிதா பற்றி தோழியின் நினைவலைகள்
placeholder

அதே மாதிரி ஜெயலலிதா தன்னுடைய 10 வயதில் சிவாஜி கணேசன் முன்னிலையில் மயிலாப்பூரில் செய்த நடன அரங்கேற்றப் படங்கள் முதல் அதற்குப் பிறகான அவரது சின்ன வயசுப் படங்களை நாங்கள் தொகுத்திருந்தோம். அதை 2012 ம் ஆண்டு, எனக்கு அவரை சந்திக்கும் வாய்ப்புக் கிடைத்த போது கொடுத்தேன். அதைப் பார்த்து ரொம்ப சந்தோஷமாகிட்டாங்க. அந்தப் படத் தொகுப்பை, தன்னோட ஹேண்ட் பேக்ல வச்சுக்கிட்டாங்க. பத்திரமா வைத்துக் கொள்வதாகவும் சொன்னாங்க. சினிமாக்காரங்க என்றால் ஈஸியாக அணுகலாம் என்கிற திரையை உடைத்து, அவங்க தனி ரூட்டைப் போட்டு, அதை மத்தவங்க ஃபாலோ பண்ற அளவுக்கு வாழ்ந்து காட்டினாங்க. குறிப்பா, சினிமா விழாக்கள், நிகழ்ச்சிகளுக்கு போக மாட்டாங்க. 

அம்மாவிடமிருந்து போன் வந்தால்...!? - உருகும் வீணை காயத்ரி
placeholder

''சமீபத்தில் கொலை மிரட்டல் விட்டப் பையனால் அம்மாவை சந்திக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. கடந்த ஜூலை 27-ம் தேதி சி.எம் ஆபீஸ்ல இருந்து போன் வந்தது. அம்மா உங்களை உடனே வரச்சொன்னதா சொன்னாங்க. நான் கொஞ்சமும் யோசிக்காமல் போய் நின்னேன். பொதுவாகவே நானும், அவங்களும்தான் தனியாகத்தான் பேசிப்போம். ஆனா, அன்றைக்கு, எல்லா அதிகாரிகளும், இருந்தாங்க. அவங்க முன்னாடி, 'எப்படி இருக்கீங்க' என கேட்டார். நான் பதில் சொல்லிவிட்டு, 'நவம்பர் மாதத்தோடு என்னோட டர்ன் முடியுது' என சொன்னேன். இதற்கு அவர், எல்லோருடைய முன்னிலையிலும், அடுத்த மூன்று வருஷத்துக்கும் நீங்களே துணை வேந்தரா இருங்க என சொல்லிவிட்டு, அவருக்கு பின்னால் இருக்கும் எல்லோரையும் பார்த்து மறுபடியும்  இதையே சொன்னார். அப்போதுதான் அவர்கிட்ட, 'நான் உங்களை சந்திக்க இரண்டு வருஷமாக முயற்சி செய்துட்டு இருந்தேன். இந்த கொலை மிரட்டல் காரணமாகத்தான் உங்களை சந்திக்கிற வாய்ப்பு கிடைச்சிருக்கு, நான் தனி மனுஷியாக இசை பல்கலைக்கழகத்தை நடத்தி வருகிறேன்' என சொன்னேன். உடனே, சம்பந்தப்பட்டவர்களை அழைத்து, அவங்களுக்குத் தேவையான எல்லா உதவிகளையும் செய்து கொடுங்க என சொன்னார்.  'அடுத்த முறைப் பார்க்கும்போது உங்க முகத்துல சிரிப்பை மட்டும் தான் பார்க்கணும்' என ஆறுதல் சொன்னாங்க. அந்த வார்த்தை இன்னும் என் காதில் கேட்டுட்டே இருக்கு. அதுதான் நான் அவங்களை கடைசியாகப் பார்த்தது.  அதற்குப் பிறகு அவரை பார்க்க முடியவில்லை. அவர் சொன்னது போல அதற்கான வேலைகள் நடந்து கொண்டிருக்கும்போதே அம்மா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுட்டாங்க. நான் இப்போ அடுத்த ஆர்டருக்காக காத்திட்டு இருக்கேன். இன்னும் ஆர்டர் என் கைக்கு வரவில்லை''

MUST READ