Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

எஸ்.ஆர்.எம். பெயரை பயன்படுத்தி பண மோசடி! -மதன் மீது பாரிவேந்தர் போலீசில் பரபரப்பு புகார்

சென்னை: எஸ்.ஆர்.எம். குழும பெயரை பயன்படுத்தி பண மோசடி செய்ததாக, தலைமறைவாக உள்ள மதன் மீது சென்னை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் பாரிவேந்தர் என்கிற பச்சமுத்து சார்பில் புகார் அளிக்கப்பட்டு உள்ளது.

இது தொடர்பாக பாரிவேந்தர் சார்பில், எஸ்.ஆர்.எம். குழும வழக்கறிஞர் வி.பாலு என்பவர் அளித்துள்ள புகார் மனுவில், ''எங்களது பல்கலைக்கழகத்தில் மருத்துவம், பல் மருத்துவம், பொறியியல் சார்ந்த, அரசு வகுத்துள்ள சட்டத் திட்டங்கள் மற்றும் ஆல் இந்திய மெடிக்கல் கவுன்சில் விதிமுறைகளுக்குட்பட்டே மாணவர் சேர்க்கை நடைபெறும். எங்கள் கட்டணங்களும் வங்கி மூலம் மட்டுமே வசூலிக்கப்படுகின்றன.

கடந்த 40 வருடங்களாக எங்களது பல்கலைக்கழகம் எந்த புகாருக்கும் ஆட்படாமல் நற்பெயரை ஈட்டி, நாட்டின் தலைச்சிறந்த பல்கலைகழகம் என்ற பெயர் எடுத்துள்ளது. எங்கள் கல்லூரிகளில் பணமாக எந்தத் தொகையும் வசூலிக்கப்படுவதில்லை. நான் ஐ.ஜே.கே. கட்சியின் நிறுவனரும் ஆவேன். எனது கட்சியில் 5வது துணைப் பொதுசெயலாளர்களில் ஒருவராக மதன் என்பவர் இருந்து வந்தார்.

அவர் கட்சி விரோத நடவடிக்கைகயில் ஈடுபட்டதால் கட்சியிலிருந்து கடந்த 25.2.2016ல் விலக்கப்பட்டு விட்டார். அதுபோக மதன், வேந்தர் மூவிஸ் என்ற திரைப்பட நிறுவனத்தை சொந்தமாக வடபழனியில் நடத்தி வந்தார். என் கட்சியில் துணை பொதுச் செயலாளராக இருந்ததால், தவறாக என் பெயரையும், புகைப்படத்தையும் தனது திரைப்பட நிறுவனத்திற்கு மதன் உபயோகித்து வருகிறார்.

வேந்தர் மூவிஸ் நிறுவனத்திற்கும் எனக்கும் எந்தவித தொடர்பும் இல்லை. அதனை மதன் பேட்டி மூலம் ஒத்துக் கொண்டுள்ளார். பலமுறை நாங்கள் அவரிடம் எச்சரித்தோம். ஆனாலும் தொடர்ந்து அந்தத் தவறை அவர் செய்து, எனது பெயரை திரைப்பட நிறுவனத்திற்கு பயன்படுத்தி வருகிறார்.

இந்நிலையில் 29.5.2016ல் புகார் அளித்த பிறகும், எங்களுக்கு தொலைபேசி வாயிலாக கிடைக்க பெற்ற தகவலின்படி வேந்தர் மூவிஸ் நிர்வாக இயக்குனர் மதன், சுமார் 102 பேரிடம் இருந்து பல கோடியை மருத்துவ படிப்புக்காக பெற்றுள்ளதாகவும், அந்த தொகைக்கு எங்கள் நிறுவனமே பொறுப்பு என்றும் பொய்யான தகவல்களை வாட்ஸ்அப் மூலமாக மதன் செல்போன் நம்பரிலிருந்து ஐ.ஜே.கே. கட்சியின் பொதுச் செயலாளரான ஜெயசீலனுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

எங்கள் நிறுவனத்தில், எந்தச் சூழ்நிலையிலும் மதன் எங்கள் கல்வி நிறுவனங்களில் எந்த பொறுப்பிலும் நியமிக்கப்படவில்லை. ஐ.ஜே.கேவின் துணை பொதுச் செயலாளர் பதவியிலிருந்தும் நீக்கப்பட்டு விட்டார்.  இவ்வாறு இருக்கையில், எஸ்.ஆர்.எம் கல்வி நிறுவனத்தில் எந்த அனுமதியும் பெறாமல், எங்கள் கல்வி நிறுவனங்களின் பெயரை பயன்படுத்தி, முறைகேடான முறையில் அப்பாவி மாணவர்கள் மற்றும் அவர்களின் பெற்றோர்களையும் ஏமாற்றி சுமார் பல கோடி ரூபாய் பெற்றுள்ளார்.

மேலும், எங்கள் கல்வி நிறுவனங்களில் மாணவர் சேர்க்கை விஷயமாக நான் யாரையும் பார்க்க அனுமதிப்பது இல்லை. மேற்கண்ட பட்டியலில் உள்ள எந்தவொரு மாணவரையோ அவர்களின் பெற்றோரையோ நான் எந்த ஒரு சூழ்நிலையிலும் சந்தித்தது இல்லை. எஸ்.ஆர்.எம்.கல்லூரி பெயரில் போலி ஆவணங்கள் தயாரித்து, என்னைப்போல் கையெழுத்திட்டு மதன் மோசடி செய்துள்ளார். இந்த மோசடியில் இருந்து தப்பிக்கவே மதன் தற்போது தற்கொலை நாடம் ஆடுகிறார்.

அவர் செய்துள்ள மோசடியில் மேலும் பலருக்கு தொடர்பு இருப்பதால், முழுமையாக விசாரணை நடத்த வேண்டும். வாரணாசியில் இருந்தபடியே தமது குடும்பத்தினர் மூலம் பலரிடம் பணம் வசூலித்துள்ளார் மதன். மேலும், மதனின் மனைவி மற்றும் பெற்றோரை விசாரித்தால் உண்மை வெளிவரும்" என்று வலியுறுத்தி உள்ளார்.

- எஸ்.மகேஷ்

எடிட்டர் சாய்ஸ்

MUST READ