Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

கனிமொழியை சந்தித்த அனிதா ராதாகிருஷ்ணன்? -மா.செ பதவிக்கு மல்லுக்கட்டும் தூத்துக்குடி

ட்டமன்றத் தேர்தலில் தி.மு.க தோல்விக்குக் காரணமான மாவட்ட நிர்வாகிகளை களையெடுக்கும் பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன. 'கோவை வடக்கு, நாமக்கல் மாவட்டங்களை அடுத்து, தூத்துக்குடியில் பெரியசாமி உள்ளிட்ட சிலரை நீக்கும் வேலைகள் தீவிரமாக நடந்து வருகின்றன' என்கின்றனர் தி.மு.கவினர்.

தி.மு.கவின் தலைமை செயற்குழு கூட்டத்தில், தோல்வியுற்ற வேட்பாளர்கள் பலரும் கட்சியின் முன்னணி நிர்வாகிகள் செய்த குளறுபடிகளை பகிரங்கமாகப் பட்டியலிட்டனர். இதன்பின்னர், புகார் கூறியவர்களிடம் இருந்து எழுத்துப் பூர்வமான வாக்குமூலம் எழுதி வாங்கப்பட்டது. தேர்தல் நேரத்தில் மாவட்டச் செயலாளர்களுடன் இணைந்து ஒன்றிய, பகுதிக் கழக செயலாளர்கள் செய்த அனைத்து முறைகேடுகளையும் விரிவாக எழுதிக் கொடுத்தனர் சில வேட்பாளர்கள். இந்நிலையில், தூத்துக்குடி மாவட்டத்தில் தி.மு.கவின் தோல்வி குறித்து ஆராய்வதற்காக பூச்சி முருகன், சூர்யா, வெற்றிகொண்டான் ஆகியோர் தலைமையில் தற்போது குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.

' கோவில்பட்டி, ஓட்டப்பிடாரம் தொகுதியில் சொற்ப வாக்குகளில் கட்சி தோல்வியுற்றது ஏன்?' என்பது குறித்து இவர்கள் இருவரும் ஆய்வு செய்து வருகின்றனர். தேர்தலுக்கு மாவட்டப் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டிருந்த பெரியசாமி, ' தூத்துக்குடியில் தன் மகள் கீதா ஜீவன் வெற்றி பெற வேண்டும் என்றுதான் உழைத்தார். மற்ற தொகுதி வேட்பாளர்களின் வெற்றிக்காகப் பாடுபடவில்லை.

பல தொகுதிகளில் கட்சி தோற்றுப் போனதற்கும் அவர்தான் காரணம்.  அ.தி.மு.கவின் கடம்பூர் மாணிக்க ராஜாவிடம் அவர் வைத்திருந்த நட்புதான் தோல்விக்குக் காரணம்' என அறிவாலயத்தின் கவனத்திற்குப் புகார் சென்றுள்ளது. இதையடுத்து, ' தூத்துக்குடி தெற்கு மாவட்டச் செயலாளராக இருக்கும் பெரியசாமி மற்றும் அவரது ஆதரவாளரான வடக்கு மா.செ ராஜாராம் ஆகியோர் மீது கட்சி நடவடிக்கை பாயலாம்' என்ற தகவலால் பரபரத்துக்கிடக்கிறது தூத்துக்குடி திமுக வட்டாரம். 

இதுகுறித்து நம்மிடம் பேசிய தூத்துக்குடி மாவட்ட தி.மு.க நிர்வாகி ஒருவர், " கோவில்பட்டியிலும் ஓட்டப்பிடாரத்திலும் மிக சொற்பமான வாக்கு வித்தியாசத்தில் தி.மு.க தோற்றது. ஓட்டப்பிடாரத்தில் புதிய தமிழகம் கிருஷ்ணசாமி தோல்வியடைந்தார். 'கட்சி நிர்வாகிகள் போதிய ஒத்துழைப்பு கொடுக்காததுதான் காரணம்' என தலைமையின் கவனத்திற்குப் புகார் கொண்டு போயிருக்கிறார் கிருஷ்ணசாமி. இதையடுத்து, தூத்துக்குடி மாவட்டத்திற்குப் புதிய பொறுப்பாளர்களை நியமிக்கும் வேலையில் கட்சித் தலைமை ஈடுபட்டுள்ளது.

இதை அறிந்து கொண்டு, ' பதவியை வாங்கியே ஆக வேண்டும்' என்பதற்காக, மகளிரணி செயலாளர் கனிமொழி எம்.பி மூலமாக முயற்சி செய்கிறார் அனிதா ராதாகிருஷ்ணன். 'கனிமொழி ஆதரவில் மீண்டும் மா.செ ஆவார் அனிதா' என அவரது ஆதரவாளர்கள் பேசிக் கொண்டிருக்கின்றனர்.

இன்னொருபுறம், ' ஸ்டாலின் ஆதரவோடு வழக்கறிஞர்.ஜோயல் நியமிக்கப்படலாம்' என்ற பேச்சும் வலம் வருகிறது. ' யாருக்கு மா.செ பதவி?' என்ற விவாதம்தான் மாவட்டம் முழுவதும் நடந்து கொண்டிருக்கிறது. கோவை, நாமக்கல் மாவட்டங்களைப் போலவே, யாரும் எதிர்பாராத ஒருவருக்குப் பதவி கிடைக்குமா என்பதும் தெரியவில்லை. அறிவாலயத்தின் அறிவிப்புக்காகக் காத்திருக்கிறோம்" என்றார்.

ஆ.விஜயானந்த்
 

எடிட்டர் சாய்ஸ்

MUST READ