Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

பிரதமருடன் ஜெயலலிதா சந்திப்பு: ஜல்லிக்கட்டு தடையை நீக்க கோரிக்கை!

 

புதுடெல்லி: பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்த தமிழக முதல்வர் ஜெயலலிதா, ஜல்லிக்கட்டு மீதான தடையை நீக்க கோரிக்கை விடுத்துள்ளார்.

தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா, பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து பேசுவதற்காக இன்று (14-ம் தேதி) மதியம் 2.00 மணிக்கு டெல்லி விமானம் நிலையம் சென்றடைந்தார். அங்கிருந்து டெல்லியிலுள்ள தமிழக இல்லத்திற்கு சென்ற ஜெயலலிதா, சற்று நேரம் ஓய்வு எடுத்தார்.

பின்னர் சுமார் 4.00 மணியளவில் டெல்லி, ரேஸ்கோர்ஸ் சாலையில் உள்ள பிரதமர் நரேந்திர மோடி வீட்டிற்கு சென்று, பிரதமரை சந்தித்து பேசினார். அப்போது தமிழகத்திற்கு தேவையான 29 அம்ச கோரிக்கைகள் அடங்கிய மனுவையும் பிரதமர் நரேந்திர மோடியிடம், ஜெயலலிதா வழங்கினார்.

அந்த மனுவில், ''தமிழை ஆட்சி மொழியாக்க வேண்டும். உயர் நீதிமன்றத்தில் தமிழை வழக்காடு மொழியாக்க வேண்டும். ஜல்லிக்கட்டு மீதான தடையை நீக்க வேண்டும். காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும். மேகதாதுவில் தடுப்பணை கட்டுவதை தடுக்க வேண்டும். முல்லைப் பெரியாறு அணை நீர்மட்டத்தை 152 அடியாக உயர்த்த நடவடிக்கை எடுக்க வேண்டும். நதி நீர் இணைப்பை நடைமுறைப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இலங்கை சிறையில் உள்ள 21 தமிழக மீனவர்களையும், 92 படகுகளையும் மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.  மீனவர்களை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மீனவர்கள் இலங்கை கடற்படையால் தாக்கப்படுவதை தடுக்க வேண்டும். இலங்கை வசம் உள்ள கச்சத்தீவை மீட்க வேண்டும். கச்சத்தீவில் உள்ள அந்தோணியார் கோவிலை புதுப்பிக்க வேண்டும்.

நிலுவையில் உள்ள மெட்ரோ ரயில் திட்டப் பணிகளை விரைவுபடுத்த வேண்டும். மெட்ரோ ரயில் திட்டத்திற்கு தேவையான நிதியை மத்திய அரசு வழங்க வேண்டும். பறக்கும் ரயிலையும், மெட்ரோ ரயிலையும் இணைக்க வேண்டும். ஜி.எஸ்.டி. மசோதாவில் அ.தி.மு.க கோரியுள்ள திருத்தங்களை ஏற்றுக்கொள்ள வேண்டும். கெயில் திட்டத்தை மாற்றுப் பாதையில் செயல்படுத்த வேண்டும்

மருத்துவ நுழைவுத் தேர்வை அமல்படுத்த மாநில அரசை கட்டாயப்படுத்தக் கூடாது. தமிழக அரசு பரிந்துரைத்துள்ள இடங்களில் எய்ம்ஸ் மருத்துவமனையை அமைக்க வேண்டும். மாநில அரசுக்கு தரவேண்டிய நிதி உதவிகளை உடனே வழங்க வேண்டும். உணவு தானியங்கள் வழங்குவதை குறைக்கக் கூடாது. கூடங்குளம் அணுமின் நிலைய 2 வது அலகை உடனே தொடங்க வேண்டும். தமிழக அரசு கேபிள் டிவி நிறுவனத்துக்கு டிஜிட்டல் உரிமம் வழங்க வேண்டும்'' என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தியுள்ளார்.

எடிட்டர் சாய்ஸ்

ஜெயலலிதா வாழ்வின் சில ‘கடைசி’கள்!

MUST READ