Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

'எனக்கே சீட் தரலை, அப்புறம் எதுக்கு தேர்தல் வேலை?!' -ஸ்டாலினை அதிர வைத்த தி.மு.க மா.செ.

அறிவாலயத்தை அதிர வைத்துக் கொண்டிருக்கிறது தேர்தல் தொடர்பாக அடுத்தடுத்து வரும் புகார்கள். அதிலும், ஈரோடு மாவட்டத்தில் இருந்து வந்த புகார்களைப் படித்துவிட்டு கொந்தளிப்பின் உச்சத்தில் இருக்கிறார் தி.மு.க பொருளாளர் மு.க.ஸ்டாலின்.


ஈரோடு மாவட்டம், அந்தியூரில் போட்டியிடுவதற்காக ஒன்றியச் செயலாளர் ஏ.ஜி.வெங்கடாசலத்திற்கு 'சீட்' கொடுத்தது தி.மு.க தலைமை. தேர்தலில் 'சீட்' எதிர்பார்த்துக் காத்துக் கிடந்த வடக்கு மாவட்டச் செயலாளர் நல்லசிவத்திற்கு பெருத்த ஏமாற்றமாகிப் போய்விட்டது. இத்தனைக்கும் என்.கே.கே.பி.ராஜாவின் தீவிர ஆதரவாளர் நல்லசிவம். தேர்தல் முடிவில் 5,312 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவினார் வெங்கடாசலம். காரணம், ' மாவட்டச் செயலாளரின் உள்ளடிதான் காரணம். அவரால்தான், டி.என்.பாளையம், கோபி நகரங்களில் பெருமளவு வாக்கு சரிந்தது. கூட்டணிக் கட்சியினரிடம் அவர் பேசிய ஆடியோவும் உள்ளது' என நேற்று முன்தினம் ஸ்டாலினை சந்தித்துப் புகார் மனு கொடுத்தார் வெங்கடாசலம். இதையடுத்து, எப்போது வேண்டுமானாலும் விசாரணை நடத்தப்படலாம் என்பதால், ஈரோடு தி.மு.க கூடாரம் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளது.

இதுகுறித்து நம்மிடம் பேசிய ஈரோடு மாவட்ட தி.மு.க நிர்வாகி ஒருவர், " அந்தியூரைச் சுற்றியுள்ள மலைக் கிராமங்களில் வெங்கடாசலத்திற்கு நல்ல பெயர் உண்டு. இத்தனைக்கும் அந்தியூர் பேரூராட்சித் தலைவராக 15 ஆண்டுகள் பதவி வகித்தவர் அவர். சுற்றியுள்ள மக்களின் தேவைகளுக்காக அடிக்கடி போராட்டத்தில் இறங்குவார். கட்சித் தலைமை சீட் கொடுக்கும் என்று அவர் எதிர்பார்க்கவில்லை. ' கட்டாயம் வெற்றி பெறுவோம்' என நம்பி உழைத்தார். ஓட்டு எண்ணிக்கையின்போது, மாலை வரையில் நல்ல லீடிங்கில் இருந்தார். அதன்பிறகு, டி.என்.பாளையம், கோபி பகுதிகளில் மளமளவென வாக்கு சதவீதம் குறைந்தது.

இதற்கு முழுக் காரணமே நல்லசிவமும் சொந்தக் கட்சிக்காரர்கள் சிலரும்தான். மாவட்டச் செயலாளர் பேசிய ஆடியோ ஆதாரம் ஒன்றும் எங்கள் கைக்குக் கிடைத்தது. அதில், கூட்டணிக் கட்சி நிர்வாகி ஒருவரிடம், ' எனக்கே கட்சித் தலைமை சீட் தரலை. உங்களுக்கு தனிப்பட்ட வேலை இருந்தால் பாருங்க. தேர்தல் வேலை எல்லாம் பார்க்க வேண்டாம்' எனச் சொல்கிறார் நல்லசிவம். இதைக் கேட்டு அதிர்ந்தே போய்விட்டோம். இதுகுறித்து விரிவான புகார் ஒன்றை பொருளாளர் ஸ்டாலினை சந்தித்துக் கொடுத்தோம். இதுகுறித்து விசாரணை நடத்தி கட்சித் தலைமை நடவடிக்கை எடுக்க வேண்டும்" என வேதனைப்பட்டார்.

"கொங்கு மண்டலம் என்றாலே பிரதானமாக இருக்கும் கவுண்டர் சமூகத்திற்கே பதவிகள் கொடுக்கிறார்கள். ஒருகாலத்தில் ஒருங்கிணைந்த கோவை மாவட்டத்தின் செயலாளராக பி.ஏ.சுவாமிநாதன் இருந்தார். ஒட்டுமொத்த கட்சிக்காரர்களை அரவணைத்துச் சென்றார். கட்சி நல்லமுறையில் வளர்ந்தது. நேற்று எங்களிடம் என்.கே.கே.பி.ராஜா பேசும்போது, ' நிர்வாகிகளை மாற்றும் முடிவில் கட்சி இருக்கிறது. ஆனால், சரியான நபர் யார்?' எனக் கேள்வி எழுப்பினார். இதன்மூலம் மீண்டும் அவர் சமூகத்தைச் சேர்ந்த நபர்களுக்கே பதவி கொடுப்பதற்கான ஏற்பாடுகளில் இருக்கிறார். கட்சிக்காக உண்மையாக உழைப்பவர்கள் யார்? என்பதை கண்டறிந்து பதவி கொடுத்தாலே போதும். மிட்டா மிராசுகளின் கைகளில் மாவட்ட நிர்வாகம் இருப்பதால், தொண்டர்கள் சோர்ந்து போகிறார்கள்.

நாங்கள் புகார் கொடுத்ததை அறிந்ததும், ' எங்கள் மீது கட்சித் தலைமை நடவடிக்கை எடுக்காது. புகார் கொடுத்த வேட்பாளர்களின் கதி என்னவாகப் போகிறது பாருங்கள்' என நல்லசிவம் பேசி வருகிறார். இந்தத் தேர்தலில் கொங்கு மண்டலத்தில் போட்டியிட்ட பல வேட்பாளர்கள் கடனாளியானதுதான் மிச்சம். இனி வரும் காலங்களில் கூட்டணிக் கட்சிகளுக்கே சீட் ஒதுக்கிவிட்டால், கடன் தொல்லை, சொந்தக் கட்சிக்காரர்களின் உள்ளடி என எந்தத் தொல்லையும் எங்களுக்கு ஏற்படாது" என எதார்த்த நிலைமையை விளக்கினார் கட்சியின் சீனியர் ஒருவர்.

இதுகுறித்து, குற்றச்சாட்டுக்கு ஆளான ஈரோடு வடக்கு மாவட்ட செயலாளர் நல்லசிவத்திடம் பேசினோம். "என் மீது இரண்டு வேட்பாளர்கள் புகார் கூறியுள்ளனர். இது நூறு சதவீதம் பொய்யானது. என்னுடைய மாவட்டத்திற்குட்பட்ட நான்கு தொகுதிகளிலும் கடுமையாக தேர்தல் வேலை பார்த்தேன். இவர்கள் சொல்லும் டி.என்.பாளையம், கோபி பகுதிகளில் நாடாளுமன்றத் தேர்தலைக் காட்டிலும் நல்ல வாக்குகளை நாங்கள் வாங்கியுள்ளோம். அந்தியூர் தொகுதி எனக்குக் கிடைக்கும் என எதிர்பார்த்தது உண்மைதான். ஆனால், கட்சித் தலைமை வெங்கடாசலத்தை அறிவித்த நாள் முதலாக, அவருக்காக தேர்தல் வேலைகளில் முழு மூச்சாக வேலை பார்த்தேன்.

தேர்தல் வேலை பார்த்த கட்சிக்காரர்களுக்கு பொருளாதார ரீதியாக எந்த உதவியும் அவர் செய்யவில்லை. 'வீட்டுப் பத்திரம் இருக்கிறது. அடமானம் வைக்கிறேன்' எனச் சொல்லிக் கொண்டிருந்தார். எதுவும் செய்யவில்லை. ஆறு மணிக்குப் பிரசாரத்திற்குச் செல்ல வேண்டும் என்றால், ஒன்பது மணிக்குத்தான் வருவார். எல்லாவற்றையும் சரி செய்து தேர்தல் வேலை பார்த்த எனக்கு எதிராக புகார் சொல்கிறார்கள். நான் எந்தளவுக்கு உழைத்தேன் என்பது கூட்டணிக் கட்சிக்காரர்களுக்கு நன்றாகவே தெரியும்" என்றார் நிதானமாக.

அறிவாலயத்தின் விசாரணைக்காகக் காத்திருக்கிறார்கள் ஈரோடு மாவட்ட உடன்பிறப்புகள்.

ஆ.விஜயானந்த்


 

எடிட்டர் சாய்ஸ்

MUST READ