Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

சபாநாயகர் பதவியில் தனபால் நீடிப்பாரா?! -பதவியைக் குறிவைக்கும் கொலைப் புகார்!

' சேலம் அ.தி.மு.க பிரமுகரின் மரணத்திற்கு காரணம்' எனச் சொல்லப்படும் சபாநாயகர் தனபால் மற்றும் இரண்டு அமைச்சர்கள் மீதான வழக்கில், ' எட்டு வாரங்களுள் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யுமாறு' உத்தரவிட்டுள்ளது சென்னை உயர் நீதிமன்றம்.  ' குற்றப்பத்திரிகையில் தனபால் பெயர் இடம்பெற்றால், சபாநாயகர் பதவியில் அவர் நீடிப்பது சிரமம்' என்கின்றனர் சட்ட வல்லுநர்கள்.
 
முரசொலி பத்திரிகையில், கடந்த 2007-ம் ஆண்டு அ.தி.மு.க பொதுச் செயலாளர் ஜெயலலிதா குறித்து சில சர்ச்சைக்குரிய வாசகங்கள் வெளியாகி இருந்தன. இதனைக் கண்டித்து, தி.மு.க தலைவர் கருணாநிதிக்கு எதிராக மாநிலம் முழுவதும் அ.தி.மு.கவினர் போராட்டத்தில் இறங்கினர். இந்தப் போராட்டத்தில் கைது செய்யப்பட்டவர்கள் அந்தந்த மாவட்டச் சிறைகளில் அடைக்கப்பட்டனர். சேலத்தில், அ.தி.மு.க நிர்வாகிகள் இருநூறுக்கும் மேற்பட்டோர் சேலம் மத்தியச் சிறையில் அடைக்கப்பட்டனர். மறுநாள் அதிகாலை மூன்று  மணியளவில், மாவட்ட எம்.ஜி.ஆர் அணியின் துணைத் தலைவர் சுகுமாருக்கு நெஞ்சு வலி ஏற்பட்டது. அடுத்த இரண்டு மணி நேரத்தில் அவர் இறந்து போனார்.

' சுகுமாரைக் காப்பாற்றியிருக்கலாம். அவரது மரணத்திற்கு தனபால், தோப்பு வெங்கடாச்சலம், தங்கமணி, எடப்பாடி பழனிச்சாமி, செல்வகணபதி உள்ளிட்டோர்தான் காரணம்' என சிறை அதிகாரிகள் வாக்குமூலம் கொடுத்திருந்தனர். அந்த நேரத்தில், இந்த விவகாரம் கண்டு கொள்ளப்படவில்லை. இந்நிலையில், சிறைக் கைதிகள் உரிமை மையத்தின் தலைவர் வழக்கறிஞர் புகழேந்தி, நீதிமன்றத்தின் கவனத்திற்கு இந்த விவகாரத்தைக் கொண்டு சென்றார். இதையடுத்து, சேலம் மாவட்டக் குற்றப்பிரிவு உதவி ஆணையர் ராமகிருஷ்ணன் தலைமையில், விசாரணைக் குழு அமைத்து உத்தரவிட்டார் நீதியரசர் நாகமுத்து.

இதன்பின்னரும், குற்றப் பத்திரிகையை தாக்கல் செய்யாமல் காவல்துறை அதிகாரிகள் இழுத்தடித்து வந்தனர். ' வழக்கின் விசாரணை அதிகாரி ராமகிருஷ்ணன் நேரில் ஆஜராக வேண்டும்' என நீதியரசர் பி.என்.பிரகாஷ் உத்தரவிட்டார்.

நேற்று வழக்கு விசாரணையின்போது ஆஜரான விசாரணை அதிகாரியிடம், ' எட்டு வாரங்களுக்குள் வழக்கின் இறுதி அறிக்கையைத் தாக்கல் செய்யுமாறு' உத்தரவிட்டார் நீதியரசர். இந்த உத்தரவை அ.தி.மு.க நிர்வாகிகள் எதிர்பார்க்கவில்லை.

" சபாநாயகர் தனபாலுடன் சேர்த்து அமைச்சர்கள் எடப்பாடி பழனிச்சாமி, தங்கமணி உள்ளிட்டோரும் இந்த வழக்கில் சேர்க்கப்பட்டுள்ளனர். கடந்த ஒரு வாரமாக சேலம் மாவட்ட நீதிமன்ற நடுவரும் இந்த வழக்கு குறித்து விசாரித்து வருகிறார்.

இறந்து போன சுகுமாரின் மகன் சாந்தகுமார், ' தன் தந்தையின் இறப்பிற்குக் காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்மென உள்துறை செயலருக்குக் கடிதம் அனுப்பியிருக்கிறார். இதுநாள் வரையில் சுகுமார் குடும்பம் இந்த வழக்கில் தலையிடாமல் ஒதுங்கியே இருந்தது. தற்போது உரிய நியாயம் கிடைக்க வேண்டும் என பகிரங்கமாக வெளியில் வந்ததை, அ.தி.மு.கவினர் எதிர்பார்க்கவில்லை. ஜார்க்கண்ட் முன்னாள் முதல்வர் சிபுசோரன் வழக்கைப் போலவே, இந்த வழக்கில் குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டால் சபாநாயகர் பதவிக்கு ஆபத்து வரும்" என்கின்றனர் சேலம் மாவட்ட சிறைத்துறை அதிகாரிகள்.

சிறைக் கைதிகள் உரிமை மையத்தின் தலைவர் வழக்கறிஞர் புகழேந்தியிடம் பேசினோம்.

" சுகுமாரின் மரணத்திற்கு அ.தி.மு.க முன்னணி நிர்வாகிகள்தான் காரணம் என்பதற்கு போதுமான சாட்சி ஆதாரங்கள் இருக்கின்றன. இதுதொடர்பாக, சிறை அதிகாரி கருப்பண்ணன் அரசுக்குக் கொடுத்த அறிக்கை, ஆர்.டி.ஓ விசாரணை அறிக்கை போன்றவற்றில் தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதிலும், சம்பவம் நடந்த 9.7.07 அன்று அதிகாலை, ' சுகுமாருக்கு நெஞ்சுவலி' என்ற தகவல் வந்ததும், அவரது லாக்அப்புக்குள் நுழைந்த சிறை அதிகாரி கருப்பண்ணன், அவரை மோகன் குமாரமங்கலம் அரசு ஆஸ்பத்திரிக்குக் கொண்டு செல்வதற்காக 108 ஆம்புலன்ஸை வரவழைத்தார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த அ.தி.மு.கவினர், 'சுகுமாரைக் கொண்டு செல்ல அனுமதிக்க மாட்டோம். மருத்துவர் இங்கே வந்தாக வேண்டும்' என தகராறு செய்துள்ளனர். ஒருகட்டத்தில், அ.தி.மு.க நிர்வாகிகள் சுகுமார் படுத்துக் கிடந்த ஸ்ட்ரெச்சரைக் கீழே தள்ளிவிட்டுள்ளனர். இதில், சுகுமார் கீழே விழுந்துவிட்டார்.

அதைப் பொருட்படுத்தாமல் சண்டை போட்டுக் கொண்டு இருந்துள்ளனர். இதனால்தான், சுகுமார் இறந்துள்ளார். இதுதொடர்பாக, அறிக்கை அளித்த சிறை அதிகாரி கருப்பண்ணன், 'சுகுமாரை மருத்துவச் சிகிச்சைக்கு கொண்டு செல்ல முயற்சித்தபோது, செல்வகணபதி, எடப்பாடி பழனிச்சாமி, தனபால், தோப்பு வெங்கடாச்சலம், தங்கமணி உள்ளிட்டோர் தகராறு செய்தனர். உரிய மருத்துவச் சிகிச்சை அளிக்க இவர்கள் அனுமதிக்கவில்லை. அவரது சாவுக்கு இவர்கள்தான் காரணம்' எனக் குறிப்பிட்டிருந்தார்.

இந்த சம்பவத்தில் நடவடிக்கை எடுக்குமாறு, சேலம் மாநகர காவல் ஆணையர் உள்பட பலருக்கு புகார் அனுப்பியும், யாரும் கண்டுகொள்ளவில்லை. இதன்பிறகுதான் நீதிமன்றத்தை அணுகினோம். சுகுமார் குடும்பத்தினருக்கு சட்டப்படி நியாயம் கிடைக்கும் என எதிர்பார்க்கிறோம்" என்றார் விரிவாக.

சிபுசோரன் வழக்கைப் போலவே, தமிழக சபாநாயகர் பதவியும் சர்ச்சையில் சிக்குமோ? என பதைபதைப்போடு இருக்கிறார்கள் அ.தி.மு.கவினர்.

-ஆ.விஜயானந்த்
 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close