Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

கல்விச் சான்றிதழ்களில் சாதி, மதத்தை குறிப்பிட நிர்பந்திக்க கூடாது: பள்ளிகளுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு!

சென்னை: மாணவர்களின் கல்விச் சான்றிதழ்களில் சாதி மற்றும் மதத்தை குறிப்பிட நிர்பந்திக்கக் கூடாது என பள்ளி நிர்வாகங்களுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை, வில்லிவாக்கத்தை சேர்ந்த ஜி.பாலகிருஷ்ணன் உயர் நீதிமன்றத்தில் பொது நல மனு ஒன்றை தாக்கல் செய்தார். அதில், ''நாட்டின் வளர்ச்சிக்கு சாதியும், மதமும் தான் தடையாக இருக்கிறது. சமஉரிமை சமத்துவத்தின் அடிப்படையில் சாதியற்ற சமுதாயத்தை உருவாக்க வேண்டும் அரசியலமைப்புச் சட்டம் கூறுகிறது.

ஆனால், மாணவர்களின் மாற்றுச் சான்றிதழ் உள்ளிட்ட கல்வி சான்றிதழ்களில் சாதி, மதத்தை குறிப்பிட பள்ளி நிர்வாகங்கள் நிர்பந்திக்கின்றன. இதனால் சாதி, மதமே வேண்டாம் என நினைப்பவர்கள் கூட கல்விக்காக சாதியைக் குறிப்பிட வேண்டிய நிர்பந்தம் ஏற்படுகிறது.

கடந்த 1973-ம் ஆண்டு தமிழக கல்வித்துறை பிறப்பித்த அரசு ஆணையில், ''பள்ளி கல்விச்சான்றிதழ்கள் மற்றும் விண்ணப்பங்களில் தங்களது சாதி மற்றும் மதத்தை குறிப்பிட விருப்பமில்லை என மாணவர்கள் தெரிவித்தால் அதை பள்ளி நிர்வாகம் ஏற்றுக்கொள்ள வேண்டும்'' என குறிப்பிடப்பட்டிருக்கிறது. இதுபோன்று 2000-ம் ஆண்டிலும் ஒரு அரசாணை பிறப்பிக்கப்பட்டிருக்கிறது.

ஆனால், இந்த அரசாணைகள் இருப்பது பொதுமக்கள் பலருக்கு தெரியாது. எனவே, மாணவர்களின் கல்வி சான்றிதழ்களில் சாதி, மதத்தை குறிப்பிட பள்ளி நிர்வாகங்கள் நிர்பந்திக்கக் கூடாது என உத்தரவிட வேண்டும்'' எனக் கூறியிருந்தார்.

இந்த மனு உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.கே.கவுல் மற்றும் நீதிபதி ஆர்.மகாதேவன் முன்பு விசாரணைக்கு வந்தது.

அப்போது நீதிபதிகள், ''கல்விச் சான்றிதழ்களில் சாதி மற்றும் மதத்தை குறிப்பிட விரும்பாத பெற்றோர்களை கல்வி நிர்வாகங்கள் நிர்பந்திக்கக் கூடாது என்ற அரசாணை, பொதுமக்களிடம் சென்றடையும் அளவுக்கு, பள்ளிக் கல்வி மற்றும் உயர் கல்வித்துறை செயலாளர்கள் விளம்பரப்படுத்த வேண்டும்.

அதேபோல், மாணவர்களின் கல்விச் சான்றிதழ்களில் சாதி மற்றும் மதத்தை குறிப்பிட விரும்பாதவர்களை பள்ளி நிர்வாகங்கள் நிர்பந்திக்கக் கூடாது. ஆனால், சில பெற்றோர் மாற்றுச் சான்றிதழில் சாதியை குறிப்பிட விரும்புகின்றனர். எனவே, பெற்றோர்களின் விருப்பத்தின்படி பள்ளி நிர்வாகங்கள் முடிவெடுத்துக் கொள்ளலாம்'' என உத்தரவிட்டனர்.

எடிட்டர் சாய்ஸ்

MUST READ