Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

சட்டமன்றத்தில் என்ன பேசவேண்டுமோ அவசியம் பேசுவோம்! -மு.க.ஸ்டாலின் உறுதி

சென்னை: சட்டமன்றத்தில் என்ன பேசவேண்டுமோ அதை அவசியம் பேசுவோம் என்று தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின் தெரிவித்து உள்ளார்.

தமிழக சட்டமன்றத்திற்கு சமீபத்தில் நடைபெற்ற தேர்தலில் அ.தி.மு.க. 134 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியைத் தக்கவைத்து கொண்டுள்ளது. தி.மு.க. 89 இடங்களில் வெற்றி பெற்று பிரதான எதிர்க்கட்சியாகி உள்ளது. இந்நிலையில், இன்று தமிழக சட்டப் பேரவைக் கூட்டத் தொடர் தமிழக ஆளுநர் ரோசய்யா உரையுடன் தொடங்குகிறது.

இந்தக் கூட்டத்தொடரில் பங்கேற்கும் தி.மு.க. உறுப்பினர்களின் ஆலோசனைக் கூட்டம் அண்ணா அறிவாலயத்தில் நேற்று மாலை நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு தி.மு.க. பொருளாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவராக நியமிக்கப்பட்டுள்ள மு.க.ஸ்டாலின் தலைமை தாங்கினார்.

கூட்டம் முடிந்த பின் ஸ்டாலின் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, செய்தியாளர்களின் கேள்விகளுக்கு அவர் அளித்த பதில்கள்...

தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில் ஏன் தலைவர் கருணாநிதி பங்கேற்கவில்லை?

தலைவர் கலைஞருக்கு உடல் நலம் சரியில்லை. லேசாக அவருக்கு ஃபீவரிஷ்ஷாக இருந்தது.

தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில் என்ன விவாதிக்கப்பட்டது?

தி.மு.க. சார்பில் தேர்வு செய்யப்பட்டுள்ள சட்டமன்ற உறுப்பினர்களில் 42 பேர் புதிய உறுப்பினர்கள். அவர்களுக்கு, சட்டமன்ற மரபுகள், பேரவையில் எவ்வாறு நடந்துகொள்ள வேண்டும் என்பது குறித்தும், சட்டமன்ற விதிமுறைகள் வரம்பு பற்றியும் ஒரு பயிற்சி அளிக்கப்பட்டது. அதற்குத்தான் இந்த கூட்டம்.

நாளை (இன்று) நடைபெறும் சட்டமன்ற கூட்டத்தில் என்ன பிரச்னைகளை தி.மு.க. சார்பில் எழுப்ப உள்ளீர்கள்?

சட்டமன்றத்திற்கு வாங்க. ஆளுநர் உரை இருக்கிறது. நடைபெறும் விவாதத்தில் என்ன பேசவேண்டுமோ அவசியம் பேசுவோம்.

சட்டமன்ற கூட்டத்தில் தி.மு.க. தலைவர் கருணாநிதி கலந்துகொள்வாரா?

சிறப்பு இருக்கை வசதி கேட்டுக் கடிதம் கொடுத்துள்ளோம். தலைவர் தமிழக சட்டமன்றத்திற்கு வந்து செல்லும் வகையில் உரிய சிறப்பு இருக்கை வசதி செய்து தரப்பட்டால், அவர் சட்டமன்ற கூட்டத்தில் பங்கேற்பார்.

இவ்வாறு அவர் கூறினார்.

எடிட்டர் சாய்ஸ்

ஜெயலலிதா வாழ்வின் சில ‘கடைசி’கள்!

MUST READ