Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

சட்டசபையில் கருணாநிதிக்கு இருக்கை ஒதுக்கீடு: ஈ.வி.கேஸ் இளங்கோவன் சொல்லும் ஆலோசனை!

நாகர்கோவில்: சட்டமன்றத்தில் தி.மு.க. தலைவர் கருணாநிதிக்கு சிறப்பு இடம் ஒதுக்குவதைவிட, முதன்மையான இடம் வழங்க வேண்டும் என்று தமிழக காங்கிரஸ் தலைவர் இளங்கோவன் வலியுறுத்தி உள்ளார்.

கன்னியாகுமரி மாவட்டம்,  கருங்கல் பகுதியில் கடந்த 27.9.15 அன்று நடைபெற்ற காங்கிரஸ் பொதுக்கூட்டத்தில், முதலமைச்சர் ஜெயலலிதாவை அவதூறாக பேசியதாக தொடரப்பட்ட வழக்கில், காங்கிரஸ் கட்சித் தலைவர் ஈ.வி.கேஸ்.இளங்கோவன் இன்று நாகர்கோவில் நீதிமன்றத்தில் ஆஜரானார். இதையடுத்து, இந்த வழக்கு விசாரணையை அடுத்த மாதம் 18-ம் தேதிக்கு தள்ளி வைத்து நீதிபதி உத்தரவிட்டார்.

இதை தொடர்ந்து, செய்தியாளர்களை சந்தித்த இளங்கோவன், ''முதல்வர் ஜெயலலிதா டெல்லியில் பிரதமர் மோடியை சந்தித்து 50 நிமிடங்கள் பேசியதாகவும், அப்போது  96 பக்க கோரிக்கை மனுக்களை கொடுத்ததாகவும் கூறப்படுகிறது. இது கருணாநிதி கூறியதுபோல், கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு கொடுத்த அதே கோரிக்கைகளைதான் அவர் திரும்ப கொடுத்துள்ளார்.

முதலமைச்சர் ஜெயலலிதா, தமிழக மக்கள் நலனுக்காக பிரதமர் மோடியை சந்திக்கவில்லை. அவர் மீதான வழக்குகளில் இருந்து தப்பிக்க பிரதமரை சந்தித்து ஆலோசனைப் பெற்றுள்ளார். 

தி.மு.க. தலைவர் கருணாநிதி 1957 ம் ஆண்டு முதல் சட்டமன்ற உறுப்பினராகவும், முதலமைச்சராகவும் பதவி வகித்தவர். அரசியலுக்கு அப்பாற்பட்டு எல்லா தலைவர்களாலும் மிகவும் மதிக்கப்படும் தலைவர். அப்படிப்பட்டவருக்கு, சட்டசபையில் சிறப்பு இடம் ஒதுக்குவதைவிட, முதன்மையான இடம் வழங்க வேண்டும்.

சட்டசபையில் ஆளும் கட்சியின் அணுகுமுறையை பொறுத்தே எதிர்க்கட்சியின் செயல்பாடு அமையும். 'அ.தி.மு.க. ஆட்சியின்போது ஆசிரியர் மற்றும் கண்டக்டர் நியமனத்துக்கு லஞ்சம் வாங்கப்பட்டது' எனப் பேசியதற்காக என் மீது வழக்கு போடப்பட்டுள்ளது. லஞ்சம் கொடுத்து வேலையில் சேர்ந்தவர்களின் பட்டியலை ஆதாரத்துடன் கொடுத்து, இந்த வழக்கை நிரூபிப்பேன்.

மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், நான் உயிரோடு இருக்கும் வரை காங்கிரஸ் வளராது என்று கூறி உள்ளார். பா.ஜ.க.வில் அவர் இருந்ததால் அது டெபாசிட்கூட பெறவில்லை. குளச்சல் துறைமுகம் என கூறிவிட்டு, இனயம் பகுதியில் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது. இது தனியார் ஒருவரின் நிலத்தையும், சொத்தையும் காப்பாற்ற எடுக்கப்படும் முயற்சி ஆகும். குளச்சல் துறைமுகத்தை, குளச்சலில் தான் அமைக்க வேண்டும்" என்றார்.

படங்கள்: ர.ராம்குமார்

எடிட்டர் சாய்ஸ்

அப்போலோ டூ எம்.ஜி.ஆர் சமாதி... ஜெயலலிதாவுக்கு அரண் அமைத்த மன்னார்குடி!

MUST READ