Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

ராமேஸ்வரம் கோவிலின் தங்க லட்சுமணர் சிலை எங்கே? -திருடு போன 600 ஆண்டு பழமை! #Exclusive

ராமேஸ்வரம் கோவிலில், 600 ஆண்டுகள் பழமையான பஞ்சலோக லட்சுமணர் சிலை திருடு போன விவகாரம் அம்பலமாகியுள்ளது. 'சிலை திருடு போனதைப் பற்றி அதிகாரிகளோ, கோவில் நிர்வாகமோ கவலைப்படவில்லை' என வேதனைப்படுகின்றனர் பக்தர்கள்.

ராமர் வழிபட்ட சிவஸ்தலம் என்பதால் ராமேஸ்வரம், ராமநாத சுவாமி கோவிலுக்கு வட இந்திய பக்தர்கள் லட்சக்கணக்கில் வந்து செல்கின்றனர். ' ராமர் மீதான வட இந்தியர்களின் பக்தியைக் காசாக்கும் வேலையில் கோவில் ஊழியர்கள் ஈடுபடுகிறார்கள்' என அவ்வப்போது புகார் வருவது வழக்கம். குறிப்பாக ராமர் தீர்த்தம், லட்சுமண தீர்த்தம், சீதா தீர்த்தம் போன்றவற்றில் நடக்கும் பண மோசடிகளை இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் கண்டுகொள்வதில்லை. இந்நிலையில், " கோவிலில் மிகப் பழமையான லட்சுமணர் சிலை காணாமல் போய்விட்டது. இது விலை மதிக்க முடியாத பஞ்சலோகச் சிலை. இதுபற்றிய எந்தப் புகாரும் ஆவணங்களில் இல்லை" என ஆதங்கப்படுகிறார் பக்சி சிவராஜன். இவர் விஸ்வ இந்து பரிஷத்தின், திருக்கோவில் திருமடங்கள் பிரிவின் மாநில அமைப்பாளராக இருக்கிறார்.

அவர் நம்மிடம், "  தமிழகம் முழுவதும் இரண்டாயிரம் கோடி மதிப்பிலான சிலைகள் கடத்தப்பட்டுள்ளதாக செய்திகள் வருகிறது. தீனதயாளன் என்கின்ற தனிநபர்,  தனது வீட்டுக்குள் கோவிலையே பெயர்த்து எடுத்துக் கொண்டு போய் வைத்திருந்ததை நினைத்துக்கூடப் பார்க்க முடியவில்லை. இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் துணையில்லாமல் இந்தக் கடத்தல் நடத்திருக்க வாய்ப்பில்லை. கோவிலைப் பற்றிய அனைத்து விவரங்களையும் அறிந்து வைத்திருப்பவர்கள் அவர்கள்தான்.

ராமேஸ்வரம் கோவிலிலும் 1986-ம் ஆண்டு,  தங்கம் அதிகம் கலந்திருந்த பஞ்சலோக லட்சுமணர் சிலை காணாமல் போய்விட்டது. இதன் அன்றைய சந்தை மதிப்பே இரண்டு கோடி ரூபாய். விஜயநகரப் பேரரசால் ராமேஸ்வரம் கோவிலுக்கு அளிக்கப்பட்ட சிலை இது. இதுபற்றிய முதல் தகவல் அறிக்கையை ராமநாதபுரம் எஸ்.பி அலுவலகத்தில், ஆர்.டி.ஐ மூலமாகக் கேட்டபோது, ' முப்பது ஆண்டுகள் ஆகிவிட்டதால், அதுபற்றிய எந்தத் தகவலும் இல்லை' எனப் பதில் அளித்திருக்கிறார்கள். இதன் இப்போதைய மதிப்பு அளவிட முடியாதது, கோவில் நிர்வாகத்திற்கு இதுபற்றி எந்த அக்கறையும் இல்லை" என ஆவேசப்பட்டார்.

அவரே மேலும் "இந்து சமய அறநிலையத்துறை அமைச்சராக பக்தவத்சலம் இருந்த காலத்தில், ராமசாமி ஐயர் தலைமையில், கோவில் சிலைகள், சொத்துக்கள், பழக்கவழங்கங்கள் என அனைத்தையும் தொகுத்து ஆவணப்படுத்த குழு அமைக்கப்பட்டது. தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா, கேரளா ஆகிய மாநிலங்களில் உள்ள கோவில் சிலைகளையும் ஆவணப்படுத்தினர்.  தமிழக புள்ளியியல் துறையில் இந்த ஆவணங்கள் அனைத்தும் இருக்கின்றன. 1972-ம் ஆண்டு இந்திய படிமவியல் துறையும், ' சிலைகளைப் பதிவு செய்து சான்றிதழ் வாங்க வேண்டும்' என உத்தரவு பிறப்பித்தது. இதன்படி, சிலையின் மதிப்பு, உயரம், எந்த வகையான உலோகத்தால் ஆனது என்பன போன்ற அனைத்து விவரங்களும் பதிவு செய்யப்பட்டன.

இந்த ஆவணத்தையும், தற்போது பராமரிக்கப்படும் கோவில் ஆவணங்களையும் சரிபார்த்தால், எவ்வளவு சிலைகள் திருடு போயுள்ளன என்பதைத் துல்லியமாக அறிந்து கொள்ளலாம். ராமநாத சுவாமி கோவிலின் லட்சுமணர் சிலையைப் பற்றி  அனைத்து ஆவணப் பதிவேட்டிலும் உள்ளன. பக்தர்கள் மனம் வேதனைப்படும் என்பதற்காக, சமீபத்தில் நடத்தப்பட்ட கோவில் கும்பாபிஷேகத்தில் புதிதாக ஒரு லட்சுமணர் சிலையை வைத்துவிட்டார்கள். இது முழுக்க முழுக்க பக்தர்களை ஏமாற்றும் செயல். காணாமல் போன லட்சுமணர் சிலையைக் கண்டறியும் முயற்சியில் அரசு ஈடுபட வேண்டும்" என்றார் கொந்தளிப்போடு.

' கோவில் என்பது தனிநபர்களின் உடைமையாக மாறிவிடக் கூடாது' என்பதற்காகத்தான், 1961-ம் ஆண்டு அனைத்துக் கோவில்களும் அரசின் வசம் வந்தன. அந்த நோக்கம் உண்மையிலேயே எட்டப்பட்டுவிட்டதா? எனக் கேள்வி எழுப்புகிறார்கள் பக்தர்கள்.

-ஆ.விஜயானந்த்

எடிட்டர் சாய்ஸ்

ஜெர்சி மாடுகள், பிரேசில் காபி, மருத்துவமனை உறுதி! ஜெயலலிதா பற்றி தோழியின் நினைவலைகள்
placeholder

அதே மாதிரி ஜெயலலிதா தன்னுடைய 10 வயதில் சிவாஜி கணேசன் முன்னிலையில் மயிலாப்பூரில் செய்த நடன அரங்கேற்றப் படங்கள் முதல் அதற்குப் பிறகான அவரது சின்ன வயசுப் படங்களை நாங்கள் தொகுத்திருந்தோம். அதை 2012 ம் ஆண்டு, எனக்கு அவரை சந்திக்கும் வாய்ப்புக் கிடைத்த போது கொடுத்தேன். அதைப் பார்த்து ரொம்ப சந்தோஷமாகிட்டாங்க. அந்தப் படத் தொகுப்பை, தன்னோட ஹேண்ட் பேக்ல வச்சுக்கிட்டாங்க. பத்திரமா வைத்துக் கொள்வதாகவும் சொன்னாங்க. சினிமாக்காரங்க என்றால் ஈஸியாக அணுகலாம் என்கிற திரையை உடைத்து, அவங்க தனி ரூட்டைப் போட்டு, அதை மத்தவங்க ஃபாலோ பண்ற அளவுக்கு வாழ்ந்து காட்டினாங்க. குறிப்பா, சினிமா விழாக்கள், நிகழ்ச்சிகளுக்கு போக மாட்டாங்க. 

அம்மாவிடமிருந்து போன் வந்தால்...!? - உருகும் வீணை காயத்ரி
placeholder

''சமீபத்தில் கொலை மிரட்டல் விட்டப் பையனால் அம்மாவை சந்திக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. கடந்த ஜூலை 27-ம் தேதி சி.எம் ஆபீஸ்ல இருந்து போன் வந்தது. அம்மா உங்களை உடனே வரச்சொன்னதா சொன்னாங்க. நான் கொஞ்சமும் யோசிக்காமல் போய் நின்னேன். பொதுவாகவே நானும், அவங்களும்தான் தனியாகத்தான் பேசிப்போம். ஆனா, அன்றைக்கு, எல்லா அதிகாரிகளும், இருந்தாங்க. அவங்க முன்னாடி, 'எப்படி இருக்கீங்க' என கேட்டார். நான் பதில் சொல்லிவிட்டு, 'நவம்பர் மாதத்தோடு என்னோட டர்ன் முடியுது' என சொன்னேன். இதற்கு அவர், எல்லோருடைய முன்னிலையிலும், அடுத்த மூன்று வருஷத்துக்கும் நீங்களே துணை வேந்தரா இருங்க என சொல்லிவிட்டு, அவருக்கு பின்னால் இருக்கும் எல்லோரையும் பார்த்து மறுபடியும்  இதையே சொன்னார். அப்போதுதான் அவர்கிட்ட, 'நான் உங்களை சந்திக்க இரண்டு வருஷமாக முயற்சி செய்துட்டு இருந்தேன். இந்த கொலை மிரட்டல் காரணமாகத்தான் உங்களை சந்திக்கிற வாய்ப்பு கிடைச்சிருக்கு, நான் தனி மனுஷியாக இசை பல்கலைக்கழகத்தை நடத்தி வருகிறேன்' என சொன்னேன். உடனே, சம்பந்தப்பட்டவர்களை அழைத்து, அவங்களுக்குத் தேவையான எல்லா உதவிகளையும் செய்து கொடுங்க என சொன்னார்.  'அடுத்த முறைப் பார்க்கும்போது உங்க முகத்துல சிரிப்பை மட்டும் தான் பார்க்கணும்' என ஆறுதல் சொன்னாங்க. அந்த வார்த்தை இன்னும் என் காதில் கேட்டுட்டே இருக்கு. அதுதான் நான் அவங்களை கடைசியாகப் பார்த்தது.  அதற்குப் பிறகு அவரை பார்க்க முடியவில்லை. அவர் சொன்னது போல அதற்கான வேலைகள் நடந்து கொண்டிருக்கும்போதே அம்மா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுட்டாங்க. நான் இப்போ அடுத்த ஆர்டருக்காக காத்திட்டு இருக்கேன். இன்னும் ஆர்டர் என் கைக்கு வரவில்லை''

MUST READ