Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

துணிச்சல் ஐபிஎஸ் அதிகாரி தற்கொலை செய்வாரா? அணி வகுக்கும் சந்தேகங்கள்

ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் பணியாற்றி வந்த தமிழக ஐ.பி.எஸ். அதிகாரி, துப்பாக்கிக் குண்டு பாய்ந்த நிலையில் மர்மமான முறையில் வீட்டில் இறந்து கிடந்தார். கஞ்சா கடத்தல்காரர்களுக்கு சிம்ம சொப்பனமாக இருந்த இவரின் தற்கொலையில் மர்மம் இருப்பதாக சந்தேகம் எழுந்துள்ளது.

ஈரோடு மாவட்டம்,சத்தியமங்கலம் ரெங்கசமுத்திரத்தை சேர்ந்தவர் சசிகுமார் (29). ஐ.பி.எஸ். அதிகாரியான இவர், கடந்த 2012ல் ஆந்திராவின் கர்னூல் மாவட்டத்துக்கு உட்பட்ட அலகட்டா பகுதியில் பணி நியமனம் பெற்றார். பின்னர் விசாகப்பட்டினம் மாவட்டத்துக்கு உட்பட்ட பாடேறு பகுதியின் ஏ.எஸ்.பி.யாக கடந்த 6 மாதங்களுக்கு முன் பணியமர்த்தப்பட்டார். பாடேறு பகுதியில் ஒதுக்கப்பட்டிருந்த அரசு குடியிருப்பில் இவர் தங்கிஇருந்தார். நேற்று அதிகாலை 6 மணியளவில் சசிகுமார் தனது பணிக்கான துப்பாக்கியை எடுத்து துடைத்துக்கொண்டிருந்ததாக தெரிகிறது. அப்போது திடீரென அங்கு துப்பாக்கி வெடிக்கும் சத்தம் கேட்டுள்ளது. இந்த சத்தத்தை கேட்டு குடியிருப்பு பாதுகாவலர்கள் சசிகுமாரின் அறைக்கு ஓடிச்சென்று பார்த்துள்ளனர். அப்போது படுக்கையறையில் தலையில் குண்டுபாய்ந்த நிலையில் சசிகுமார் ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்தார்.

இது குறித்து தகவல் அறிந்ததும் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த விசாகப்பட்டினம் ஏஎஸ்பி ராகுல் தேவ் சர்மா மற்றும் உயர் அதிகாரிகள் விசாரணை நடத்தினர். வீட்டில் சசிகுமார் மட்டுமே இருந்ததாக தெரிகிறது. அவர் தன்னைத்தானே துப்பாக்கியால் சுட்டுக்கொண்டு தற்கொலை செய்தாரா? அல்லது எதிர்பாராதவிதமாக துப்பாக்கி வெடித்ததா? என காவல்துறையினரின் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதனிடையே, சம்பவத்தின் போது 3 முறை துப்பாக்கி வெடிக்கும் சத்தம் கேட்டதாக அங்கிருந்த பாதுகாவலர்கள் கூறியுள்ளனர். எனவே இதில் வேறு ஏதேனும் மர்மம் உள்ளதா? எனவும் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இளம் அதிகாரியான சசிகுமார், பாடேறு மண்டலத்தில் கொடிகட்டி பறந்து வந்த கஞ்சா சாகுபடி மற்றும் கடத்தலுக்கு எதிராக கடும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தவர். கஞ்சா போன்ற போதைப்பொருட்களுக்கு எதிராக இவர் மேற்கொண்டு வந்த அதிரடி சோதனைகளால் கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டதுடன், கஞ்சா கடத்தலும் ஒழிக்கப்பட்டது. இதனால் பல்வேறு நிலைகளில் இருந்து அவருக்கு நெருக்கடிகள் வந்ததாக கூறப்படுகிறது. எனினும் அவர் துணிச்சலுடன் பணியாற்றி வந்தார்.

ஐ.பி.எஸ். அதிகாரி சசிகுமாரின் தந்தை குப்புசாமி நிதி நிறுவனம் நடத்தி வருகிறார். தாய் மயிலாத்தாள். சசிகுமாரின் தங்கை கவிதாவுக்கு திருமணம் ஆகி சென்னையில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். சத்தியமங்கலத்தில் பள்ளிப்படிப்பை முடித்த சசிகுமார், சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் பி.இ. எலக்ட்ரானிக்ஸ் கம்யூனிகேசன் படித்தார். அப்போதே அவர் கலெக்டராக வேண்டும் என்ற லட்சியத்துடன் ஐ.ஏ.எஸ். தேர்வுக்கு தயாரானார். எனினும் ஐ.பி.எஸ். தேர்ச்சி பெற்று போலீஸ் அதிகாரியானார்.

இவருக்கும், பெங்களூரை சேர்ந்த ஒரு பெண்ணுக்கும் கடந்த மாதம் திருமண நிச்சயதார்த்தம் நடந்தது. வரும் செப்டம்பர் 4ம் தேதி திருமணம் நடத்துவது என முடிவு செய்யப்பட்டது. இதற்கான பணிகள் அனைத்தும் மும்முரமாக நடந்து வந்தன. விரைவில் திருமணம் நடக்க இருந்த நிலையில் திடீரென சசிகுமார் இறந்த செய்தி அவரது பெற்றோர் மற்றும் உறவினர்களை கடும் அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது. தகவல் அறிந்ததும் சசிகுமாரின் பெற்றோரும், உறவினர்களும் விசாகப்பட்டினத்துக்கு விரைந்தனர்.

எடிட்டர் சாய்ஸ்

MUST READ