Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

தமிழக ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் மாற்றம்...பரபர பின்னணி!

ஜூன் 16-ம் தேதியன்று தமிழக அரசின் ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் 19 பேர் மாற்றப்பட்டு உள்ளனர். புதிய பதவிகளில் நியமிக்கப்பட்டவர் களில் 12 பேர்களுக்கு கூடுதல் துறைகள் தற்காலிகமாக ஒதுக்கப்பட்டுள்ளன.

தலைமைச் செயலகத்தின் மிக முக்கிய துறையான பொதுத்துறையின் செயலாளராக இருந்த ஜிதேந்திர நாத் ஸ்வைன்,  சில நாட்களுக்கு முன்பு, திடீரென தூக்கியடிக்கப் பட்டார். அந்த பதவியில் யார் அமரப்போகிறார் என்கிற சஸ்பென்ஸ் அதிகாரிகள் மத்தியில் நிலவிவந்தது.  தற்போது வெளியான மாறுதல் லிஸ்டிலும்,  யாரையும் அரசு ஏனோ நியமிக்கவில்லை. முதல்வரின் இரண்டாவது செயலாளர் சிவதாஸ் மீனா, பொதுத்துறையை கூடுதலாக கவனிக்கப்போகிறார்.

ஸ்வைன்...தூக்கியடிக்கப்பட்டது ஏன்?

பொதுத்துறை மூலம் ஒவ்வொரு அமைச்சருக்கும் ஒரு ஸ்பெஷல் பி.ஏ.,  ஒரு சீனியர் பி.ஏ. , இரண்டு ஜூனியர் பி.ஏ-க்கள், இரண்டு அலுவலக உதவியாளர்கள்...என்று அரசு தரப்பில் தரப்படுவது வழக்கம். எப்போது தேர்தல் நடந்தாலும், தலைமைச் செயலகத்தில் உள்ள அதிகாரிகளுக்கு மட்டும் பிரத்யேகமாக பி.ஏ-வாக பணிபுரியும் வாய்ப்பு கிடைக்கும். தலைமைச் செயலகத்துக்கு வெளியே இயங்கும் அரசுத்துறை அதிகாரிகளுக்கு அந்த வாய்ப்பு கிடைக்காது. 

இந்த வகையில், தற்போதைய அ.தி.மு.கழக அரசு பதவி ஏற்ற சமயத்தில், அமைச்சர்களுக்கான புதிய பி.ஏ-க்களை நியமிக்கும் பணியில் இறங்கினார் ஸ்வைன்.  கடந்த ஆட்சியில் அமைச்சர்களிடம் பணிபுரிந்த பி.ஏ.-க்கள் பலரும் இந்த முறையும் வாய்ப்பை எதிர்பார்க்க...அவர்களுக்கு கறாராக 'நோ' சொல்லிவிட்டார் ஸ்வைன்.

இதுபற்றி தலைமைச் செயலக உயர் அதிகாரி ஒருவர் கூறும்போது, '' கடந்த அ.தி.மு.கழக அரசில் பி.ஏ-க்களாக இருந்தவர்களில் யார் மீது புகார்கள் அதிகமாக இருந்ததோ...அவர்களை  தற்போதைய புதிய அமைச்சர்களிடம் பணிபுரிய ஸ்வைன் விடவில்லை. அவர்களை புறக்கணித்தார். முதல்வர் அலுவலகத்தில் கடந்த முறை வேலை பார்த்த சில ஊழியர்களையும் புகார் அடிப்படையில் பரிசீலித்து தற்போது கழற்றிவிட்டார். இதுதான் நடந்தது.

பி.ஏ-வாக பணிபுரிய வாய்ப்புக் கிடைக்காத பழம்பெருச்சாளிகள் கூடிப் பேசி ஒரு சிண்டிகேட் அமைத்து, 'தி.மு.கழக ஆதரவு ஆட்களை பி.ஏ-க்களாக ஸ்வைன் போட்டுவிட்டார்' என்று ஆட்சி மேலிடத்திடம் பற்றவைத்தனர். இப்படியிருக்க...புது அரசு பதவி ஏற்பு, பி.ஏ க்கள் நியமனம் என்று பிஸியாக இருந்தார் ஸ்வைன். இந்த வேலைகளில் படு பிஸியாக இருந்ததால், தன் சொந்த மாநிலமான ஒடிசாவில் உடல்நிலை பாதிக்கப்பட்டு இருந்த தனது தந்தையை, கடைசி காலத்தில் நலம் விசாரிக்கக்கூட இவர் போகவில்லை.

மகன் வருவார் என்று காத்திருந்த அந்த பெரியவர், ஸ்வைனை பார்க்காமலே உயிரை விட்டுவிட்டார். இந்த தகவல் கிடைத்ததும், பதறியடித்துக்கொண்டு ஸ்வைன், ஒடிசாவுக்கு ஒடினார். அவர் அங்கிருந்த சமயத்தில்தான், பொதுத்துறைச் செயலாளர் பதவியில் இருந்து அவரை தமிழக அரசு தூக்கியடித்த செய்தி இடியென அவரை தாக்கியது'' என்றார்.

ஸ்வைன் போட்ட பி.ஏ -க்களில் 90% சதவீதம் பேர்களை அவரவர் துறைக்கே திருப்பி அனுப்பி விட்டனர். கடந்த திங்களன்று முதல்வர் அலுவலக அதிகாரிகளே புது பி.ஏ-க்கள் லிஸ்டை தயாரித்து அனுப்பினார்கள். அதன்படித்தான், புதியவர்கள் அமைச்சர்களிடம் பி.ஏ -க்களாக சேர்ந்துள்ளனர்.  இவர்கள் அ.தி.மு.கழக அனுதாபிகளா என்று பூதக்கண்ணாடி வைத்து பார்த்துத்தான் பி.ஏ-க்களாக நியமிக்கப்பட்டிருப்பதாக சொல்கிறார்கள்.

ராஜசேகர் யார் சாய்ஸ்?

அடுத்த சில மாதங்களில் உள்ளாட்சித்தேர்தல் வரப்போகிறது. அந்த தேர்தலை நடத்த இருக்கும் மாநில தேர்தல் ஆணையத்தின் செயலாளர் பதவியில் ஏற்கனவே ஜோதி நிர்மலாசாமி இருந்தார். அவரை மாற்றிவிட்டு, பட்டுக்கோட்டையில் சப்-கலெக்டராக இருந்த ராஜசேகர் என்பவரை ஆணையத்தின் செயலாளர் பதவியில் நியமித்திருக்கிறார்கள். முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கத்தின் ஆசி பெற்றவர் இவர் என்கிறார்கள்.

2001 - 2006 காலகட்டத்தில், ஒரத்தநாடு வைத்திலிங்கம் ஊரக வளர்ச்சித்துறை அமைச்சராக இருந்தபோது, அந்த துறையில் சென்னையில் அதிகாரியாக பதவி வகித்து வந்துள்ளார்.

தேர்தலுக்கு இரண்டு மாதத்திற்கு முன்புதான், தஞ்சை மாவட்டம்  பட்டுக்கோட்டைக்கு சப்-கலெக்டராக பொறுப்பேற்றார். பின்னர், தேர்தல் நேரத்தில்  பட்டுக்கோட்டை, பேராவூரணி தொகுதி தேர்தல் அதிகாரியாக பணியாற்றினார். ஆளுங்கட்சியினர் தேர்தலில் வாக்காளர்களுக்கு பணம் வினியோகம் செய்ததாக எதிர்கட்சியினர் பலமுறை ராஜசேகரிடம் புகார் கொடுத்தும் அதுதொடர்பாக எந்த வழக்கையும் அவர் பதிவு செய்யவில்லை. இந்நிலையில்தான் பட்டுக்கோட்டை, பேராவூரணி தொகுதியை அதிமுக கைப்பற்றியது குறிப்பிடத்தக்கது. வருகிற உள்ளாட்சி தேர்தலில் ஆளுங்கட்சிக்கு ஆதரவாக செயல்படவேண்டும் என்கிற அசைன்மென்டுடன்தான் ராஜசேகரை இப்போது மாநில தேர்தல் ஆணையத்தின் செயலாளராக நியமித்திருக்கிறார்கள் என்கிறார்கள்.

டம்மி ஆக்கப்பட்ட உதயசந்திரன்!

தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறையின் செயலாளராக இருந்த உதயசந்திரன் கூடுதலாக ஐந்து துறைகளை கவனித்துவந்தார். சில விஷயங்களில் இவர் மேலிடத்துடன் ஒத்துப்போகவில்லை. அதனால், தற்போது உப்பு சப்பில்லாத தமிழ்நாடு உப்பு கழக நிர்வாக இயக்குனராக நியமிக்கப்பட்டிருக்கிறார்.

அரசுத்துறைகளில் 'பசை' உள்ள துறையான பொதுப்பணித்துறையின் முதன்மை செயலாளராக பிரபாகர் நியமிக்கப்பட்டிருக்கிறார். இவர் முன்பு, வணிக வரித்துறையின் கமிஷனராக பணிபுரிந்தவர். பொதுப்பணித்துறையின் அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியின் சாய்ஸ் இவர் என்கிறது தலைமைச் செயலக வட்டாரம்.

- ஆர்.பி., ஏ. ராம்

எடிட்டர் சாய்ஸ்