Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

'ஸ்டாலின் கொடுத்த பட்டியலில் கருணாநிதி பெயர் இல்லை!' -கொளுத்திப் போட்ட ஓ.பி.எஸ்; கொந்தளிக்கும் தி.மு.க.

'சட்டசபையில் தி.மு.க தலைவர் கருணாநிதிக்கு சிறப்பு இருக்கை ஒதுக்கீடு செய்யப்பட வேண்டும்' என சட்டசபை எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் நேற்று பேரவைத் தலைவரிடம் வலியுறுத்தினார். ஆனால், நிதி அமைச்சர் ஓ.பன்னீர்செல்வமோ, ' சபைக்கு கருணாநிதி வருவதை ஸ்டாலின் விரும்பவில்லை. குடும்பச் சண்டையை மறைக்க பேரவைத் தலைவர் மீது குற்றம் சுமத்துகிறார்' என அதிரடியாக அறிக்கை வெளியிட்டுள்ளார்.

சட்டமன்றக் கூட்டத் தொடர் நேற்று முடிவடைந்ததும், பேரவைத் தலைவரைச் சந்தித்த தி.மு.க எம்.எல்.ஏக்கள், ' பேரவையில் தி.மு.க தலைவர் கருணாநிதிக்கு ஒதுக்கப்பட்ட இருக்கை போதுமானதாக இல்லை. அவை நடவடிக்கையில் பங்கேற்கும் வகையில், கலைஞருக்கு இருக்கை ஒதுக்கீடு செய்யப்பட வேண்டும்' என வலியுறுத்தினர். இதுதொடர்பாக, அறிக்கை வெளியிட்ட நிதி அமைச்சரும், அவை முன்னவருமான ஓ.பன்னீர்செல்வம், ' கடந்த 25-ம் தேதி சட்டப் பேரவைக்கு சக்கர நாற்காலியில் வந்து உறுதிமொழி எடுத்துக் கொண்டார் கருணாநிதி. அப்போது இருக்கை எண் 207-க்கு முன்புறம் அமர்ந்தபடியே உறுதிமொழி எடுத்தார்.

அதைக் கருத்தில் கொண்டே அந்த இடம் கருணாநிதிக்கு ஒதுக்கப்பட்டது. பேரவைக்கு வந்து விவாதங்களில் பங்கேற்க வேண்டுமெனில், அவர் எவ்வாறு உறுதிமொழி எடுத்துக் கொண்டாரோ, அதுபோன்றுதான் கலந்து கொள்ள முடியும். தி.மு.க உறுப்பினர்களுக்கு எந்தெந்த இடங்களில் இருக்கை ஒதுக்க வேண்டுமென்று ஸ்டாலின் பட்டியல் அளித்திருந்தார். அதில், கருணாநிதியின் பெயர் இல்லவே இல்லை. சட்டப்பேரவைக்கு கருணாநிதி வருவதை ஸ்டாலின் விரும்பவில்லை என்பது தெளிவாகிறது. கருணாநிதி குடும்பத்திற்குள் இருக்கும் பிரச்னைகளை மறைப்பதற்காக, பேரவைத் தலைவர் மீது பொய்யான குற்றச்சாட்டுகளைக் கூறுகிறார் ஸ்டாலின்' எனக் குறிப்பிட்டிருந்தார்.

அவை முன்னவரின் இந்தத் தாக்குதலை தி.மு.க தரப்பு எதிர்பார்க்கவில்லை. அதிலும், பேரவைக்கு கருணாநிதி வருவதை ஸ்டாலின் விரும்பவில்லை என்ற வார்த்தைகள் அரசியல் அரங்கில் அதிர்வலைகளைக் கிளப்பிவிட்டது. 'அவை முன்னவரின் கருத்து உண்மைதானா?' என்ற கேள்வியை, தி.மு.க. எம்.எல்.ஏ கோவி.செழியனிடம் கேட்டோம். " பேரவைத் தலைவரிடம் கொடுக்கப்பட்ட எம்.எல்.ஏக்கள் பட்டியலில் தலைவர் கலைஞரின் பெயரும் இருக்கிறது. ' பட்டியலில் பெயர் இல்லை' என்று ஓ.பி.எஸ் சொல்வது அப்பட்டமான பொய்.

எங்கள் கட்சியின் சார்பில் வென்ற அனைத்து எம்.எல்.ஏக்களின் பெயரையும் குறிப்பிட்டு மனு கொடுக்கும்போது, தலைவரின் பெயர் எப்படி விடுபடும்? அப்படியானால், திருவாரூருக்கு ஒரு சட்டமன்ற உறுப்பினர் இருப்பதை ஓ.பி.எஸ் மறைக்கிறாரா? இருக்கை ஒதுக்கீடு செய்வது தொடர்பாக பேரவைத் தலைவரைச் சந்தித்து மனு கொடுத்தோம். அவர் எங்களிடம், ' ஏற்கெனவே இருக்கை தொடர்பாக நீங்கள் அளித்த மனுவை பரிசீலித்தேன். இப்போது மீண்டும் பரிசீலிக்கிறேன்' எனக் கூறினார். நிலைமை இப்படி இருக்க, பட்டியலில் கலைஞர் பெயர் இல்லை என்று சொல்வதன் மூலம், சிண்டு முடியும் வேலையில் ஈடுபடுகிறார் ஓ.பி.எஸ். இதனை வன்மையாகக் கண்டிக்கிறோம்" என்றார் கொந்தளிப்போடு.

'அவை நடவடிக்கையில் பங்கேற்று விவாதத்தில் பேசுவதற்கு தி.மு.க தலைவர் கருணாநிதி உறுதியாக இருக்கிறார். அதற்குள், இருக்கையை முன்வைத்து இன்னும் எவ்வளவு சர்சைகள் வரப் போகிறதோ?' என ஆதங்கப்படுகிறார்கள் அறிவாலயத்தில்.

ஆ.விஜயானந்த்
 

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close