Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

அ.தி.மு.க, தி.மு.கவை வீழ்த்திய மார்க்சிஸ்ட்டுகள்! -நெகிழ வைத்த நெய்வேலி

நெய்வேலி நிலக்கரி தொழிலாளர் சங்கத் தேர்தலில் முதன்மைச் சங்கமாக உருவெடுத்திருக்கிறது சி.பி.எம் கட்சியின் அங்கமான சி.ஐ.டி.யூ. ' தொழிலாளர் உரிமைகளுக்கு சமரசம் இல்லாமல் போராட்டத்தை முன்னெடுத்ததன் பயனாக, இந்த அங்கீகாரம் கிடைத்திருக்கிறது' என நெகிழ்கிறார் சி.பி.எம் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன்.

நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தில் பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணிபுரிகின்றனர். இவர்களின் கோரிக்கைகள், ஊதியம் தொடர்பாக நடக்கும் பேச்சுவார்த்தைகளில் தி.மு.கவின் தொ.மு.ச, அ.தி.மு.கவின் அண்ணா தொழிற்சங்கம், பாட்டாளி தொழிற்சங்கம் ஆகியவை பங்கேற்றுப் பேசி வந்தன. இந்நிலையில், ஊழியர் சங்கத் தேர்தலில் 51 சதவீத வாக்குகளை வாங்கும் தொழிற்சங்கங்களுக்கே பேச்சுவார்த்தையில் பங்கேற்க அனுமதி என அறிவித்தது என்.எல்.சி நிர்வாகம். நேற்று நடந்த தொழிற்சங்க தேர்தலில் 4,828 வாக்குகளைப் பெற்று முதன்மைச் சங்கமாக உருவெடுத்திருக்கிறது சி.ஐ.டி.யூ. இதற்கு அடுத்தபடியாக தி.மு.கவின் தொ.மு.சங்கம் 2,426 வாக்குகளைப் பெற்றிருக்கிறது. இந்த இரண்டு சங்கங்களின் வாக்கு சதவீதத்தைக் கூட்டினால் 51 சதவீதத்திற்கு மேல் வருகிறது. எனவே, இவ்விரு சங்கங்களும் அங்கீகரிக்கப்பட்ட பட்டியலுக்குள் வந்துவிட்டன. இனி வரும் காலங்களில், சி.ஐ.டி.யூ மற்றும் தொ.மு.ச ஆகியவை மட்டுமே பேச்சுவார்த்தையில் பங்கேற்க முடியும் என்ற நிலை ஏற்பட்டிருக்கிறது.

' இந்த வெற்றி எப்படி சாத்தியமானது?' என்ற கேள்வியை சி.பி.எம் கட்சியின் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணனிடம் கேட்டோம். "தொழிற்சங்க அங்கீகாரத்திற்கு நான்கு முறை ரகசிய வாக்கெடுப்புகள் நடந்தன. இறுதியில், எங்கள் சங்கம் முதன்மை சங்கமாக உருவெடுத்திருக்கிறது. கடந்த காலங்களில் தி.மு.க, அ.தி.மு.க தொழிற்சங்கங்கள், பேச்சுவார்த்தைகளின் போது தொழிலாளர்களின் உரிமைகளை விட்டுக் கொடுத்துவிட்டனர். ஆனால், எந்த இடத்திலும் சமரசத்திற்கு இடம் கொடுக்காமல் போராடி வந்தோம். தேர்தலில் வாக்குகளைப் பெற வேண்டும் என்பதற்காக தி.மு.க.வும் அ.தி.மு.க.வும் ஓட்டுக்கு நான்காயிரம் ரூபாய் வரையில் கொடுத்தார்கள். பணத்தை வாரியிறைத்தும் அவர்களால் வெற்றிபெற முடியவில்லை" என்றவர்,

"1954-ம் ஆண்டு என்.எல்.சி உருவானது. அதன்பிறகு அந்த நிறுவனத்தை மூடுவதற்கு ஒருமுறை முயற்சித்தார்கள். இதை முறியடித்து சட்டமன்றத்தில் பி.ராமமூர்த்தி குரல் கொடுத்தார். நாடாளுமன்றத்தில் எங்கள் கட்சியின் அனந்த நம்பியார் குரல் கொடுத்தார். எனவே, தொழிலாளர்களின் உரிமைகளை மீட்டெடுப்பது மட்டுமல்ல, தொழிற்சாலையை மீட்டெடுப்பதிலும் நாங்கள் தீவிரமான போராட்டங்களை முன்னெடுத்தோம். எந்த இடத்திலும் சமரசத்திற்கு இடம் கொடுக்காமல், உரிமைகளுக்காகப் போராடினால் வெற்றி கிடைக்கும் என்பதை என்.எல்.சி தேர்தல் உறுதிப்படுத்தியிருக்கிறது" என்றார் உற்சாகத்தோடு.

தொழிற்சங்க உரிமைக்கான போட்டியில் சி.ஐ.டி.யூ பெற்ற வெற்றியை ஆர்ப்பரிப்போடு கொண்டாடுகிறார்கள் என்.எல்.சி தொழிலாளர்கள். 'வரும் காலங்களில் தொழிலாளர்களின் உரிமைகளை மீட்டெடுக்கப் போகும் மிக முக்கியமான வெற்றி இது' என்கின்றனர்.

ஆ.விஜயானந்த்

 

எடிட்டர் சாய்ஸ்