Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

களவு போனதா ரூ.1 லட்சம் கோடி தங்க, வைர நகைகள்? -போலிக் கற்கள் பதியப்பட்ட அவலம்

மிழக கோயில்களில் களவு போன சாமி நகைகளைக் கணக்கெடுக்கும் பணிகள் விரைவாக நடக்க வேண்டும் என வலியுறுத்துகின்றனர் பக்தர்கள். ' கடந்த ஐம்பது ஆண்டுகளில் பல்லாயிரம் கோடி மதிப்பிலான நகைகள் திருடு போய்விட்டதாகவும்' அவர்கள் வேதனைப்படுகின்றனர்.

இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் மாநிலம் முழுவதும் 36,488 கோயில்கள் உள்ளன. இவற்றோடு 56 திருமடங்கள் மற்றும் அதனுடன் இணைந்த ஐம்பத்தெட்டு கோயில்கள் உள்ளன. கோயில்களுக்கு என ஒப்படைக்கப்பட்ட நிலங்கள் மட்டும் ஐந்து லட்சம் ஏக்கருக்கும் மேல் உள்ளன. இந்த நிலங்களின் இன்றைய மதிப்பு பல்லாயிரம் கோடிகளைத் தாண்டும். இந்நிலங்களில் விவசாயம், வணிகக் கடைகள், குடியிருப்புகள் என வருடத்திற்கு கணிசமான வருவாய் வருகிறது. இதுதவிர, "பல நூறு ஆண்டுகளுக்கு முன்னாள் கடவுள்களுக்கு என அணிவிக்கப்பட்ட  நகைகளில் பெரும்பாலானவற்றைக் காணவில்லை. இந்த நகைகள் களவு போனதில் கோயில் நிர்வாகிகளுக்கும் அதிகாரிகளுக்கும் சமபங்கு இருக்கிறது" என அதிர வைத்தார் ராமேஸ்வரம் கோயில் நிர்வாகி ஒருவர்.

அவர் நம்மிடம், "கடந்த பிப்ரவரி மாதம் சென்னை உயர் நீதிமன்றத்தில் கோவில் நகைகள் குறித்த வழக்கு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. இதில், ராமேஸ்வரம் கோயிலுக்குச் சொந்தமான சுவாமி நகைகளில் 138 நகைகள் காணாமல் போய்விட்டன. குறிப்பாக, பர்வத வர்த்தினி அம்மனுக்கு சாத்தப்பட்ட 13 வைர நகைகள் எங்கே போனது என்றே தெரியவில்லை. இதுதவிர, தமிழகத்தில் உள்ள புகழ்பெற்ற ஸ்தலங்களில் உள்ள தங்க, வைர நகைகள் திருடு போயுள்ளன. இந்த நகைகளுக்குப் பதிலாக போலியான நகைகள் வைக்கப்பட்டுள்ளன. இவற்றின் மீது இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகளே தணிக்கை செய்வதால், உண்மை வெளியில் வருவதில்லை.

1970-ம் ஆண்டின் ஆவணப்படி, ராமேஸ்வரத்தில் களவு போன தங்க, வைர நகைகளின் அன்றைய சந்தை மதிப்பே 15 கோடி ரூபாய் என்கின்றனர். இவற்றின் இன்றைய மதிப்பு அளவிட முடியாதது. இதுதவிர, மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் 4 டன் தங்கம் இருந்தது. இதில், பெரும்பாலான நகைகள் களவு போய்விட்டன என்கின்றனர். குறிப்பாக, கோயில்களில் பெண் கடவுள்களுக்கு சாத்தப்பட்ட நகைகளில், வைரத்தை எடுத்துவிட்டு போலியான கற்கள் பொருத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளன. இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் வரும் அனைத்துக் கோயில்களிலும் இதுதான் நடக்கிறது.

 

ராமேஸ்வரம் கோயிலின் சொத்துக்கள் அனைத்தும் பதிவேடு 29 என்ற தலைப்பில் பராமரிக்கப்படுகின்றன. 1960-ம் ஆண்டு கோயிலின் சொத்துக்கள் குறித்து விரிவாக ஆவணப்படுத்தியுள்ளனர். இவற்றையும் தற்போதுள்ள கோயில் சொத்துக்களையும் தணிக்கை செய்தாலே போதும். மொத்த ஊழலும் அம்பலமாகும். கோயில்களின் வரவு செலவுகளைத் தணிக்கை செய்யும் பொறுப்பு, இந்து சமய அறநிலையத்துறையின் ஆடிட் துறைக்கே வழங்கப்படுகிறது. திருடன் கையிலேயே சாவியைக் கொடுத்தது போல இவர்கள் செயல்படுகின்றனர். தணிக்கை ஆய்வாளர்களில் சில நேர்மையான அதிகாரிகளும் இருக்கின்றனர். கோயில் ஊழல் பற்றி இவர்கள் புகார் எழுப்பினால், சஸ்பெண்ட், ட்ரான்ஸ்பர் என மேல் அதிகாரிகளால் பழிவாங்கப்படுகின்றனர்.

சென்னை, தணிக்கைத் துறையில் பணிபுரியும் முக்கிய அதிகாரியின் வேலையே, ஆவணங்களைத் திருத்துவது, போலியான பில்கள் மூலம் கோயில் பணத்தைச் சுருட்டுவது, உண்டியல் வருமானத்தில் கை வைப்பது போன்றவைதான். தஞ்சை உப்பிலியப்பன் கோயிலில் கிலோ கணக்கில் தங்கத்தை மோசடி செய்ததாகக்கூறி, அறநிலையத்துறையின் உயர் அதிகாரி மீதே நடவடிக்கை எடுக்கப்பட்டது. வெளியில் தெரியாமல் பல்லாயிரம் கோடி மதிப்பிலான கோயில் நகைகள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளன. இவற்றின் மீது மத்திய தணிக்கைத் துறை அதிகாரிகள் ஆய்வு நடத்தினால், முழு உண்மைகளும் அம்பலமாகும்" என்றார் அதிர்ச்சி விலகாமல்.

தேசத்தின் சொத்துக்களாக கோயில்கள் பார்க்கப்படுகின்றன. இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் செயலர், ஆணையர், மண்டல இணை ஆணையர்கள், 70 துணை ஆணையர்கள், 100 உதவி ஆணையர்கள் என பெரும்படையே உண்டியல் வருமானத்தில் வேலை பார்க்கிறது. அதிலும், ' கொள்ளையடிக்க வழிதேடும் அதிகாரிகளை எந்தப் பட்டியலில் சேர்ப்பது?' என வேதனைப்படுகின்றனர் பக்தர்கள்.

ஆ.விஜயானந்த்
 

எடிட்டர் சாய்ஸ்

MUST READ