Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

'வெற்றி வாய்ப்பு பறிபோனது, பிராப்தி..!' -தோல்வியைக் கலாய்த்த தி.மு.க முன்னாள் எம்.எல்.ஏ.

 தி.மு.க முன்னாள் எம்.எல்.ஏ எஸ்.எஸ்.சிவசங்கர் நுட்பமாக எழுதுவதில் கை தேர்ந்தவர். சமூக வலைத்தளங்களில் அவர் பதிவு செய்யும் கருத்துக்களுக்கு என தனி ரசிகர் கூட்டமே உண்டு. சட்டமன்றத் தேர்தலில் அரியலூர் தொகுதியில் தோல்வி அடைந்தது பற்றி வரலாற்றுப் பார்வையோடு மிகுந்த நகைச்சுவையோடு தனது கருத்துக்களை அப்டேட் செய்திருந்தார்.

சிவசங்கரின் பதிவு இங்கே அப்படியே...!

"நல்லா சேவிச்சுக்குங்கோ. மீனாட்சி சுந்தரேஸ்வர் அருள் பாலிப்பார். இது சோழர்களோட படைத் தளபதிகள் பழவேட்டரையர்களால் கட்டப்பட்ட கோயில். ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தையது" -இந்தக் கோயில் அரியலூர் மாவட்டம், மேலப்பழூர் கிராமத்தில் அமைந்துள்ளது. இது நான் வேட்பாளராக வாக்கு சேகரிக்க சென்ற போது நடைபெற்ற சம்பவம். 

சமீபத்தில் கும்பாபிஷேகம் நடைபெற்றதில் இருந்தே ஊராட்சி செயலாளர் ரவி அழைத்துக் கொண்டிருந்தார். அறநிலையத் துறை மூலம் புனரமைப்பு பணிகள் நடைபெற முந்தைய ஆட்சிக் காலத்தில் பரிந்துரைத்தவன் என்ற முறையில் அழைத்திருந்தார். ஆனால் நேரம் அமையவில்லை. வாக்கு சேகரிக்க சென்ற போது, கோயிலுக்கு அழைத்து சென்றார்.

அரியலூர் மாவட்டம் முழுதும் ராஜேந்திர சோழன் காலத்தில் நிர்மாணிக்கப்பட்ட பகுதி. ஊர் பெயர்களும் வரலாற்றோடு தொடர்புடையதாகத் தான் இருக்கும். எங்கு நோக்கினும் சோழர்காலத்து புராதனக் கோயில்கள் தான். இந்தக் கோயில்களால் மக்களும் பக்தி மயம் தான். மேலப்பழூர் பழவேட்டரையர்களின் தலைநகராக விளங்கிய ஊர் அருகில் உள்ள ஊர் மலத்தான்குளம். இங்கு உள்ள பெரியகுளம், மலத்தான் என்ற சோழ தளபதியால் வெட்டப்பட்டதாக வரலாறு. அடுத்து உள்ள 'அயன்சுத்தமல்லி' கிராமம் சோழ அரசி 'சுத்தமல்லி' பெயரால் ஏற்படுத்தப்பட்டதாகும். இங்கும் ஒரு புராதனக் கோயில் உள்ளது. இந்த சோழர்காலத்து கோயில்கள் மாத்திரமல்லாமல் ஊருக்கு ஊர் தற்காலக் கோயில்களும், குல தெய்வக் கோயில்களும் நிரம்ப உண்டு. இப்போதும் புதிதாகக் கோயில்கள் கட்டப்படுகின்றன. இந்தக் கோயில்களில் திருவிழாக்கள், நாடகங்கள் என இன்னும் அரியலூர் தொகுதி பழமை இழையோடவே இருக்கிறது.

நாடகங்கள் என்றால் மூன்று நாட்கள் விமர்சையாக நடக்கும். ஊர் கூடி நடத்துவார்கள். வீட்டுக்கு வீடு உறவினர்களை அழைத்து கொண்டாடுவார்கள். அனைத்துக் கட்சியை சேர்ந்தவர்கள் பெயரும் அழைப்பிதழில் அச்சிடப்படும். ஒவ்வொரு கட்சியை சேர்ந்தவர்களும் தங்கள் கட்சியை சேர்ந்தவரை நாடகத்திற்கு அழைத்து சிறப்பிப்பார்கள். இறை மறுப்புக் கொள்கையாளன் என்றாலும் பொதுமக்கள் அழைக்கும் போது, பொதுவாழ்க்கையில் இருப்பதால் கோயில்களுக்கு சென்று தான் ஆக வேண்டும். பூசை, படையல் நடக்கும்.

விபூதி, குங்குமம் வழங்கப்படும். பரிவட்டம் கட்டப்படும். கும்ப மரியாதை கொடுக்கப்படும். அவற்றை ஏற்றுக் கொண்டு தோழர்களையும், மக்களையும் மதிக்க வேண்டும். ஒவ்வொரு ஊரிலும் கோயிலுக்கு அழைத்துச் செல்லப்பட்டேன். மாரியம்மன், பிள்ளையார், முருகன், சிவன், பெருமாள், வீரனார், கருப்புசாமி கோயில்கள் என எங்கும் விட்டு வைக்கவில்லை. சர்ச், பள்ளிவாசலும் பாக்கி இல்லை.

திருமானூர் ஒன்றியம் பெரியமறை கிராமத்திற்கு சென்றோம். இங்குள்ள சீனிவாசப் பெருமாள் கோயில் பிரசித்தி பெற்றது. கோயிலின் பழைய தர்மகர்த்தா தயாராக இருந்தார். கோயில் பட்டரையும் தயாராக வைத்திருந்தார். பட்டர் மந்திரங்களை ஓதினார். சிலவற்றை தமிழிலும் சொன்னார். கோயிலின் பெருமைகளை சொன்னார். பெருமாள் அருமைகளை விவரித்தார். "சீனிவாசப் பெருமாள் இங்கு தம்பதி சமேதராக காட்சியளிக்கிறார். உடல்நலன் காக்கக் கூடியவர்" , என்றார். அந்த கர்ப்பகிரகம் மிகக் குறுகலானது. காற்றோட்டம் இல்லை. குளித்து வந்தது போல் தலை முதல் பாதம் வரை வியர்வை பெருக்கெடுத்து ஓடியது.

"இந்த வியர்வையிலேயே உடல் நலம் பெற்றிடும் போல", என்றார் ஒன்றிய செயலாளர் அண்ணன் கென்னடி. "இதுவரை பல தொகுதிகளில் இருந்து முப்பதுக்கும் மேற்பட்ட வேட்பாளர்கள் வந்துட்டாங்க", என்றார் பட்டர். "ஆமாம்ணே புகழ் வாய்ந்த கோயில் இது" என்றார் மாவட்ட துணை செயலாளர் தனபால்.

"இந்தப் பட்டர் ஆகமத்தில் பி.எச்டி செய்தவர். பல நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வார்", என்றார் தனபால். பட்டரும் டிரண்டியாக கண்ணாடி அணிந்து ஸ்டைலாக இருந்தார். தலையில் 'ஜடாரி' வைத்தார். துளசி இலைகளை வழங்கினார். தீர்த்தம் அளித்தார். குங்குமம் கொடுத்தார். "ராஜயோகம் பிராப்தி", என்று வாழ்த்தினார்.

தேர்தல் முடிந்து வாக்கு எண்ணப்பட்டது. 2043 வாக்குகளில் வெற்றி வாய்ப்பு பறி போனது. பிராப்தி !

-எஸ்.எஸ்.சிவசங்கர்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close